நவீன இலக்கியவாதிக்கு…!

*

தெரியும் உனக்கு

நிறைய வார்த்தைகள்.

கைகளை உதறினால் போதும்

எழுத்துக்கள் சிந்திவிடும்.

மூளை மேயப்போவது

பிரபஞ்ச சிந்தனை ரேகையில் தான்.

ஆனாலும் இன்னொரு மூளைக் காரனின்

ஒவ்வொரு புதுக்காலடி கீழும்

ஓடிப் பதறும் உன் மனசு.

மனசின் வக்கிரம்

வேகங் கொள்ளும்

எழுதின விரல்களை முறித்துப் போட.

எதிர்வருகிறவனிடம்

சத்தாய் ஒரு வார்த்தை தெறித்தால்

ஓங்கிச் சம்மட்டியால் அடி.

மூளையில் அடிக்கடி திரளும்

கெட்டி தட்டிய கோழையை

எதிரே வரும்

கசங்கின முகம் பார்த்துத் துப்பு.

“வாழ்க்கை புழுங்கி

இலக்கியம் வியர்க்கலாமா?”

அதுவும் உன்னை விட்டு.

ஆனாலும் வியர்த்த முகம் தடவி

சமயங்களில் அலுத்துக் கொள்வாய்

எழுதாத ஜென்மங்களுக்காக.

என்ன செய்ய முடியும்

உன்னை?-

அதிலும் நவீன இலக்கியவாதியை.

*

மணா-வின்  ‘இன்னொரு விழிப்பு’ கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை.

14.12.2021   2 : 30 P.M

You might also like