நாடோடி மன்னன் – எம்.ஜி.ஆரின் அரசியல் முன்னோட்டம்!

தோல்விகளே முன்னுதாரணங்களாக இருக்க, வெற்றிச் சிகரத்தைத் தொடும் பயணம் எளிதானதல்ல. சினிமாவில் மட்டுமல்ல, தனது வாழ்க்கையிலும் அப்படியொரு கட்டத்தை அனாயாசமாகக் கடந்தவர் எம்.ஜி.ஆர்.

அதற்குக் காரணமான திரைப்படம் ‘நாடோடி மன்னன்’.

உண்மையைச் சொன்னால், அந்தச் சூழலை எம்.ஜி.ஆரே வேண்டி விரும்பி ஏற்படுத்திக் கொண்டார். அப்படியா, ஏன் என்று கேட்பவர்களால் ஒருபோதும் எம்.ஜி.ஆரைப் புரிந்துகொள்ளவே முடியாது.

நடிக்க வாய்ப்பு கிடைக்காத காலத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டாரோ, அவற்றையெல்லாம் தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு பரீட்சித்துப் பார்த்தார் எம்ஜிஆர்.

வேண்டும் பெருவெற்றி!

மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி, மதுரை வீரன், தாய்க்குப்பின் தாரம் ஆகியன பெரிய வெற்றியைச் சுவைத்தன. அதே நேரத்தில் ராஜராஜன், புதுமைப்பித்தன், மகாதேவி, சக்கரவர்த்தி திருமகள் ஆகியன மிகச்சுமாரான வெற்றியைப் பெற்றன.

எம்.ஜி.ஆரை நாயகனாகக் கொண்டு அரை டஜன் படங்கள் பிரமாண்டமாகத் தயாராகி பாதியில் நின்று கொண்டிருந்தன.

யார் முன்னணி என்பதில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் போட்டியிடத் தொடங்கிய காலமது.

இருபது ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு வெற்றியாளராக மாறிய எம்.ஜி.ஆர், தனது எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்க விரும்பினார்.

அதற்காக, அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் சேர்த்து தான் சொல்ல விரும்பிய சீர்திருத்தக் கருத்துகளையும் புகுத்த முடிகிற ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தார்.

உருவ ஒற்றுமை கொண்ட இரண்டு பேரில் ஒருவர் ராஜவம்சத்தைச் சேர்ந்தவராகவும், இன்னொருவர் புரட்சிப்படையைச் சேர்ந்தவராகவும் இருந்து, இருவரும் நேருக்கு நேர் சந்திக்கொண்டபிறகு என்ன நடக்கும் என்பதைக் கதையாகக் கொண்டார்.

If I were a king (1938), The Prisoner of Zenda (1937) ஆகிய திரைப்படங்களின் கதைக்கருக்கள் இக்கதைக்கு மூலமாகின.

தொடக்கத்திலேயே சிக்கல்!

’அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் நடித்தபோது, ’தி பிரிசனர் ஆஃப் ஜெண்டா’ படத்தின் கருவைக் கொண்டு தான் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக பானுமதியிடம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அதைக் கேட்டதும், தனது நிறுவனத்தில் அந்த கதையை அப்படியே படமாக்கவிருப்பதாகப் பதிலளித்தார் பானுமதி.

பிடிவாதம் அதிகமுள்ளவர் பானுமதி என்பது திரையுலகத்தில் அப்போது கோலோச்சியவர்கள் அறிந்த விஷயம். ஆனாலும், இரட்டை வேடங்களின் பின்னணியை மட்டுமே ஆங்கிலப் படத்தில் இருப்பது போல அமைப்பதாகத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

மாற்றான் மனைவியுடன் கூடுவது உள்ளிட்ட ஒரிஜினல் படத்தில் இருந்த காட்சிகளை, தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றவாறு தான் மாற்றியதாக விளக்கமளித்தார். அதைக் கேட்டு மனம் மாறிய பானுமதி, பல நாட்களுக்குப் பின் தங்களது நிறுவனத்தின் தயாரிப்பை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.

மிகுந்த நிம்மதியுடன் தனது படத்தின் டைட்டிலை தினசரிகளில் வெளியிட்டார் எம்.ஜி.ஆர். அவர் தேர்ந்தெடுத்த டைட்டில் ‘உத்தமபுத்திரன்’. அவருக்கு ஜோடியாக சாவித்திரி நடிப்பதாக இருந்தது.

அதே நாளில் வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘உத்தமபுத்திரன்’ பட விளம்பரமும் வெளியானது. ஏற்கனவே பி.யு.சின்னப்பா நடிப்பில் ’உத்தமபுத்திரன்’ திரைப்படம் வெளியாகியிருந்த நிலையில், அதே கதை சில மாற்றங்களுடன் தயாரிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகின.

அதனால், டைட்டிலை மாற்றி ‘நாடோடி மன்னன்’ என்ற பெயருடன் வாஹினியிலும் விஜயாவிலும் ஏகப்பட்ட செட்கள் அமைத்து படமாக்கத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்.

அதன்பிறகு, படத்தின் தோல்வி எப்படிப்பட்டதாக இருக்குமென்றும், எம்.ஜி.ஆர். எத்தகைய சரிவைச் சந்திப்பார் என்றும் கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சுகள் இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கின.

எம்.ஜி.ஆரின் புரட்சி!

ஒரு படத்தில் பணியாற்றுபவர்கள் எத்தகைய சங்கடங்களைச் சந்திப்பார்களோ, அவை எதுவும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு நேரிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் எம்.ஜி.ஆர்.

சண்டைக்காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்கு மாதச் சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தினார். பணக்காரர்கள் மட்டுமே குடிக்கும் ஓவல்டின் பானத்தை, படப்பிடிப்புத்தளத்தில் அண்டாவில் நிரப்பி வைக்கச் சொன்னார்.

ஒரு பிரேமில் அல்லது காட்சியில் இடம்பிடித்த செட், வேறு எங்கும் இடம்பெறாத வண்ணம் விதவிதமாக செட்கள் வேண்டுமென்றார். இரட்டை வேடம் என்றாலே டெம்ப்ளேட்டாக பின்பற்றப்பட்ட பல விஷயங்களை உடைத்து பல புதுமைகளைப் புகுத்தினார்.

இதனால், மாதக்கணக்கில் படப்பிடிப்பு நீண்டது. பணமும் தண்ணீராகச் செலவானது.

படம் முடிவடைந்தபோது, சுமார் 18 லட்ச ரூபாய் செலவானது தெரிய அந்தது. இடைப்பட்ட காலத்தில், ஸ்டூடியோவே கதி என்று கிடந்தார் எம்.ஜி.ஆர்.

கடன் கிடைக்காமல் அவதி!

எம்ஜியார் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்டில் எம்.ஜி.ஆரைப் போலவே அவரது சகோதரர் சக்ரபாணியும் ஒரு பங்குதாரர். எம்ஜிஆரின் உதவியாளராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் தான் நிறுவனம் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளிலும் கையெழுத்திடும் நபராக இருந்தார்.

நாகிரெட்டி போன்றவர்கள் எம்.ஜி.ஆருக்கு கடன் தரத் தயாராக இருந்தனர். தனது நிறுவனத்தின் படப்பிடிப்புக் கருவிகளைத் தந்து உதவினார் எஸ்.எஸ்.வாசன்.

படப்பிடிப்பு நடந்தபோது, ஒருநாள் பல அடி நீளத்துக்கு கயிறு வேண்டுமென்று தயாரிப்பு நிர்வாகி ஒருவர் தெரிவிக்க, ‘இன்னிக்கு எத்தனை பேரு தூக்குல தொங்கப் போறாங்க’ என்று சக்ரபாணி கேட்டாராம்.

அந்த அளவுக்கு, எம்.ஜி.ஆர். படமாக்கும் விதமும், காட்சிகளின் சாராம்சமும், படம் சம்பந்தப்பட்ட பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியது.

இது எதுவுமே எம்.ஜி.ஆரைப் பாதிக்கவில்லை. கேமிராவுக்கு முன்னும் பின்னும் மட்டுமே தனது கவனம் என்றிருந்தார்.

அவர் மட்டுமே ‘நாடோடி மன்னன்’ எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற வேண்டுமென்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் இருந்தார். அதற்கேற்றபடி பல ஆயிரம் அடிகள் படமாக்கப்பட்டன.

படம் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டு, பலமுறை மாற்றப்பட்டது. ஒருவழியாக ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று வெளியாகுமென்று உறுதி செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட படம் நிறைவடைந்து தியேட்டர்களுக்கு அனுப்புவதற்கான பிரிண்ட் எடுக்க பணம் இல்லாத சூழ்நிலை. ஏவி.எம் ஸ்டூடியோ சென்று, மெய்யப்பச் செட்டியாரிடம் கடன் கேட்டார் வீரப்பன்.

ஆனால், எம்.ஜி.ஆர். நேரில் வந்து கையெழுத்திட்டால் மட்டுமே கடன் தருவேன் என்று கறாராக இருந்தனர் மெய்யப்பனிடம் பணியாற்றியவர்கள். அதன்பின், வீரப்பன் தன்னிலை விளக்கமளிக்க அதனை ஏற்று மெய்யப்பனே கடன் தொகை தந்தார் என்று பல்வேறு தகவல்கள் உண்டு.

படத்தின் ரிலீஸுக்கு முன்பாக, டைட்டிலில் வரும் ‘செந்தமிழே வணக்கம்’ பாடலை படமாக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர். இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பிரேமுக்கும் ரசிகர்களின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய வேண்டுமென்று அவர் விரும்பினார்.

‘நாடோடி மன்னன்’ ரிலீஸ் ஆனபிறகே, அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா விரும்பிகளும் அதனைப் புரிந்து கொண்டனர்.

நாடோடியா? மன்னனா?

‘நாடோடி மன்னன்’ படத்தை உருவாக்கிக் கொண்டிருந்தபோது, ‘இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன், இல்லையென்றால் நாடோடி’ என்று தெரிவித்திருந்தார் எம்.ஜி.ஆர். ‘ரீல்’ வாழ்க்கையில் மட்டுமல்ல, ‘ரியல்’ வாழ்விலும் அவர் நாயகன் என்பது ரிலீஸுக்கு பின் உறுதியானது.

ஆள் மாறாட்டத்தினால் ஒரு நாட்டின் ஆட்சியில் ஏற்படும் மாற்றங்கள் தான் படத்தின் மையம். வீராங்கன் என்ற புரட்சி வீரன் மக்களாட்சி வேண்டுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.

இதனால் ரத்தினபுரி அரசு அவரைக் கைது செய்கிறது. சிறையில் மதனா என்ற பெண்ணின் அறிமுகத்தைப் பெறுகிறார் வீராங்கன்.

ரத்தினபுரியின் அரசர் மாண்ட நிலையில், பல ஆண்டுகள் கழித்து புதிய அரசராக மார்த்தண்டனுக்கு முடிசூட்ட முடிவாகிறது. ஆனால் ராஜகுரு, பிங்கலன் மற்றும் கார்மேகம் ஆகியோர் இதனை விரும்பவில்லை.

பிங்கலனுக்கு முடிசூட்டும் வகையில் மார்த்தண்டனுக்கு விஷமூட்டும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அந்த நேரத்தில், வீராங்கனை மார்த்தாண்டன் என்றெண்ணி அரண்மனைக்கு அழைத்து வருகின்றனர் ரத்தினபுரியின் தளபதிகள்.

உருவ ஒற்றுமையை எண்ணி ஒருவரையொருவர் வியந்தாலும், சிந்தனையில் வீராங்கனும் மார்த்தாண்டனும் எதிரும்புதிருமாக இருக்கின்றனர். உரையாடல் நீளும்போதே, விஷம் அருந்தியதால் மயக்கமுறுகிறார் மார்த்தாண்டன்.

எதிரிகளின் சூழ்ச்சி நீள, மார்த்தாண்டன் கடத்தப்படுகிறார். முடிசூட்டு விழாவில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்க, அவரது இடத்துக்குக் கொண்டுவரப்படுகிறார் வீராங்கன்.

மன்னராகப் பதவியேற்றாலும், மதனாவின் உதவியுடன் புரட்சிக்கூட்டத்தினரைச் சந்திக்கிறார் வீராங்கன். அவர்களது விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டு, மன்னராட்சியே மக்களாட்சியாகவும் மாறும் என்று உறுதி கூறுகிறார்.

இந்த சந்திப்புகளின் இடையே மதனாவுக்கும் வீராங்கனுக்கும் காதல் மலர்கிறது. இருவரையும் ஒன்றாகக் காணும் மதனாவின் மனைவி கோபம் கொண்டு, ராஜகுருவின் உதவியை நாடுகிறார்.

அதன்பின், ராஜகுரு மற்றும் அவரது ஆட்கள் எத்தகைய சதிச்செயல்களில் ஈடுபடுகின்றனர்? கடத்தப்பட்ட மார்த்தாண்டனை வீராங்கன் எவ்வாறு மீட்டார் என்பதைச் சொல்கிறது திரைக்கதையின் மீதிப்பாதி.

படம் வெளியானதுமே பெருவெற்றி என்று தெரிந்துவிட்டது.

இதனால் எம்ஜிஆர் பெற்ற லாபம் மிகச்சிறிது தான். படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தான் பல மடங்கு லாபம் சம்பாதித்தனர்.

ஆனால், தான் மனதில் நினைத்ததை எம்ஜிஆர் சாதித்தார். பெரும் புகழை ஈட்டியதோடு, எதிர்காலத்தில் தனது திரைப்படங்களின் உள்ளடக்கம் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று தீர்மானிப்பவராக மாறினார்.

நல்லவனுக்கு முன்னுதாரணம் என்று சொல்லக்கூடிய நாயக பாத்திரம், அதற்கு சவால்விடும் வகையிலான கனமான வில்லன் பாத்திரம், ஒன்றுக்கு மேற்பட்ட நாயகிகள் இருந்தாலும் ஒருவர் மட்டுமே ஜோடியாகும் வகையிலான கதை, எந்த வகையிலும் அயர்வுற வைக்காத திரைக்கதை,

ரசிகர்களை அறிவுறுத்தும் கருத்துச் செறிவுமிக்க பாடல்கள், நல்ல நகைச்சுவை என்று பல விஷயங்கள் எம்ஜிஆருடைய படத்தில் இடம்பெறுவதற்கு நாடோடி மன்னனே முன்னோடி.

அது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, பாடல்கள், மேக்கப், திரைக்கதை, இயக்கம் போன்றவற்றோடு படம் வெளியாகும் நாள் உள்ளிட்டவற்றையும் தீர்மானிப்பவராக மாறினார் எம்ஜிஆர்.

மதுரை வீரன் திரைப்படம் 1 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது என்றால், அதனை மிஞ்சும்படியாக அமைந்தது ‘நாடோடி மன்னன்’. திரையிட்ட இடமெங்கும் திருவிழா போல மக்களைப் பெருக வைத்தது.

மைல்கல்லான இரட்டை வேடம்!

இரட்டை வேடம் என்றாலே திரைக்கதையின் நடுப்பகுதியில்தான் இரு பாத்திரங்களின் சந்திப்பும் நிகழும். அதுவரை, இருவரது பின்புலமும் தனித்தனியாகக் காண்பிக்கப்படும்.

நாடோடி மன்னனுக்குப் பிறகும் கூட இந்த பாணியே பெரும்பாலும் பின்பற்றப்பட்டது. தமிழில் வெளியான முதல் இரட்டை வேடப் படமான ‘உத்தமபுத்திரன்’ தொட்டு இதுவே வழக்கமாக இருந்தது.

ஆனால், நாடோடி மன்னன் படத்தில் திரைக்கதை தொடங்கிய அரை மணி நேரத்திற்குள்ளாகவே இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வர்.

ஒருவருடன் ஒருவர் கை குலுக்கிக் கொள்வது, ஒருவரது சிம்மாசனத்தின் மீது இன்னொருவர் கை வைத்தவாறே பேசுவது, இருவரையும் காட்டும்போது கேமிரா நகர்வது என்று இத்திரைப்படம் இரட்டை வேடத்தைக் காட்டுவதில் புதுமை புகுத்தியது.

மாஸ்க்கிங் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே பிரேமில் இரண்டு பாத்திரங்களைக் காட்டுவது, இரண்டு காட்சிகளை தனித்தனியாக எடுத்து ஒன்றிணைப்பது, சிறப்பான ஒப்பனையுடன் டூப் நடிகர்களைப் பயன்படுத்துவது, பேக் புரொஜக்‌ஷன் நுட்பத்தில் பின்னணியில் காட்சிகளை ஓடவிடுவது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை கையாண்டிருந்தார் எம்ஜிஆர்.

ஒரு பாத்திரத்தில் இருந்து நகர்ந்து இன்னொரு பாத்திரத்தைக் காட்டும் பேனிங் ஷாட் அதிகமாக இடம்பெற்றிருப்பது படத்தொகுப்பில் எம்ஜிஆருக்கு இருந்த மேதைமையைக் காட்டும்.

இப்படத்தில் படத்தொகுப்பாளராக பெருமாள் என்பவர் பெயர் இடம்பெற்றிருக்கும். அதற்கு முன்னதாகவே, ஆறுமுகம் இப்படத்தில் பணியாற்றினார்.

கறுப்பு வெள்ளை பகுதிகளுக்கான படத்தொகுப்பின்போதே உதவியாளர்கள் பலர் வெளியேறிவிட, கலர் பகுதிக்கான படத்தொகுப்பை சி.பி.ஜம்புலிங்கம் மேற்கொண்டிருக்கிறார். ஆனால், டைட்டிலில் தன் பெயர் இடம்பெற வேண்டாமென்று விரும்பியிருக்கிறார். இதனை எம்ஜிஆரே பின்னாளில் தான் அளித்த பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

இரட்டை வேடம் என்பது வெறுமனே நடிப்பு மட்டும் சார்ந்ததல்ல. படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் நுட்பங்களும் அத்துபடியாக இருந்தால் மட்டுமே அது சிறப்பாக அமையும்.

இரண்டு பாத்திரங்கள் பேசிக்கொள்ளும் காட்சியில், மார்த்தாண்டன் பேச்சுக்கும் நகர்வுக்கும் ஏற்றவாறு வீராங்கனின் கண்களும் முகபாவமும் மாறும். சமகாலத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களில் இருந்து எம்ஜிஆர் எவ்வளவு முன்னகர்ந்து இருந்தார் என்பதற்கு இந்த காட்சி ஒரு சாட்சி.

சந்திரபாபுவின் ரப்பர் சாகசம்!

வீரப்பா, நம்பியார், சக்ரபாணி ஆகியோர் வில்லன்களாக பிரகாசிக்க, தன் ரப்பர் உடம்பால் பிரமிப்பூட்டினார் சந்திரபாபு. ’தடுக்காதே’, ’பாடுபட்டா தன்னாலே’, ’கும்பாலோ’ பாடல்களில் தன் நளின நடனசைவுகளால் மகிழ்வித்திருப்பார்.

கிணற்றடியில் ஒரு பெண் தன் வாளியில் இருந்து தண்ணீர் ஊற்ற, அதனைக் குடிக்கும்போது சந்திரபாபு வாயில் இருந்து கோழிக்குஞ்சு வெளிப்படுவது இப்போதும் நம்மை அசரடிக்கும்.

சகுந்தலா வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழையும்போது தன்னை மூடியிருக்கும் பஞ்சை எடுத்து வீசும்போது ஒரு புறாவையும் தூக்கிப் போடுவார். அவ்வளவு நேரம் அந்த புறா எங்கிருந்தது என்று நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.

இதெல்லாம் போதாதென்று மாடிப்படிகள் ஏறும்போதே பாதியில் தாவிக்குதித்து சோபாவில் விழுவார். அந்த அர்ப்பணிப்பு எவருக்கும் கைவராதது.

’சபாஷ் மீனா’வில் சந்திரபாபு ஜோடியாக சரோஜாதேவி அறிமுகமானாலும், கன்னடத்தில் ஓரிரண்டு படங்களில் நடித்தவரை தனக்கு ஜோடியாக எம்ஜிஆர் அறிமுகம் செய்தது நிச்சயம் பெரிய விஷயம்தான். அவருக்கு தமிழ் பேச வரவில்லை என்பதற்காகவே வசனங்களை சிறிதாக மாற்றச் சொல்லியிருக்கிறார் எம்ஜிஆர்.

கிட்டத்தட்ட டி.ஆர்.ராஜகுமாரி போன்றே படங்களில் தலைகாட்டிவந்த எம்.என்.ராஜத்துக்கு நல்ல பெயர் வாங்கித் தந்ததும் இப்படம் தான்.

’நாடோடி மன்னன்’ வெற்றி அதில் நடித்த அனைவருக்கும் பல புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.

பாடல்கள் பெற்ற வெற்றி!

’பாடுபட்டா தன்னாலே’, ‘சம்மதமா’, ‘செந்தமிழே வணக்கம்’, ‘உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா’ பாடல்களுக்கு இசையமைத்தார் என்.எஸ்.பாலகிருஷ்ணன். இயக்குனர் டி.ஆர்.ரகுநாத் படங்கள் பெரும்பாலானவற்றில் பணியாற்றியவர் இவர்.

அலிபாபாவும் 40 திருடர்களும் (1941), மாப்பிள்ளை, உலகம் பலவிதம் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் பாலகிருஷ்ணன். இப்படத்தில் 4 பாடல்களோடு அவர் தன் கணக்கை முடித்துக்கொண்டது துரதிர்ஷ்டம்தான்.

’கண்ணில் வந்து மின்னல்போல்’, ’சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி’, ‘மானைத் தேடி மச்சான் வாரான்’ உள்ளிட்ட பாடல்கள் மூலமாக நம் மனம் மயக்கினார் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா. ’தூங்காதே தம்பி தூங்காதே’ பாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தமிழை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

அதீத பிரமாண்டம்!

சாந்தாராம் போன்ற படைப்பாளிகள் எம்ஜிஆரின் மனதுக்கு நெருக்கமாக இருந்தாலும், எல்.வி.பிரசாத், எஸ்.எஸ்.வாசன் போன்றே படமெடுக்க விரும்பினார் எம்ஜிஆர்.

சிறப்பான காஸ்ட்யூம், கலை அமைப்பு, கேமிரா கோணங்கள், படத்தொகுப்பு உத்திகள், மயக்கும் இசை என்று பல விஷயங்கள் நாடோடி மன்னனில் உண்டு.

‘உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்’ பாடலில் எம்ஜிஆரையும் அமைச்சராக நடிப்பவரையும் காட்டும்போது ‘பேக் புரொஜெக்‌ஷன்’ நுட்பத்தில் காடு சம்பந்தமான காட்சிகள் இடம்பெறும். ஜன்னல் வழிப்பார்வையை பெற முடியும்.

அந்த பாடலின் இடையே குதிரையில் இருவரும் வருவதை டாப் ஆங்கிளில் காட்டும் கோணம் இடம்பெறும். அப்போது, பேக் புரொஜக்‌ஷனில் வானமும் ஓங்கியுயர்ந்த மரக்கிளைகளும் பின்னால் தெரியும்.

கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியின்போது தொங்குபாலத்தில் எம்ஜிஆரும் சரோஜாதேவியும் தொங்குவது லாங் ஷாட்டில் மினியேச்சரோடு இணைத்துக் காட்டப்படும். சண்டைக்கு நடுவே தீவினில் தண்ணீர் புகுந்ததும் பிரமாண்டமாகக் காட்டப்படும்.

வீராங்கன் உட்கார்ந்திருக்கும் ஆசனத்தின் மேல் கை வைத்தவாறே மார்த்தாண்டன் பேசும் காட்சியில் இரு வேறு கோணங்கள் 45 டிகிரி மாறுபாட்டில் இடம்பெற்றிருக்கும். இதுபோல எம்ஜிஆரின் கனவை நனவாக்க படம் முழுக்க அற்புதமாக உழைத்திருப்பார் ஒளிப்பதிவாளர் ராமு.

படமாக நாம் பார்க்கும் காட்சிகளை விட, வேண்டாம் என்று எம்ஜிஆர் வீசியெறிந்த காட்சிகள் ஏராளம் என்று சொல்வோரும் உண்டு. உதாரணமாக, நூற்றுக்கணக்கான பசுக்கள் பால் கறப்பது போல ஒரு பாடல் படமாக்கப்பட்டு, அது காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது போலாகிவிடும் என்று சிலர் சொன்னதற்காகவே படத்தில் இடம்பெறவில்லை.

அதேபோல, வீராங்கனும் மார்த்தாண்டனும் நேருக்கு நேர் சண்டையிடும் காட்சியைப் படமாக்குவதில் எம்ஜிஆர் உறுதியாக இருக்க, அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் வீரப்பன்.

எம்ஜிஆரும் எம்ஜிஆரும் சண்டையிட்டால் ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று வீரப்பன் சொன்னபிறகே, எம்ஜிஆர் அக்காட்சியை படமாக்கும் முடிவைக் கைவிட்டிருக்கிறார்.

இப்படி ஏராளமான தகவல்கள் உண்டு. அவை எல்லாமே, நாடோடி மன்னன் திரைப்படத்தின் வெற்றியை விட மலையளவு உயர்ந்தது.

எளிமையான வசனங்கள்!

அரசியல் கருத்துகளை தெரிவிக்கும் படமென்றாலே வசனம் அனல் தெறிக்கும் விதமாக இருக்குமென்ற கருத்து உண்டு. ஏ.எஸ்.ஏ.சாமி, கருணாநிதி போன்றவர்கள் ஏற்படுத்திய அந்த பிரமிப்பை மறந்தும் தந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் எம்ஜிஆர்.

காரணம், வசனங்களில் லயித்துவிட்டால் காட்சிரீதியான பிரமாண்டம் மங்கிவிடுமென்று அவர் நினைத்ததுதான்.

’நானும் உங்களில் ஒருவன் தானே என்னை ஏன் எதிர்க்க வேண்டும்’ என்ற மார்த்தாண்டன் கேள்விக்கு வீராங்கன் பதிலளிப்பது, இன்றைக்கும் கூட நமக்கு அன்னியமாகத் தெரியாது.

‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி’ பாடலை அடுத்து புதிய சட்டத்திருத்தங்கள் அறிமுகம் பற்றிய காட்சி இடம்பெறும். ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்று விவசாய நலனில் தொடங்கி கல்வி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, தொழிலாளர் நலன், மக்களாட்சி உட்படப் பல விஷயங்களைத் தொட்டுச் செல்லும் வசனங்கள் அன்றைய தமிழ் சினிமாவுலகம் அறியாதது.

கவிஞர் கண்ணதாசனும் ரவீந்தருமே அந்த புகழுக்குச் சொந்தக்காரர்கள்.

கதை, வசனம், பாடல்கள் என்று தனித்தனியாக கிரெடிட் தந்த எம்ஜிஆர். காட்சி நிர்மாணம் என்ற பெயரில் திரைக்கதை ஆசிரியர்களாக சி.குப்புசாமி நாயுடு, கே.சீனிவாசன் மற்றும் இயக்குனர் ப.நீலகண்டன் பெயர்களை இடம்பெறச் செய்தார்.

ஜாம்பவான்களின் ஆசீர்வாதம்!

தான் முதல்முதலாக இயக்கும் படத்தை மேற்பார்வை செய்ய கே.சுப்பிரமணியம் படப்பிடிப்புத்தளத்தில் இருக்க வேண்டுமென்று விரும்பினார் எம்ஜிஆர். ஆனால், ஒரு சில நாட்களிலேயே அவர் தனித்து முடிவெடுப்பவர் என்று உணர்ந்து தனக்கான பொறுப்பைத் துறந்தார் சுப்பிரமணியம்.

அதன்பிறகு, நாடோடி மன்னன் படப்பிடிப்புக்காக கலர் பிலிம் வாங்குவதற்காக பம்பாய் சென்று வந்தார். மலைப் பிரதேசக் காட்சிகளை மூணாறு பகுதிகளில் படம்பிடிக்க ஏற்பாடு செய்தார்.

அதேபோல, வாஹினி ஸ்டூடியோவில் பல செட்கள் அமைப்பதற்கு உதவிகரமாக இருந்தார் நாகி ரெட்டி. இப்படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியைப் படம்பிடிக்க கேமிரா தந்து உதவியிருக்கிறார் எஸ்.எஸ்.வாசன்.

சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ திடலில் நடைபெற்ற நாடோடி மன்னன் வெற்றி விழாவில் இதனை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார் எம்ஜிஆர்.

அண்ணாவின் பாராட்டு!

மதுரை தமுக்கம் மைதானத்தில் ‘நாடோடி மன்னன்’ வெற்றிவிழா ஏற்பாடு செய்யப்பட்டபோது, அங்குள்ள விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் இடத்துக்கு வர எம்ஜிஆருக்கு 4 மணி நேரம் ஆனதாம்.

அந்த அளவுக்கு, அவரைப் பார்க்க சாலையெங்கும் மக்கள் குவிந்திருக்கின்றனர்.

இந்த ஏற்பாட்டை செய்தவர் மதுரை முத்து. பல ஊர்களிலும் இதே ரக வரவேற்பு தொடர்ந்தது.

சென்னையில் நடந்த நாடோடிமன்னன் வெற்றி விழாவில் பங்கேற்ற அறிஞர் அண்ணாதுரை, எம்ஜிஆரை பாராட்டுவது தன்னை பாராட்டுவது போன்றது என்றார். “மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்த கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன்” என்றார்.

அவரது கையால் 110 சவரன் தங்க வாளைப் பரிசாகப் பெற்றார் எம்ஜிஆர்.

எம்ஜியார் பிக்சர்ஸ் லோகோவில் திமுக கொடியைக் காட்டியதோடு நில்லாமல் வசனங்களிலும் ’ஆண்டான் அடிமை’ வேறுபாட்டை எம்ஜிஆர் சுட்டிக்காட்டிய விதம் அவரை வெகுவாக ஈர்த்தது. ரசிகர்கள் அதற்குத் தந்த வரவேற்பு, திமுகவில் முக்கியத் தலைவர்களுக்கு ஈடான நிலையை எம்ஜிஆர் பெறக் காரணமானது.

அதிரிபுதிரியான வெற்றி!

’நாடோடி மன்னன்’ வெற்றி எம்ஜிஆரையே திக்குமுக்காடச் செய்தது என்பதே உண்மை. பார்த்தவர்கள் திரும்பத் திரும்ப பார்க்கும்படி செய்துவிடும் இத்திரைப்படம் என்று ஆனந்தவிகடனில் திரை விமர்சனம் வெளியானது.

தேனி மாவட்டத்தில் சிலர் ரத்த தானம் செய்து அந்த பணத்தில் படம் பார்ப்பதாகத் தகவல் வெளியானது. உடனே, ‘படம் பார்ப்பதற்காக காசு வேண்டுமென்றால் எனக்கு கடிதம் எழுதுங்கள், நான் அனுப்புகிறேன்’ என்று பத்திரிகைகளில் பதிலளித்தார் எம்ஜிஆர்.

சென்னையில் மட்டும் ஸ்ரீகிருஷ்ணா, பாரகன், உமா என்று மூன்று தியேட்டர்களில் இப்படம் 100 நாட்கள் ஓடியது. மாவட்டத் தலைநகரங்களில் இருந்த தியேட்டர்களிலும் இதே கதைதான்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்பட தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலும் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

மன்னாதி மன்னன் எம்ஜிஆர்!

பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.மகாலிங்கம் உட்பட தமிழில் முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்தவர்களெல்லாம் அடுத்தடுத்து சொந்த தயாரிப்பில் ஈடுபட்டு தங்களது சம்பாத்தியத்தை இழந்தனர். கிட்டத்தட்ட அப்படியொரு அபாயத்தை ஒரே படத்திலேயே ஏற்படுத்திக் கொண்டார் எம்ஜிஆர்.

சினிமாவில் வெற்றிகள் ஒருபோதும் நிச்சயிக்கப்படுவதில்லை. சினிமாவின் மீதான எம்ஜிஆரின் அதீத காதலே அப்படியொரு நிலைக்கு ஆளாக்காமல் அவரைக் காத்தது என்றால் மிகையல்ல.

‘சந்திரலேகா’ போன்ற பிரமாண்டத்தை மட்டுமே திரையில் காட்டாமல், மக்களில் ஒருவன் தான் ஆட்சிப்பீடத்தில் அமர முடியும் என்று ஜனநாயகத்தின் அடிப்படையையும் தன் படத்தில் பொதித்து வைத்தார் எம்ஜிஆர்.

அதன் பலன், 1977இல் அவர் முதலமைச்சர் பதவியேற்றபோது வெளிப்படையாகத் தெரிய வந்தது.

சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் தனக்கான இடம் எதுவென்று முடிவு செய்வதற்கான எம்ஜிஆரின் பரீட்சார்த்த முயற்சியே ‘நாடோடி மன்னன்’. ரசிகர்கள் அதற்காகத் தந்த பரிசு தான் ‘புரட்சித்தலைவர்’ என்ற வெகுமதி!

*****

படத்தின் பெயர்: நாடோடி மன்னன், இயக்கம்: எம்ஜிஆர், கதை: எம்ஜியார் பிக்சர்ஸ் கதை இலாகா (ஆர்.எம்.வீரப்பன், வித்துவான் வே.இலக்குமணன், எஸ்.கே.டி.சாமி), திரைக்கதை: சி.குப்புசாமி நாயுடு, கே.சீனிவாசன், நீலகண்டன், வசனம்: கவிஞர் கண்ணதாசன், ரவீந்தர், பாடல்கள்: இலக்குமணதாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, என்.எம்.முத்துக்கூத்தன், ஆத்மநாதன், இசை: எஸ்.எம்.சுப்பையா, என்.எஸ்.பாலகிருஷ்ணன், கலை: கே.நாகேஸ்வரராவ், ஒளிப்பதிவு: ஜி.கே.ராமு, ஒலிப்பதிவு: வி.பி.சி.மேனன், படத்தொகுப்பு: கே.பெருமாள், தயாரிப்பு: எம்ஜிஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், ப்ராசஸிங்: விஜயா லாபரட்டரி, பிலிம் சென்டர், ஸ்டூடியோ: வாஹினி, விஜயா

நடிப்பு: எம்.ஜி.ராமச்சந்திரன், பி.பானுமதி, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், சந்திரபாபு, சரோஜாதேவி, எம்.என்.ராஜம், எம்.ஜி.சக்ரபாணி, ஜி.சகுந்தலா, டி.பி.முத்துலட்சுமி மற்றும் பலர்.

-உதய் பாடகலிங்கம்

You might also like