நாதஸ்வர வித்வான் ஹீரோவாக நடித்த படம்!

டிஎன்ஆர் என்கிற நாதஸ்வர இசை மேதை, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, உலகம் முழுவதும் பிரபலமானவர். அவர் இசைக்கு அப்படியொரு ரசனை. எங்கும் அவருக்கென இசை ரசிகர்கள் இருந்தார்கள் அப்போது.

நாதஸ்வரக் கலைஞர்கள் நீண்ட தலைமுடியுடன் வலம் வந்த காலத்தில் ’கிராப்’ வைத்துக்கொண்ட முதல் வித்வான் என்கிறார்கள் இவரை.

இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில், வானொலியில் ஒளிப்பரப்பட்ட மங்கள இசை இவருடையதுதான்.

தமிழ் சினிமா ஏராளமான திறமைசாலிகளை தனக்குள் இழுத்திருக்கிறது. இந்த உலகப் புகழ் நாதஸ்வர சக்கரவர்த்தியை மட்டும் விட்டுவிடுமா என்ன?

இவரையும் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்க வைத்திருக்கிறது நம் சினிமா. அந்தப் படம் ’காளமேகம்’. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் காளமேகத்தின் கதைதான் படம்.

கல்வி கற்காமலேயே தெய்வத்தின் அருளால் கவிமழை பொழியத் தொடங்கிய காளமேகமாக இந்தப் படத்தில் நடித்தார் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை.

1940-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கி இருந்தார்.

பந்துலு, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.வி.மணி, டி.ஏ.மதுரம், காளி என்.ரத்னம், பி.எஸ்.ஞானம் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

படத்தின் கதை, உரையாடல், பாடல்களை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். அவருக்கு இது இரண்டாவது படம். இதற்கு முன் ராமானுஜர் என்ற படத்தில் பணியாற்றி இருக்கிறார். ’காளமேகம்’ படத்தின் டைட்டிலில் புதுவை பாரதிதாசன் என்று போட்டுள்ளனர்.

ஆர்.என்.சின்னய்யா இசை. ஸ்ரீ தண்டபானி பிலிம்ஸ், சேலம் மோகினி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்தப் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தும்
பெரிய வரவேற்பை பெறவில்லை.

இந்தப் படம் வெளியான 1940-ம் வருடம், பி.யூ.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்த ’உத்தமபுத்திரன்’ உட்பட 36 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

அதில் வெற்றி பெற்றது மூன்று படங்கள் மட்டுமே.

இதே ஆண்டு அறிமுகமான ராஜரத்தினம் பிள்ளையோடு சேர்த்து 4 பேர். அவர்கள், எஸ்.டி.சுப்புலட்சுமி, டி.எஸ்.துரைராஜ், டி.ஆர்.ராமச்சந்திரன்.

இதில் டி.ஆர்.ராமச்சந்திரன் காமெடி ஹீரோவாக பல படங்களில் நடித்தார்.

இந்தப் படத்திற்கு முன், தமிழ் சினிமாவில் முதல் நாயகி டி.பி.ராஜலட்சுமி தயாரித்து இயக்கிய ’மிஸ் கமலா’ படத்தில் ராஜரத்தினம் பிள்ளை, நாதஸ்வர வித்வானாக கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

’திருநீலகண்டர்’ படத்திலும் சின்ன வேடத்தில் நடித்திருக்கும் அவர், அதன்பிறகு நடிக்கவில்லை.

– அலாவுதீன்

You might also like