பிரபுதேவாவை ஒரு நடனக்கலைஞராக, கொரியோகிராபராக, இயக்குனராக, தயாரிப்பாளராக அறிந்தவர்கள் அனைவருக்கும் அவர் ஒரு அட்டகாசமான நடிகர் என்பது தெரியும்.
அதிலும், தன் தோற்றத்திற்கு ஏற்ற வேடங்களை மட்டுமே ஏற்று நடித்த வகையில் இன்றிருக்கும் பல இளம் ஸ்டார்களுக்கு அவர் ஒரு முன்னோடி.
2000களில் பிரபுதேவா நடிப்பது அரிதாகிப் போனது. அதற்கேற்ப, அவர் திரைப்பட இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேவி, தேவி 2, லக்ஷ்மி என்று நாயகனாக நடிக்கத் தொடங்கியபோது, அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ அப்படியொரு மகிழ்ச்சியை பிரபுதேவா ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சாதாரண மக்களுக்கும் தந்திருக்கிறதா?
புளித்துப்போன கதை!
மிகவும் ’ஸ்ட்ரிக்ட்’ ஆன ஒரு போலீஸ் அதிகாரி. ஒரு நீதிபதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்காக அமர்த்தப்படுகிறார்.
அவர் விசாரணை செய்யும் முறை, அவர் இடம்பெற்ற சிறப்புக்குழுவினரிடம் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
மிக விரைவிலேயே, அவர் ஒரு ‘முரட்டு’ போலீஸ் அதிகாரி என்பதை சக போலீஸ்காரர்கள் புரிந்துகொள்கின்றனர். அதற்குள், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் குண்டுவெடிப்பில் பலியாகிறார்.
கொலையான இருவரோடும் தொடர்புடைய ஒரு பிசினஸ்மேனுக்குப் பாதுகாப்பு தரச் செல்கிறார் அந்த போலீஸ் அதிகாரி. அவரது நம்பிக்கைக்கும் பாத்திரமாகிறார்.
இடைப்பட்ட காலத்தில், அந்த பிசினஸ்மேனை கொல்லும் முயற்சியில் ஒரு முதியவர் ஈடுபட்டது கண்டறியப்படுகிறது. யார் அந்த முதியவர் என்று கண்டுபிடிக்கும்போது, அந்த பிசினஸ்மேனை பினாமியாக வைத்திருக்கும் ஒரு பெருநிறுவன முதலாளியின் குற்ற முகம் தெரிய வருகிறது.
அதன்பிறகு, நாயகனான போலீஸ் அதிகாரி என்ன செய்கிறார் என்பது மீதிக்கதை. அந்த அதிகாரிதான் பிரபுதேவா என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
இப்படத்தை இயக்கியிருக்கும் முகில் செல்லப்பன், பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.
குருவை நாயகனாக ஆக்கியவர், கதைக்கு பெரிதாக மெனக்கெடாமல் என்பதுகளில் வந்த தமிழ், தெலுங்கு, மலையாள, இந்தி சினிமாக்களை துணையாக்கியிருக்கிறார்.
புளித்துப்போனதோடு ரசிகர்கள் மறந்துபோன கதைக்களமொன்றில், முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் பிரபுதேவா நடித்திருக்கிறார் என்பதே ‘பொன் மாணிக்கவேலி’ன் சிறப்பம்சம்.
அசத்தும் பிரபுதேவா!
ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் படமொன்றில் பிரபுதேவா நடிக்க வேண்டுமென்ற ஆசை எத்தனை ரசிகர்களுக்கு இருக்குமென்று தெரியாது. ஆனால், ஒரு ரசிகராக அதனைச் செயல்படுத்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர் முகில்.
பிரபுதேவாவின் பாத்திர வடிவமைப்பு ‘டெம்ப்ளேட்’டாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. நிவேதா பெத்துராஜ் உடனான ரொமான்ஸ், பிளாஷ்பேக் காட்சிகளில் காட்டும் எமோஷன், சண்டைக்காட்சிகளில் தென்படும் துறுதுறுப்பு, முகத்தில் இருக்கும் சுருக்கங்களை மீறி உடல்மொழியில் நிறைந்திருக்கும் இளமை என்று அசத்தியிருக்கிறார் பிரபுதேவா.
நிவேதா பெத்துராஜுக்கு ஒரு பாடல் காட்சியும் அரை டஜன் காட்சிகளும் மட்டுமே தரப்பட்டிருக்கிறது. ஆனாலும், ‘பீல்குட்’டாக வந்து போகிறார்.
பிரபுதேவா உடன் வரும் போலீஸ்காரர்களில் தெலுங்கு நடிகர் பிரபாகர் முகம் மட்டுமே மனதில் பதிகிறது. சுரேஷ் மேனன், உதயபானு மகேஷ்வரன், ‘மெட்ராஸ்” சார்லஸ் வினோத், வில்லனாக வரும் சுதான்ஷு பாண்டே ஆகியோருக்கு ‘ரேஷன் முறை’யில் நடிக்க வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
மறைந்த இயக்குனர் மகேந்திரனுக்கு இதில் அளவாக முகம் காட்டும் வேடம்.
சுமாரான திரைக்கதை!
டி.இமான் இசையில் ‘உதிரா உதிரா’ மெலடியாக கரைய.. பிரபுதேவாவின் ஆட்டத்துக்கு உத்தரவாதம் தருகிறது ’சிட்டான் சிட்டான்’ பாடல்.
கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு மிகக்குறைந்த நாட்களில் அவசரமாக படம்பிடிக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. காட்சிகளை முன்பின்னாக விளக்கும் திரைக்கதை குழப்பத்தை மீறி நேர்த்தியாக அமைந்திருக்கிறது சிவா நந்தீஸ்வரனின் படத்தொகுப்பு.
திரைக்கதையில் நிறைந்திருக்கும் ‘க்ளிஷே’க்கள் மட்டுமல்லாமல், சாதாரண ரசிகர்கள் கேள்விகளை அடுக்கும்விதமாக பின்பாதியை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒரு போலீஸ் அதிகாரி சிறைக்குச் சென்று திரும்புவதும், குறிப்பிட்ட அதிகாரியுடன் இணைந்து ரகசிய ஆபரேஷனில் ஈடுபடுவதும் அதற்கான உதாரணங்கள்.
90-களுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் வழக்கொழிந்துவிட்ட சில விஷயங்களைப் படம் முழுக்க வாரியிறைத்திருக்கிறார் முகில் செல்லப்பன்.
அதை தவிர்த்து திரைக்கதையில் ’ப்ரெஷ்னெஸ்’ கூட்டியிருந்தால், இப்படம் இன்னொரு ‘சேதுபதி’யாக அமைந்திருக்கும்.
உண்மையைச் சொன்னால், திரைக்கதையை மட்டும் செறிவாக அமைத்திருந்தால் பிரபுதேவாவுக்கு ஒரு ‘போக்கிரி’யாக அமைவதற்கான சாத்தியங்களைக் கொண்டது ‘பொன் மாணிக்கவேல்’. அது சாத்தியப்படாமல் போயிருப்பது, நடனப்புயலின் ரசிகனாக ஒரு பேரிழப்பை உணர வைத்திருக்கிறது.
– பா.உதய்