அரசியல் மாற்றங்களில் சமூக ஊடகங்கள்!

விரும்பி ஏற்ற வலைதளச் சிக்கல் – 2

சமூக ஊடகங்கள், எந்த அளவுக்கு நம்மை ஆட்டுவிக்கின்றன என்பதை ஒரு உதாரணம் மூலமாகச் சொல்லிவிடலாம். நேற்று ஆரம்பித்த கட்சியிலிருந்து நூறு வருடங்களுக்கு மேல் இயங்கும் கட்சிவரை தங்களுக்கான ஐடி பிரிவை உருவாக்கி இயக்கி வருகின்றன.

சாதாரண வளையல் விற்பவரிலிருந்து வைரம் விற்பவர்வரை, வலைதள விலாசத்திலிருந்து ஆரம்பித்து, அனைத்து சமூக ஊடகங்களிலும் தங்களது இருப்பை பதிவு செய்துள்ளார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலே, கொரோனா தொற்று சூழ்நிலை,  வலைதளத்தை, எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.

இது சாதாரண வர்த்தகம், கல்வி என்று ஆரம்பித்து, ஒரு நாட்டைப் பிடிக்க வேண்டுமானாலும் சமூக ஊடகம் முதலில் ஐந்தாம் படையாக உள்ளே நுழையும் நிலையைப் பார்க்கலாம்.

சில வருடங்களுக்கு முன்னால், உக்ரேன் ரஷ்யாவுடன் மறுபடியும் இணைந்தது. ஆனால், விஷயம் தெரிந்தவர்களுக்கு புரிந்த விஷயம், அது இணைக்கப்பட்டது என்பதுதான்.

அது ஹாலிவுட் கதையில் வருவது போல நடந்த ஒரு இணைப்பு என்பது மட்டுமின்றி மிகப் பெரிய அரசியல் த்ரில்லர் நாவலுக்கானது. அந்த சம்பவம் முதலில் துவங்கியது சமூக ஊடகம் வாயிலாகத்தான்.

அரசியல் மாற்றங்களில் சமூக ஊடகங்கள்

இதைப் பற்றி  The Hype Machine  என்ற நூலில் ஒரு அத்தியாயத்தில் முக்கிய விஷயங்களைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் அந்த நூலின் ஆசிரியர் சினான் ஆரல் (Sinan Aral).

இதில் சமூக ஊடகங்கள், எப்படி நமது அரசியல், சமூகம், தேர்தல், பொருளாதாரம், மற்றும் சுகாதாரம், மருத்துவம் ஆகியவற்றில் புகுந்து மாற்றங்களை ஏற்படுத்திகிறது என்பதைப் பற்றி மிக விளக்கமாக எழுதியுள்ளார்.

நமது தமிழகத்திலேயே நடந்து முடிந்த தேர்தல்களில் முக்கிய எதிர்க் கட்சி, வேறு மாநிலத்திலிருந்து அரசியல் யுக்திகள் மூலம், ஆட்சி மாற்றங்களைக் கொண்டுவருவதைத் தொழிலாகவே செய்து வந்த ஒரு நிறுவனத்தை வேலைக்கு அமர்த்தியது தெரியும்.

அவர்கள் எந்த அளவுக்கு, சமூக ஊடகங்கள் மூலம், இன்றைய முதல்வரைக் கட்டமைத்தார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இதைப் போலவே நமது அன்ராட வாழ்வில், வாட்ஸ் ஆப்பிலிருந்து துவங்கி, முக நூல், யு ட்யூப், இன்ஸ்டா என தொடர்ந்து டிக் டாக் போன்றவைதான் பலவற்றைத் தீர்மானிக்கிறது.

இந்த சமூக ஊடகங்களில் முக்கியமானவை எவை என்று தெரியுமா? ஒவ்வொன்றையும் பின்பற்றுபவர்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் எவ்வளவு பேர் எனத் தெரிந்தால், அவற்றின் வலிமை புரிந்து விடும்.

எந்தத் தளங்கள்? எத்தகைய தாக்கம்?

மொத்த சமூக வலைதளங்களில், மிகப் பிரபலமாக, குறிப்பிட்ட ஆயிரம் பேர்கள் பயன்படுத்தும் வலைதளங்கள் 21 எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். இது 2019 கணக்கு அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம். அவற்றின் 2021 கணக்கையும் பார்க்கலாம்.

முதலில் வருவது முகநூல். இதற்கு அறிமுகம் தேவையில்லை. இதை மாத்திற்கு சராசரியாக 2.23 பில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். இதை 65 மில்லியன் தொழில் ரீதியாகப் பயன்படுத்துகிறாகள்.

இது மட்டுமின்றி, 6 மில்லியன் விளம்பரங்கள் இதில் வருகின்றன. இதிலிருந்தே இதன் வலிமையைப் புரிந்து கொள்ளலாம். 2021- ஆகஸ்டில் எடுத்தக் கணக்கின்படி முகநூலை 2.74 பில்லியன் பேர்கள் பயன்படுத்துகிறார்கள்.

அடுத்து வருவது யு டியூப். இதில் மாதாந்திர வருகை, 2019 கணக்கின்படி, 1.9 பில்லியன் பேர், ஒவ்வொரு நாளையிலும் ஒரு பில்லியன் மணி நேரங்கள், வீடியோ பார்ப்பதற்காக செலவழிக்கப் படுகின்றன.

இதன் உரிமையாளர் கூகுள் நிறுவனம்தான். உலகிலேயே தேடல் என்றாலே கூகிள்தான் முதல் இடம் என்பது தெரிந்ததுதான். அதற்கு அடுத்தபடியாக வருவது…யு டியூப்தான்.

2021ஆம் ஆண்டில் வருகையாளரின் எண்ணிக்கை மாபெரும் வளர்ச்சி பெற்று, 2.291 பில்லியன் என்று இருக்கிறது.

மூன்றாவதாக வாட்ஸ் ஆப். இதை 2019 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் பேர் பயன்படுத்தினார்கள். நடப்பாண்டில், இது உயர்ந்து, 2 பில்லியன்களாகி இருக்கிறது. அடுத்ததாக முகநூல் மெஸஞ்சர் இருக்கிறது.

இதை 2011 லிருந்து தனியான செயலியாக மாற்றி, சிறப்பான அம்சங்களை சேர்த்து, வெளியே விட்டது. அதன் பலன், இப்போது 1.3 பில்லியன் பேர் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

இது தவிர நமக்குத் தெரிந்த இன்ஸ்டாக்ராம். இதை 2019 –ல் 1.221 பில்லியன் பேர்கள் பயன்படுத்தினார்கள்.

ஆனால் இப்போது சற்றே குறைந்து, 1 பில்லியன் பேர் என்றாகி இருக்கிறது. அந்த இடத்தை, வி சாட் பிடித்து இருக்கிறது. இப்போது 1.06 பில்லியன் பேர்கள் பயன்படுத்துகிறார்கள்.

உலகிலேயே மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இந்த நாட்டில் உருவான சமூக வலைதளங்கள் அதிகம்தான். வி சாட்டிலிருந்து துவங்கி, க்யூ (861 மில்லியன் பயனாளிகள்), க்யூ ஜோன் (632 மில்லியன்) நம் அனைவருக்கும் தெரிந்த டிக் டாக்.

இப்போது இதன் பயனாளிகள் 500 மில்லியன்கள் பேர். ஆனால் 2018ஆம் ஆண்டில் இது முகநூல், இன்ஸ்டாக்ராமை பின்னுக்குத் தள்ளி முன்னால் இருந்தது.

ஆனால், கால நேர, அரசியல், கொரோனா உட்பட பல காரணங்களால், இப்போது குறைவான பயனர்களுடன் இயங்கி வருகிறது. சீனா விபோ என்ற சமூக உடக வலைதளமும் (392 மில்லியன்) சீனாவுடையதுதான்.

அதே போல பைடு பையா என்ற வலைதளமும் சீனாவிலிருந்து இயங்குகிறது. (300 மில்லியன்). இவைகளைத் தவிர நமக்கு நன்கு அறிமுகமான ட்விட்டர் நடப்பாண்டில் 335 மில்லியன் பயனாளிகளோடு இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதைத் தவிர, பிண்ட்ரெஸ்ட், டெலிகிராம் உள்ளிட்ட பலதும் இருக்கின்றன. இவற்றில் மிகப் பிரபலமானவையாக இருப்பவை, 21 சமூக வலைதளங்கள். இவை அனைத்தின் வேலையே, தகவல்களைப் பரப்புவதும் பரிமாறிக்கொள்வதும்தான்.

மேற்குறிப்பிட்டவற்றில் இருக்கும் பயனர்களின் எண்ணிக்கை நிச்சயம் எந்த ஆட்சியாளரையும் பயமுறுத்தக் கூடியதுதான்.

அதனால்தான் ஜனநாயக நாட்டில், ஆட்சேபகரமான பதிவுகளிப் போடுபவர்களை வழக்கு, சிறை என்றும், சீனா போன்ற ஒரு கட்சி, சர்வாதிகார அமைப்பில், இன்னும் பலமான தடைகளும் இருக்கின்றன.

இது போன்ற பதிவுகளை நோக்கத்தோடு பரப்பும், உருவாக்கும் நிறுவனங்களும் ஏராளமாக இருக்கின்றன. அரசுகள் கூட இதைச் செய்கின்றன.

இது, உளவு நிறுவனங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் எனவும் சொல்லலாம். சீனா இதை ஒரு கலையாகவே கற்றுப் பயன்படுத்தி வருகிறது.

அதனால்தான், இந்திய – சீனா மோதல்களுக்குப் பிறகு, டிக் டாக்கை இந்திய அரசு தடை செய்தது.

இது மட்டுமின்றி, இதில் போடப்படும் பதிவுகளைக் கட்டுப்படுத்த முடியாது என்று முக நூல், ட்விட்டர் உள்ளிட்ட பல வலைதளங்க்ளின் உரிமையாளர்கள் பகிரங்கமாக அறிவித்து வருகின்றனர்.

அவர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள், நீதிமன்றங்களில் வழக்குகள் என்று பல அரசுகளும் தடுமாற்றம் அடைந்துவருகின்றன.

பஸ்மாசுரனைப் போல

இதிலிருந்தே, சமூக வலைதலங்களின் வலிமை, வீச்சு, விளைவுகளைப் புரிந்து கொள்ளலாம். பஸ்மாசுரனைப் போல, யார் தலையில் கை வைத்தாலும் பஸ்பமாக்க முடியும் என்ற அளவில் இயங்கி வருகின்றன. சீனா போல தடைகள் போடலாமே தவிர, அழிக்க முடியாது.

பஸ்மாசுரன் அழிந்ததுபோல தன் கையால் தனது தலையில் தானே வைத்தால்தான் அழியும்போல இருக்கிறது. அதற்கான அடையாளங்கள் வர ஆரம்பித்துவிட்டன.

‘எங்களது வலைதளம், அதன் இயக்கம், எங்களது இஷ்டம்தான்’ என்பது போல நடந்து கொண்டும் பேசியும் வந்த வலைதலங்கள், அதைக் காரணம் வைத்தே, பல்வேறு அரசாங்கங்களால் அடக்கப்பட்டு வருகின்றன.

இப்போது ஏறக்குறையை அனைத்து சமூக வலைதளங்களுமே, பல்வேறு வரையறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

அதே சமயத்தில், தனி மனித மாற்றம்தான் சமுதாய மாற்றத்தின் அடிப்படை. அதனால் நாமாக முன்வந்து சில விஷயங்களைக் கடைபிடித்தால், எதிர்கால சந்ததியர், இத்தகைய சமூக வலைதளங்களின் முழுக் கட்டுப்பாட்டில் போகாமல் தடுக்கலாம்.

முதலாக, நாம் கேள்விப்படும் வலைதளங்களில் எல்லாம், உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை சிந்தித்துப் பார்த்து, குறிப்பிட்ட வலைதளத்தை ம்மட்டும் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

நாம் பயன்படுத்தும் சமூக வலைதளம், நமக்குப் பயன்படுகிறதா என்பதை நிதானமாக ஆய்வு செய்து அதில் தொடரவும். நமக்கு வருவதையெல்லாம், முன்னால் தள்ளுவது தேவையில்லாதது மட்டுமின்றி, அதன் விளைவுகள் நமக்குத் தெரியாது என்பதால், நம்மளவில் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

யாரோ ஒருவர் உங்களிடம் வந்து, நீங்கள் குறிப்பிட்ட நேரம் எங்களுடன் இருக்க வேண்டும்: நாங்கள் காட்டுவதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எவ்வளவு நேரம் அவற்றை நீங்கள் பார்க்கிறீர்களோ, அந்த அளவுக்கு நாங்கள் சம்பாதிப்போம்.

இதை செய்ய முடியுமா? என்று கேட்டால், நாம் என்ன செய்வோம்? “போயா பைத்தியம்” என்று சொல்லி விட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம்.

ஆனால், சமூக ஊடகங்கள், அதைத்தான் உங்களைக் கேட்காமல், செய்து கொண்டிருக்கின்றன. “இதில் யார் பைத்தியம்” என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். ‘எனக்கான குழு, நட்பு வட்டம்தானே வைத்திருக்கிறேன்’ என்று நினைக்கலாம்.

ஆனால், உங்களுக்குள் உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும்தான் பகிர்ந்து கொள்கிறீர்களா? என்பதைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

இந்த சமூக ஊடகங்கள், ஏற்கெனெவே, பல விஷயங்களை தீர்மானிக்கின்றன. ‘நான் சுதந்திரமான கருத்துக்கள் உள்ளவன், யார்ப் பேச்சையும் கேட்டு எதுவும் செய்ய மாட்டேன்’ என்று சொல்பவர்கள், குறைந்தபட்சம் அப்படி நினைக்க விரும்புபவர்கள்தான் நூற்றுக்கு 95% பேர் இருப்பார்கள்.

ஆனால், அப்படி ஒரு விஷயம் இல்லை என்பதை, மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களின் பயனர்களின் எண்ணிக்கை நெற்றிப் பொட்டில் அறைந்தார்போல சொல்லியிருக்கிறது.

இப்போதும் உணரவில்லை என்றால், நாம் கெடுவது மட்டுமின்றி, எதிர்காலச் சந்ததியினரையும் சேர்த்துக் கெடுத்த பெருமை நம்மையே சாரும்.

– தனஞ்செயன்

You might also like