மொழி உணர்வு: முன்னணியில் நின்ற பெண்கள்!

பரண் :

மொழிப்போராட்டம் இதே தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும்போது பெண்களும் அதில் பரவலாகக் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் பலருக்கு இப்போது வியப்பைத் தரலாம். பல நூற்றுக்கணக்கான பெண்கள் அப்போது கைதாகியிருக்கிறார்கள்.

மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் எஸ்.தருமாம்பாள் உள்படப் பல பெண்கள் 1938 நவம்பர் 13 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது நடந்த விசாரணை – அந்தப் பெண்களின் மன உறுதிக்கு ஓர் உதாரணம்.

தருமாம்பாள் : இந்தி வந்தால் தமிழர்கட்குக் கெடுதல் உண்டாகும் என்பதை வீட்டிற்கும் போய்ச் சொல்ல முடியாது. இது மாதிரி ஊர்வலமாக வந்து கிளர்ச்சி செய்தால், தமிழர்கள் இதற்காவன செய்வார்கள்.

அரசியலாரும் தங்கள் தவறை உணருவார்கள். இதற்காக நாங்கள் ஊர்வலமாக வந்து பள்ளியின் முன் மறியல் செய்தோம்.

நீதிபதி : இதை விடுத்து, வேண்டுமானால் ஒவ்வொரு வீட்டிற்கும் போய்க் கத்துங்களேன்.

தருமாம்பாள் : எங்களுக்கு எல்லோருடைய வீடுகளும் சரியாகத் தெரியாது. தயவுசெய்து தாங்கள் ஒரு பட்டியல் கொடுத்தால் அவ்வாறு செய்வோம்.

பிராசிகூட்டிங் இன்ஸ்பெக்டர் : நீங்கள் செய்தது தவறு என்று உணர்ந்து நீங்கள் இனி இது போல் செய்யவில்லை என்று கூறினால் உங்களை மன்னித்துவிடுவதாகச் சொல்கிறார் நீதிபதி.

தருமாம்பாள் : அதற்காக நாங்கள் இங்கு வரவில்லை.

இராமாமிர்தம் : எங்கள் தாய்மொழியை வேண்டாம் என்று சொல்லச் சொல்கிறீர்களா? அது முடியாது.

நீதிபதி : என் கடமையைச் சொன்னேன். ஆனால் எனக்கு முன்பே தெரியும் நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று.

தாய்மார்கள் அனைவரும்: எங்கள் தாய்மொழிக்காக – உரிமைக்காகப் போராடினோம். தவறு செய்தால் அல்லவா நாங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். நாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லையே.

பிராசிக்கூட்டிங் இன்ஸ்பெக்டர் : நீங்கள் உங்கள் செய்கை தவறானதென்று உணர்கிறீர்களா? உணர்ந்தால் உங்களுக்கு ரயில் கட்டணம் கூடக் கொடுத்து அனுப்புவோம்.

தொண்டர்கள் : நாங்கள் அதை விரும்பவில்லை. தாய்மொழி தான் எங்களுக்கு முக்கியமானது.


பின்னர் நீதிபதி தாய்மார்கள் அனைவருக்கும் 50 ரூபாய் அபராதம் அல்லது 6 வாரம் வெறுங்காவல் என்று தீர்ப்புக் கூறினார்.

You might also like