சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதைத் தவிர்க்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “பேனர் வைப்பதில் விதிமீறி செயல்படுபவர்களுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி விளக்கமளித்தது.
தொடர்ந்து தி.மு.க வழக்கறிஞர், முதல்வர் பதவியேற்றபோது கூட பேனர்கள் வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதாக வாதிட்டார்.
அதன்பின் தீர்ப்பளித்த நீதிபதிகள், “சட்டவிரோத பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆளுங்கட்சி மட்டுமல்லாமல், அனைத்துக் கட்சிகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறோம்.
பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் எனக் கூறுவது மட்டும் போதாது; கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். விதிகளைப் பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது” என தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.