“இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?
இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா?”
– 1964 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பணக்காரக் குடும்பம்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
டி.எம்.சௌந்தர ராஜனும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய மெலடியான இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும்.
படத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் பாடுவதாக இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்,
இது தெரிந்த விஷயம் தான் என்கிறீர்களா?
அதற்கு முன்பே இந்தப் பாடல் இன்னொரு படத்திற்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அந்தப் படம் – இயக்குநர் ஸ்ரீதரின் வெற்றிப்படமான ‘காதலிக்க நேரமில்லை’.
அதற்காக இதே பாடலைப் பாடியிருக்கிறார்கள் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸூம், பி.சுசீலாவும்.
இசையத்தவர்கள் இதே இரட்டையர் டீம் தான்.
ஒலிப்பதிவு செய்யப்பட்டுவிட்ட இந்தப் பாடல் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் இடம் பெறாமல் போகவே, அதே பாடலை அடுத்த ஆண்டு வெளிவந்த ‘பணக்காரக் குடும்பம்’ படத்தில் பாடகரை மட்டும் மாற்றி ஒலிப்பதிவு செய்து இடம் பெற வைத்திருக்கிறார்கள்.
– 1963 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளிவந்த ‘நடிகன் குரல்’ பத்திரிகை தான் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.
நன்றி : நடிகன் குரல் – டிசம்பர் 1963.