ஆட்டுக்காக காவலருக்கு நடந்த விபரீதம்!

அதிர்ச்சியூட்டுகிறது.

பொதுவாக ஆடுகளைத் தான் கோவிலுக்கு முன் நேர்த்திக்கடனாகப் பலியிடுவார்கள். பார்த்திருக்கிறோம்.

ஆனால் ஆட்டைத் திருடிக் கொண்டு போனவர்கள், ஒரு காவல்துறை அதிகாரியையே வெட்டிக் கொலை செய்திருப்பது கொடுமை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூலான்குடியில் இருந்து ஒரு ஆடைத் திருடிவிட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றவர்களை விரட்டிப் பிடிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை திருடர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்ட, அந்த இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

நள்ளிரவில் நடந்திருக்கிறது இந்தக் கொலை.

அதிகாலை வரை சாலையிலேயே கிடந்திருக்கிறது அவரது உடல்.

காவலர் பூமிநாதனின் வாக்கி டாக்கியும், செல்போனும் திருடர்களால் சேதப்படுத்தப் பட்டிருக்கிறது. பிறகு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறது அவருடைய உடல்.

அவருடைய குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றன. காவலர்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையா என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றன.

உயிர்களைப் பொறுத்தவரை மனித உரிமை ஆர்வலர்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. காவலர்கள் மூலம் யார் இறந்தாலும் வெளிப்படுத்துகிற அதே அக்கறையைத் தான், ஒரு காவலர் கொடுமையாகக் கொல்லப்பட்டாலும் காட்டுகிறார்கள்.

எந்த விதத்திலும் காவலர் பூமிநாதனுக்கு நடந்த அநியாயத்தை யாரும் தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது.

விரைவில் இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நமது வேலியைப் பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறது காவலர் பூமிநாதனின் படுகொலைச் சம்பவம்.

You might also like