மாவோயிஸ்ட் நடவடிக்கைகளுக்குப் புகழ்பெற்ற பாஸ்டர் பகுதி தற்போது சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான ஒரு சைக்கிளுக்கு நன்றி சொல்லி வருகிறது.
மூங்கில், இரும்பு, சணல் மற்றும் சில உலோகங்களைக் கொண்டு ஜக்தால்பூர் தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்த நவீன சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.
“பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். அவர்களுடைய பழம்பெருமையான கைவினைக் கலைக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன் செய்தோம்.
இம்மாதிரியான பணிகளைப் பழங்குடிகள், அவர்களுடைய மூதாதையர்களுடன் தொடர்புப் படுத்துகிறார்கள். அவர்களது வாழ்வில் கைவினைக்கலை ஒரு பகுதியாக இருக்கிறது” என்கிறார் நேச்சர்ஸ்கேப் திட்டத்தை கொரொனா காலத்தில் அறிமுகப்படுத்திய ஆசிப்கான்.
பேம்பூக்கா எனப் பெயரிடப்பட்டுள்ள சைக்கிளின் எடை 8.2 கிலோ. மூங்கிலில் செய்யப்பட்டது. சாதாரண சைக்கிளை விட 60 சதவீதம் எடை குறைவானது. சாதாரண சைக்கிள் 18 கிலோ எடை கொண்டதாக உள்ளது. பாஸ்டர் பகுதியில் வாழும் கைவினைக் கலைஞர்களுக்கு ஆசிப் கான் நன்றி சொல்கிறார்.
“ஆப்பிரிக்காவில் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கான வெற்றிகரமான மாதிரியாக மூங்கில் சைக்கிள் இருந்து வருகிறது. சைக்கிளைப் போன்ற தோற்றம், பயன்பாட்டுக்கு எளிதான வடிவம், பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காகப் பல நாட்களைச் செலவிட்டோம்.
குறைந்தபட்சம் 100 கிலோ எடையை இந்த சைக்கிள் தாங்கும். அதில் மற்ற சைக்கிள்களைப் போல ஷாக் அப்சார்பரையும் வைத்துள்ளோம். அடுத்து பெண்களுக்கான சைக்கிளை உருவாக்கும் திட்டம் வைத்திருக்கிறோம்” என்று விவரமாகப் பேசுகிறார் ஆசிப் கான்.
பேம்பூக்கா எனப்படும் மூங்கில் சைக்கிளின் விலை ரூ. 35 ஆயிரம். சைக்கிளைத் தயாரிக்கப் பயன்படும் மூங்கில்களை 20 நாட்களுக்கு வேதிப்பொருட்களில் ஊறவைத்து தயார்ப்படுத்துகிறார்கள். பின்னர் அதில் பூஞ்சை தாக்குதல் ஏற்படாமல் தடுக்க வண்ணப்பூச்சு பூசுகிறார்கள்.
- பா.மகிழ்மதி