நாகாலாந்தில் பதற்றத்தைத் தணிக்க ஊரடங்கு!

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று பணி முடிந்து அவர்கள் ஒரு வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த வாகனத்தை குறி வைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிசூடு நடத்தினர்.

இந்தச் சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 19 உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தால் நாகலாந்தில் கலவரம் வெடித்துள்ளது. இதனால், வடகிழக்கு மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஆத்திரமடைந்த கிராம மக்கள் பாதுகாப்புப் படையினரை சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கி உள்ளனர். அவர்களின் வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.

தீவிரவாதிகள் என நினைத்து துப்பாக்கிசூடு நடத்தியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ள நிலையில், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு, துப்பாக்கிச்சூடு செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து உயர்மட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் மீது நாகாலாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாகனத்தில் சென்ற தொழிலாளர்களைக் காயப்படுத்த வேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாகவும், இது திட்டமிட்ட படுகொலை என்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விதிமுறைகள்படி சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் யாரும் அழைக்கப்படவில்லை என்றும் எப்.ஐ.ஆரில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழப்பு நேர்ந்ததாக எப்.ஐ.ஆரில் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதற்றத்தைக் கட்டுப்படுத்த மோன் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியை முதலமைச்சர் இன்று பார்வையிட்டார்.

இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் காங்., உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் எம்.பி.,க்கள் மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு ஆகியோர் தீர்மான நோட்டீஸ் அளித்தனர். இன்றைய நாடாளுமன்ற இரு அவைகளிலும் நாகாலாந்து சம்பவம் எழுப்பப்பட்டது.

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்திற்கு எதிரான சம்பவம் என உறுப்பினர்கள் பேசினர். காங்., எம்.பி., கவுரவ் கோகை பேசுகையில் இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே, ‘துப்பாக்கிச்சூட்டில் பலியானா 16 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்’ என்றார்.

இந்த பிரச்சனையால் அவை அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அமித்ஷா மாலை விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.

சென்னை ஐ.ஐ.டி.,யில் தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டியதன் அவசியத்தை திமுக எம்பி., தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.

அதிமுக உறுப்பினர் தம்பித்துரை நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் இதனை மேம்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசினார்.

ஆனால் இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நிலத்தடி நீர் வளம் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

You might also like