அடர் மழைப் பொழுதில்
காலத்தில் இருந்து விழும் சொட்டாய்
நண்பனின் மரணம்.
நாற்பத்தைந்து வயது தாண்டுவதற்குள்
குளிர்ப்பெட்டியில் உறைந்திருந்தான்.
இருந்தும் மாலைகளை மீறிய மரண நெடி.
கடைசி நேரத்திய அவனின் முகச் சலனத்தை
உணர முடியவில்லை.
வெளியூர்களில் இருந்து வந்த
உறவுகளின் அழுகை கேட்டது சன்னமாக.
அவன் இல்லாத வெற்றிடம்
மங்கலாகத் தெரிந்தது.
நண்பன் மிகவும் பிரியம் வைத்திருந்த
இரண்டு குழந்தைகளும்
செல்போனுக்குள்
தங்களைத் தொலைத்திருந்தார்கள்
அந்த நேரத்திலும்.
கொஞ்ச நேரத்தில் மயானத்திற்கு
உடலைத் தூக்க இருந்த நிலையில்
வந்திருந்த வயதான உறவினர்
முகம் குனிந்து ததும்பலாகச் சொன்னார்,
“பிள்ளைகளுக்கு படிப்போடு
அவங்க விரும்பினதை எல்லாம்
வாங்கிக் கொடுத்தவன்,
அன்பா இருக்க
அவங்களுக்குக்
கத்துக் கொடுக்கலையே…”.
– அகில்