ஒரே கதையை கொஞ்சம் மாற்றிப் படமாக எடுப்பது சினிமாவில் புதிதில்லைதான். புராணக் கதைகளை, கேட்கவே வேண்டாம். பல புராணப் படங்கள் வெவ்வேறு நடிகர்களின் நடிப்பில் வெளியாகி இருக்கிறது.
இந்து புராணத்தில் சொல்லப்படும் ’சத்யவான் சாவித்ரி’ கதையும் சினிமாவாகி இருக்கிறது.
எமனிடம் போராடி கணவனை மீட்ட, சாவித்ரியின் கதையை, 1941 ஆம் ஆண்டில் சினிமாவாக எடுத்தனர்.
படத்தை இயக்கிய ஒய்.வி.ராவ் சத்யவானாகவும், சாவித்ரியாக மராத்தி நடிகை சாந்தா ஆப்தே, (இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வருடமாக தமிழ்க் கற்று பிறகு நடித்து, அவரே தமிழில் டப்பிங் பேசி அசத்தினார்), எமதர்மனாக வி.ஏ.செல்லப்பா உட்பட பலர் நடித்தனர்.
இந்தப் படத்தில் பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி நாரதராக நடித்தார். ஆனால், படம் பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்தக் கதையை கொஞ்சம் மாடர்னாக்கி, 1955 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியான படம் ’டாக்டர் சாவித்ரி’.
அஞ்சலிதேவி, டி.ஏ.மதுரம், எஸ்.பாலசந்தர், எம்.என்.நம்பியார், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.என்.ராஜன், பி.ஆர்.பந்துலு, செருகளத்தூர் சாமா உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கினார் ஆர்.எம்.கிருஷ்ணசாமி.
அருணா பிக்சர்ஸ் சார்பில் எம்.ராதாகிருஷ்ணன் தயாரித்தார்.
ஜி.ராமநாதன் இசை அமைத்த இந்தப் படத்துக்கு உடுமலை நாராயண கவி, மருதகாசி பாடல்கள் எழுதியிருந்தனர். என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய, ’காசிக்குப் போனா கரு உண்டாகுமென்று’, ‘வாதம் வம்பு பண்ணக் கூடாது’, டி.எம்.எஸ் பாடிய ’தென்பழனி மலைமேல்’ பாடல்கள் அப்போது சூப்பர் ஹிட்.
’காசிக்குப் போனா கரு உண்டாகுமென்று’ பாடலை இப்போது கேட்டாலும் ரசிக்கும்படி இருக்கும்.
ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பவர் டாக்டர் சாவித்ரி (அஞ்சலி தேவி). இளம் பணக்காரப் பெண்ணான வனஜாவை (எம்.என்.ராஜம்), நாகலிங்கம் (பாலசுப்ரமணியன்) என்ற வழக்கறிஞர் துன்புறுத்துகிறார்.
இதை அறியும் டாக்டர் சாவித்ரி தனது கணவர் சோமசுந்தரத்துடன் (பந்துலு) அந்தப் பெண்ணுக்கு உதவுகிறார். ஒரு கட்டத்தில் திடீரென்று நாகலிங்கம் கொல்லப்பட்ட, கொலைப்பழி, சாவித்ரியின் கணவர் பந்துலு மீது விழுகிறது.
செய்யாத குற்றத்துக்காக தண்டிக்கப்படும் கணவனை மீட்க, உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார் சாவித்ரி.
அதில் போராடி, மருத்துவர் ஜெகத் சிங் (எஸ்.பாலசந்தர்) தான் அந்தக் கொலையை செய்தவர் என்பது தெரிகிறது.
உண்மையான குற்றவாளியை அடையாளம் காட்டி தன் கணவரை, சாவித்ரி எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.
இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அருணா பிலிம்ஸ் முன்னணி நிறுவனத்துக்கு உயர்ந்தது என்கிறார்கள்.
-அலாவுதீன்