குரூப் கேப்டன் வருண் சிங் மறைவு!

  • பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண்சிங் படுகாயம் அடைந்தார். 80 சதவீத தீக்காயங்களுடன் அவருக்கு பெங்களூரு கமாண்டோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வருண்சிங் இன்று உயிரிழந்தார். இந்தத் தகவலை விமானப்படை அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது.

இதனால் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த அனைவரும் (14 பேரும்) உயிரிழந்த சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கேப்டன் வருண் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கேப்டன் வருண் சிங் பெருமை, வீரம் மற்றும் மிகுந்த தொழில்முறையுடன் தேசத்திற்கு சேவை செய்தார்.

அவரது மறைவு செய்தி கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். தேசத்திற்கு அவர் ஆற்றிய செழுமையான சேவை என்றும் மறக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தியைக் கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தேன்.

அவரது வீரமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகமாக அமையும் மேலும் அவர் நம் மனதில் என்றும் வாழ்வார்” என தெரிவித்துள்ளார்.

You might also like