‘தாய்’ வளர்த்தெடுத்த தனித்துவமான படைப்பாளர்கள்!

ராசி.அழகப்பனின் ‘தாய்’ இதழ் பற்றிய அனுபவத் தொடர் – 3

நெல்சன் மாணிக்கம் சாலையைக் கடந்து போகிற போதெல்லாம் எனக்கு நினைவு வருவது ‘தாய்’ வார இதழில் பணியாற்றியது தான்.

தாய் வார இதழ், அண்ணா நாளிதழ் என இரண்டும் ஒரே கட்டிடத்தின் கீழ் இயங்கி வந்தது.

முன்பகுதியில் ஆசிரியருடைய அறைகள், பிற்பகுதியில் அச்சிடுகிற இயந்திரங்கள் இருந்தன.

ஒரு நாளைக்கு குறைந்தது பத்து புது படைப்பாளர்கள், புதுக்கவிஞர்கள் அல்லது இளம் ஓவியர்கள் என்று தாயைத் தேடி வருவது வழக்கம்.

ஏனென்றால் அவர்களை எல்லாம் புறக்கணிக்காமல் அழைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது வலம்புரிஜான் எம்.பி. அவர்களின் வழக்கம்.

அது போலவே நாங்களும் அந்த எண்ணத்தோடு செயல்பட்டோம்.

ஆனால், அந்த அலுவலகம் இப்போது பழமுதிர்ச்சோலை கடையாக மாறி விட்டது.

சரி எதுவாக இருந்தாலும் மற்றவர்களுக்கு பயன்படுகிறதே என்று நினைத்துக் கொண்டு நான் இப்போதெல்லாம் கடந்து விடுகிறேன்.

நான் எப்படி வேலைக்குச் சேர்ந்தேன் என்பது ஒரு அதிசயமான நிகழ்வு. அதை பிரிதொரு சமயத்தில் சொல்கிறேன்.

நான் தாயில் இணைந்த பிற்பாடு என்னை பிழைத்திருத்தம் செய்யும் வேலைக்கு என்னை நிர்பந்தித்தார் எனக்கு மேலாக இருந்த மூத்த துணை ஆசிரியர் பொன்.ஜெயந்தன்.

நான் கடுமையாக கோபம் கொண்டு முடியாது என்று முற்றிலும் மறுத்து விட்டேன்.

பிழைத் திருத்துவது தான் என் வேலை என்றால் இந்த வேலை எனக்கு வேண்டாம்.

எழுத்துப் பிழை திருத்த வரவில்லை, நான் மனிதர்களின் சமூகப் பிழையை திருத்துவதற்காக வந்திருக்கிறேன். இப்படி அடுக்கு மொழியில் கோபமாகப் பேசி விட்டேன்.

இப்படி உச்சஸ்தாயில் நான் பேசியது ஆசிரியர் வலம்புரிஜான் காதுக்கு எட்டியது.

அழைத்தார்.

“அவர் சொல்வது சரிதானே. அவர் என்ன விரும்புகிறாரோ, அந்தப் பணியை செய்ய விடுங்கள். அவரிடம் ஒரு அக்கினி கோபம் இருக்கிறது. அது நம் பத்திரிகைக்கு பயன்படும்“ என்று சொல்லி பொன்.ஜெயந்தனை அனுப்பி விட்டார்.

கொடுத்த வேலையை செய், இல்லை என்றால் போய்விடு என்று சொல்ல எவ்வளவு நேரம் பிடித்திருக்கும்? ஆனால், அப்படி செய்யவில்லை ஆசிரியர் வலம்புரிஜான்.

அன்று முதல் இன்று வரை சொற்களின் பிழையைத் திருத்துவது என்றாலே எனக்கு ஒரு எரிச்சலும் அலுப்பும் வந்து விடுகிறது.

மொழி சார்ந்த வல்லுநர்கள் இப்படிச் சொல்வதை ஒரு தவறாக கூடக் கருதலாம்.

மொழி சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடில்லை. ஆனால், அதைவிட படைப்பின் பாடு பொருள் பொதிந்த சொற்கள் முக்கியம்.

மொழி சார்ந்த வல்லுநர்கள் முதலில் சந்திப்பிழை, ஒற்றுப்பிழை என்று அதிகமாக கவனம் செலுத்துவதுண்டு.

அது ஒன்றும் தவறு இல்லை, சரியானது தான். ஆனால், எனக்கு அது இன்றுவரை பிடிபடாமல் இருக்கிறது.

அதனால் அப்படியே இருந்து விடுகிறேன்.

பெரும்பாலும் பத்திரிகைகளில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி இதை பத்திரிகையில் பிரசுரம் ஆகுமா என்று கேட்பதற்காக படைப்பாளர்கள் வருவதுண்டு.

அவர்களை பத்திரிக்கை அலுவலகம் வாசலில் நிற்க வைத்து யார் உனக்கு என்ன வேண்டும்?

கட்டுரையா, கவிதையா என்று கேட்டு வாசலில் நிற்கும் வாட்ச்மேனே என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று அந்தப் படைப்பாளனை உள்ளே அனுமதிக்காமல்  வெளியே அனுப்பி விடுவது வழக்கம்.

அதுபோன்ற சம்பவங்கள் மிகப் பிரபலமான வார இதழ்களில் எனக்கே நடந்திருக்கிறது.

அந்த வலியை சுமந்து கொண்டு நான் அது போன்ற இடங்களுக்குச் பிறகு செல்வதில்லை.

இன்று வரையிலும் அப்படித்தான் பத்திரிகை உலகம் பெரும்பாலும் நடந்து கொள்கின்றன.

ஆனால், வலம்புரிஜான் ஆசிரியர் அப்படி ஒரு நிகழ்ச்சியை ஒரு நாளும்  எவரையும் நடத்தியது இல்லை. அதே போல் நாங்கள் நடந்து கொண்டதுமில்லை.

புகழ் வாய்ந்த படைப்பாளர்களையும், நட்சத்திரங்களையும் சேர்த்து சேர்த்து வைத்து பிரசுரித்து வளர்வதை விட எளிய மக்களுடைய எண்ணங்களை தாங்கி வருவது தான் ‘தாய்’ மகிழ்ச்சி கொள்ளும் என்று ஆசிரியர் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

அதன்படி தான் நாங்களும் நடந்து கொண்டிருக்கிறோம்.

அலுவலகத்திற்கு வருகிற புதிய படைப்பாளர்களை நாங்கள் வெளியே வந்து சந்தித்து பேசுவது உண்டு. அவருடைய படைப்பை நாங்கள் பிரசுரிப்பது உண்டு.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பெரியார் திடலில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு நடந்தது.

அந்த கவியரங்க நிகழ்வை திரைப்பாடல் ஆசிரியர் நண்பர் பழனிபாரதி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். நானும் அதில் கலந்துகொண்டு திருமா அவர்களைப் பற்றி கவிதை வாசித்தேன்.

உடன் யுகபாரதி, தென்றல், இளையகம்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த விழா மேடையில் அமர்வதற்கு முன் திருமாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ”ராசி உங்களுக்கு நினைவிருக்கிறதா“ என்றார்.

நான் ஒன்றும் புரியாமல் “என்ன?” என்று கேட்டேன்.

“நான் உங்களை ‘தாய்’ வார இதழ் தொடர்பாக சந்திக்க ஒரு நோட்டுடன் வந்தேன்“ என்றார்.

ஒன்றும் புரியாமல் விழித்தேன்.

“ஆமாம் அப்போது நான் கவிதைகளில் நேசம் கொண்டவனாக இருந்தேன். ஒரு நோட்டில் கவிதைகள் எழுதிக் கொண்டுவந்து ‘தாய்’ இதழில் பிரசுரிக்க உங்களை அணுகினேன். நீங்கள் வெளியே வந்தீர்கள். கவிதைகளைக் காட்டினேன்.

கவிதை நன்றாக இருக்கிறது, பிரசுரிக்கிறோம். நிச்சயம் வெளிவரும் என்று சொல்லிவிட்டு, அதோடு நிற்கவில்லை…?!” என்று நிறுத்தினார்.

புரியாமல் அவரைப் பார்த்தேன்.

“வாருங்கள் முதலில் ஒரு தேநீர் அருந்துவோம்“ – என்று சொல்லி, கூடவே நடந்து வந்து சூளைமேடு ஒரு திருப்பு முனையில் உள்ள ஒரு தேநீர்க் கடையில் தேநீர் வாங்கிக் கொடுத்து கவிதைகளைப் பற்றி பேசினீர்கள்.

அந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது“ என்றார்.

என் உடல் சிலிர்த்து விட்டது.

ஏன் திருமாவை கொண்டாடுகிறார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது.

ஒரு எளிய மழைத்துளி போல தன்னை உருவகித்துக் கொண்டு மனித நேயத்தோடு தலைமைப் பண்பு திருமாவளவனுக்கு இயல்பாகவே இருக்கிறது. என நினைத்து, நினைத்து நெகிழ்ந்தேன்.

இப்படிப் படைப்பாளர்களைக் கொண்டாட சொல்லித் தந்த வலம்புரிஜான் அவர்களுக்கு என் மூலம் ஒரு நெருக்கடி நிகழ்ந்தது.

அது என்ன நெருக்கடி?!

தமிழ்தான் நெருக்கடி?!

(தொடரும்…)

You might also like