மழைத் தூறல்களின் இடைபுகுந்து
பறந்து வந்த ஒரு மஞ்சள் வண்ணத்துப் பூச்சி
என் குடைக்குள் இடம் தேடி நுழைந்தது
வண்ணக் குடையை மலரெனவும்
குடை ஏந்தி நடக்கும் என்னை
காற்றிலாடும் செடியெனவும்
அது கண்டிருக்கக் கூடும்
தூறல் தூவா குடை எல்லையை வட்டமடித்து
கைப்பிடி காம்பில் அமர்ந்துகொண்டது
அந்த வண்ணத்துப்பூச்சியை
ஒரு செவ்வந்திப் பூ செடி மேல்
இறக்கிவிட மெதுவாக தட்டினேன்
அது அடம்பிடிக்கும் குழந்தையாக
மறுபடி குடைக்குள் பறந்து வந்து
குறுக்குக் கம்பி மடல் மேல்
தொற்றிக் கொண்டது
நான் குடையேந்தி தொடர்ந்து நடக்கிறேன்
சர்க்கஸ் கூடாரத்தில் அந்தரத்தில் பறந்தாடும்
யுவதி போல
குடைக் கம்பிகள் மீதாக அசைந்தாடி
பறந்து வந்தது அது
சொர்க்கத்திலிருந்து சிறகுகளோடு
இறங்கி வந்த சின்ன தேவதையின்
முகம் வாடக் கூடுமென
குடையை மடக்காமல்
மலர்த்தியபடி என் முற்றத்தில் வைத்தேன்
கார்காலத்தைக் கழிக்க
ஒரு சின்னஞ் சிறு உயிருக்கு
வண்ணக் கூடாகியது
எனது குடை
- ப. கூத்தலிங்கம்