காந்தியை ஜின்னா பாகிஸ்தானுக்கு அழைத்திருந்தார். பிப்ரவரி 3-ம் தேதி கலவரங்கள் நடந்த பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதாக இருந்தார்.
காந்தி சுடப்படாமல் இருந்திருந்தால் உலகமே எதிர்நோக்கிய அந்த யாத்திரை மட்டும் நடந்திருந்தால் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
காந்தியைப் பார்க்க ருஸ்தம் சரபோஜி குடும்பத்தோடு வந்திருந்தார். அவரிடம் பேசியிருந்த பின் மீண்டும் தூங்கிப் போனார். அங்கே கொலையாளிகள் அவர்கள் திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு பழைய காலத்து காமிராவோடு பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சென்று காந்தியை படம் பிடிக்கிற மாதிரி நடித்துக் கொண்டே அவரை சுடுவது என திட்டமிட்டனர்.
அதுவே சந்தேகத்துக்குரியதாக மாறிவிடக் கூடாது என்று அந்த யோசனையை கைவிட்டனர்.
கறுப்பு அங்கி அணிந்த ஒரு முஸ்லீம் பெண்ணாக பிரார்த்தனை மைதானத்திற்குச் செல்லலாம் என நினைத்தனர்.
காந்திக்கு வெகு அருகே செல்ல வாய்ப்பு ஏற்படும் என்பதால் பர்கா ஒன்றை வாங்கினர். கோட்சேவுக்கு அதை அணிந்து கொள்வது ரொம்ப சிரமமாயிருந்தது.
இந்த நிலையில் சுடும்போது குறி தவறிவிடுமோ என்று சந்தேகம் வந்தது. அந்த யோசனையும் நிராகரிக்கப்பட்டது. இந்தத் தடவை குறி தவறிவிடக் கூடாது என்பதில் அப்படியொரு கவனம் இருந்தது கோட்சேவுக்கு. கடைசியாக ஆப்தேதான் அந்த யோசனையை சொன்னான்.
தொளதொளப்பான நீண்ட அங்கி அணிவது, துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்கு அதுவே சிறந்த வழியாகவும் இருக்கும் என முடிவு செய்தார்கள். நான்கு மணிக்கு பிர்லா சென்றார்கள்.
கோட்சே, கதர் அங்கிக்கு மேலே கைகளில்லாத காக்கி ஸ்வெட்டர் அணிந்து இருந்தான். ஆப்தேவும், கார்கரேவும் கோவிலுக்குள் சென்று வழிபடப் போனார்கள்.
கோட்சே உள்ளே செல்லாமல் வெளியே நின்று கொண்டான். காத்திருந்தான்.
காந்தி இந்தியாவின் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலுடன் பேசிக்கொண்டு இருந்தார். ஜவஹர்லால் நேருவுக்கும், வல்லபாய் பட்டேலுக்கும் நிலவிய கருத்து வேறுபடுகளை சரி செய்ய மகாத்மா முயற்சி செய்தார்.
மனுவும், அபாவும் பிரார்த்தனைக்குச் செல்ல தயாராகி காந்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெளியே முதலில் கோட்சேவும், பிறகு கொஞ்ச நேர இடைவெளியில் ஆப்தேவும், கார்காரேவும் வந்து முன் வாசல் வழியே நுழைந்து பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து இருந்தார்கள்.
சரியாக 5 மணிக்கு ஆரம்பிக்கிற பிரார்த்தனை கால தாமதமடைவதில் கலக்கமுற்று இருந்தான். நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒளி சாய்ந்து இருள் கவ்வ ஆரம்பிக்கிற மணித்துளிகள்.
மணி 5.10 ஆனது. அபா காந்தியின் கைக்கடிகாரத்தைக் காண்பித்து நேரத்தை நினைவூட்டினாள். மகாத்மாவும், பட்டேலும் எழுந்தார்கள். காந்தி அவரது செருப்புகளை அணிந்து கொண்டு புறப்பட, பட்டேல் விடைபெற்று நடந்தார்.
காலதாமதமானதால் காந்தி பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சுற்றி செல்லாமல் குறுக்காக நடந்து சென்றார். மனுவும், அபாவும் இருபுறமும் தாங்கி வர, அவரது கடைசி யாத்திரை ஆரம்பமாகியது.
மனுவிடமும், அபாவிடமும் வழக்கமான நகைச்சுவையோடு பேசிக்கொண்டே நடந்து வந்தார். புல்வெளி தாண்டி பிரார்த்தனை மைதானத்தின் அருகில் வந்தனர், மிக மிக முக்கியமான தருணம் வந்துவிட்டது.
காத்திருந்த கோட்சேவுக்கு மிக அருகில் அப்போது காந்தி இருந்தார். கோட்சே சட்டென்று கூட்டம் தாண்டி அவர் எதிரே வந்து நின்றான். கூப்பிய கைகளுக்குள் துப்பாக்கியை ஒளித்தபடி குனிந்து நமஸ்கரித்தான்.
அவன் குனிந்து காந்தியின் கால்களை முத்தமிடப் போகிறான் என்று மனு எண்ணிக்கொண்டு “சகோதரனே பாபுஜிக்கு ஏற்கனவே நேரமாகி விட்டது” என்று சொல்லிக்கொண்டே லேசாய் அவனை தள்ளிவிட எத்தனித்தாள்.
மகாத்மா கைகளைக் கூப்பி பதிலுக்கு நமஸ்கரிக்கும் நேரத்தில் கோட்சே சட்டென்று மனுவை வேகமாக தள்ளிவிட்டு துப்பாக்கியோடு காந்தியின் எதிரே நின்றான்.
ஒரு கணம்.. ஒரு கணம்.. அந்த கண்களைப் பார்த்தான். அதே நேரம் விரல்கள் சுண்டிவிட சுண்டிவிட.. சுண்டிவிட.. மூன்று தோட்டாக்கள் காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் பாய்ந்தன.
கூப்பிய கரங்களோடு காந்தி மண்ணில் சாய்ந்தார். அந்த மகாத்மாவின் 78 ஆண்டு கால பிரயாணம் அந்த இடத்தில் முடிவுற்றது.
– பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ஜா.மாதவராஜனின் ’காந்தி புன்னகைக்கிறார்’ என்ற நூலிலிருந்து…