விரும்பி ஏற்ற வலைதளச் சிக்கல்!

சமூக ஊடகங்கள் மிகப் பெரிய தாக்கத்தை, அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தி வருகின்றன என்பதை மறுக்க முடியாது.

இப்போதெல்லாம், பிரச்சனை உள்ள இடங்களில் அரசாங்கங்கள் முதலில் தடை செய்வது, வலைதளங்களைத்தான். அதன் மூலமாகத்தான் தொடர்புப் பரவல் மிக எளிதாக நடக்கிறது என்ற காரணத்தினால் இதை செய்கிறார்கள்.

இந்தத் தொடர்புகள், சமூக ஊடகங்கள் மூலமாக, அதுவும் தொலைக்காட்சி சேனல்கள் தவிர்த்த வலைதள ஊடகங்கள் மூலமாகப் பகிரப்படும் செய்திகள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திகின்றன.

முக்கிய நபர்கள், தேசத் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் என ஆரம்பித்து யார் டிவிட்டரில் பதிவிட்டாலும் அது அன்றைய செய்தியாக மாறுகிறது.

இது மட்டுமின்றி, மக்களிடையே நேரடித் தொடர்பு என்பது சுருங்கி வலைதள ஊடகம் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுவது மிக இயல்பாக நடந்து வருகிறது.

நான்கு பேர்கள் உள்ள குடும்பத்திலிருந்து உறவுகள் குழுக்கள் வரை வாட்ச் ஆப் இல்லாத குடும்பங்கள் மிகக் குறைவு என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

இதனால் நமது தொடர்பு முறை, விருப்பு, வெறுப்புகளைத் தெரிவிப்பது, பெறுவது என எல்லாமே வார்த்தைகளுக்குப் பதில் ‘லைக்ஸ்’களாகவும் ‘ஈமோஜி’களாகவும் சுருங்கிவிட்டன.

இந்த வலைதள சமூக ஊடகங்களால், ஜனநாயக முறையிலிருந்து துவங்கி தனிப்பட்ட உறவுகள், நட்புகளைத் தீர்மானம் செய்கின்றன என்றால் அது மிகையே ஆகாது.

இது மட்டுமின்றி, எந்த விதமான செய்தியைப் பரப்பவும் இவை மிகவும் பயன்படுகின்றன.

தீவிரமான பாதிப்புகள்

எல்லாவற்றுக்கும் பதிலியாக அதை நினைத்து செயல்படுவது என ஆரம்பித்து வலைதள விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்கள் ஆகியன இளைய தலைமுறையை மட்டுமின்றி பெரியவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

இதைப் பற்றி, பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் பலரும் ஆராய்ச்சி செய்தனர். மேற்குறிப்பிட்ட விஷயங்களைக் காரணமாகக் காட்டி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

சமூக ஊடகங்களைப் பற்றிய ஆய்வாக மட்டுமின்றி, அதன் பயன்பாட்டை மட்டும் தெரிந்து கொண்டு, அதன் விளைவை அறியாமல் இருக்கும் போக்கு உலகம் முழுமையும் இருக்கிறது. இது ஆபத்தான விஷயம் என்கிறார்கள்.

”நாம் உலகளாவிய விதத்தில் பல்வேறு மட்டங்களில் செயல்பாடுகளை, நடத்தைகளை, மாற்றும் வல்லமை படைத்த தொழில் நுட்பத்தை உருவாக்கியிருக்கிறோம். அதை பயன்படுத்தவும் செய்கிறோம்.

ஆனால் அதனால் என்ன நடக்கும் என்பது பற்றி எந்தக் கணிப்புமின்றி இது நடந்து விட்டது. இதை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்பது பற்றியும், உலக அளவில் எந்தத் திட்டமும் இது வரையில் இல்லை” இதை சொன்னவர், ஜோசப் பி. பாக் கால்மென் என்கிற ஆய்வாளர்.

பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆய்வாளர்களும் சேர்ந்து கொண்டனர். இந்த ஆய்வு ஆவணத்தின் பெயர் ‘நெருக்கடி கால ஒழுக்க நெறியறைகள்”

இவருடன் சேர்ந்து இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள், கால்மேன் மற்றும் ராக்கேல் மொரான் ஆகியோர் வாஷிங்க்டன் பல்கலைக் கழகம், மார்க் அல்ஃபெனோ, ஆஸ்திரேலியன் கத்தோலிக பல்கலைக் கழகம், உல்ஃப்ராம் பார்ஃபஸ், டுபிங்கன் பல்கலைக் கழகம்,

மிகல் செண்டினோ, ஆண்ட்ரியு எஸ்.ஜெர்சிக், டானியல் ருபின்ஸ்டன் மற்றும் எல்கே.யு.வெபர் ஆகியோர் பிரின்ச்டன் பல்கலைக் கழகம், இயான் டி.கசின் கான்ஸ்டான்ச் பல்கலைக் கழகம்,

ஜொனாதன், ஸ்டாக்ஹோம் பல்கலைக் கழகம், மிர்தா கால்சிக் மற்றும் ஆல்பர்ட். பி.காவோ ஆகியோர் சாண்டா ஃபே இன்ஸ்டிடியூட், பவான் ரொமான்சக் ஹம்போல்ட் பல்கலைக் கழகம், பெர்லின், கையா ஜேடாம்பாக் மற்றும் ஜே வான் பேவல் ஆகியோர் நியுயார்க் பல்கலைக்கழகம் மற்றும் சிலர்.

இவர்கள் அனைவருமே பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். தங்களது துறைகளில் சமூக ஊடகங்கள் எப்படிப்பட்ட மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன என்பது பற்றி கோல்மேனுடன் சேர்ந்து ஆய்வு நடத்தினார்கள்.

யாருமே எதிர்பாராத விளைவுகள்

இவர்கள் கூறும் விஷயங்கள் மிக முக்கியமானவை.

“வலைதளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சமூக வலைதள ஊடகங்களை உருவாக்கியவர்களுக்கே, அவை எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியாமல்தான் இருந்தது.

அவை மனிதர்களின் மேல் ஒட்டுமொத்த அளவிலான தாக்கத்தை எந்த அளவுக்கு ஏற்படுத்தலாம் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை” என்கிறார் இந்த ஆய்வை சேர்ந்து நடத்திய கார் டி. பெர்க்ஸ்ட்ராம். இவர் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறை பேராசிரியர்.

கூட்டு நடத்தைப் பண்பு, பிற சிக்கலான கூட்டு நடவடிக்கைகள், அவற்றை உருவாக்கும் அம்சங்கள், கட்டுப்படுத்தும் விஷயங்கள், அவற்றின் புரிதல்கள் ஆகியன உண்மையிலேயே பலவீனமான நிலையில்தான் இருக்கின்றன.

“அவற்றின் மீது தாக்கம், கலக்கம் அடையும் நிலை ஆகியன ஏற்பட்டால், முதலில் மிக உறுதியாக எதிர்ப்பு நிலை, அதன் பின் எதிர்பாராத, மிகக் குழப்பமான, பல சமயங்களில் மாற்ற முடியாத நிரந்தர மாற்றங்களைதான் உருவாக்கும்” என்று கூறுகின்றனர்.

இதைத்தான் சமூக ஊடகங்கள் செய்கின்றன. நாம் சமூக ஊடகங்களால், மனித இனத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நடத்தை மாற்றங்கள் மற்றும் முடிவெடுக்கும் முறைமைகள் ஆகியவற்றைப் பற்றிய சரியான புரிதலே இல்லை என்கின்றனர்.

சமீபத்தில் உருவாகியுள்ள கொரோனா பாதிப்புக்கான எதிர்வினைக்கான நடத்தை மாற்றங்கள் சார்ந்த மிகப்பெரிய பிரச்சினையாகட்டும், நீண்ட கால பிரச்சினைகளான பருவ நிலை மாற்றங்கள், உணவு பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துகளை எதிர்கொள்ளத் தேவையான கூட்டு மாற்றங்கள் ஆகியனவற்றுக்கு ஒன்றுபட்ட நடத்தை மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

ஆனால், சமூக வலைதள ஊடகங்களால், தகவல்கள் பெறப்படும் விதம் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

குறிப்பிட்ட விஷயம் அது எதைப் பற்றியதாக இருந்தாலும், ஒரே விதமான தகவலாக போய்ச் சேரவில்லை.

இதனால் சரியான தகவல்கள் பரவி கூட்டாக எதிர்வினை அல்லது நடத்தை மாற்றம் என்பது மெதுவாகவே நிகழ்கிறது. அதற்குள் பல பாதிப்புகள் வந்து விடுகின்றன.

”பருவகால நிலைமாற்றம் பற்றி எந்த அளவுக்கு, தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் உலா வந்து, அதையே பொது ஊடகங்களும் திரும்ப செய்திகளாக மாற்றின என்பது பல முறை நடந்த விஷயம் என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சூழ்நிலையியல் இணைப் பேராசிரியரும், சக ஆய்வாளரருமான ஜென்னிஃப்ஃர் ஜாக்விட் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, கொரோனா உச்சத்தில் இருந்தபோதும் சமூக ஊடகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளான சோதனை செய்து கொள்வதன் அவசியம், முகக் கவசம், சமூக இடைவெளி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது, தடுப்பூசி ஆகியன பற்றி தவறான தகவல்கள் வந்ததால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தியாவிலும்கூட தலைவர்களின் ட்வீட்டுகள் எந்த அளவுக்கு மதிக்கப்படுகின்றன, செய்தியாகின்றன என்பது நமக்கே தெரியும்.

இது மட்டுமின்றி ஆய்வாளர்கள் தெரிவிப்பது போல, பல தனி மனிதர்கள் சேர்ந்துதான், ஒருமித்த ஒரு முடிவு எட்டப்படக் காரணமாக இருக்கிறார்கள்.

அதே சமயத்தில், தனி ஒரு மனிதன் தனது முக நூலில் போடும் பதிவை, அவனுக்குத் தெரிந்த யாராவது, மற்றவர்களுக்குப் பரப்பினால் இதேபோல தொடர்ந்து சென்று கடைசியில் அது பொதுக் கருத்தாகி விடுகிறது.

இதுபோன்ற பதிவுகளுக்கு அரசாங்கம், அதிகாரத்தில் இருப்பவர்களே பயப்படுகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு.

பல தனி மனிதர்கள் சமூக ஊடகங்களை பொறுப்பற்ற முறையில் அல்லது நோக்கத்தோடு பயன்படுத்தினால், அதனால் ஒட்டு மொத்த சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படும் அல்லது தாக்கம் ஏற்படுத்தும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு.

இது அரசியலில் இருந்து ஆரம்பித்து, கலை, இலக்கியம், பண்பாடு, உறவுகள், அறிவியல் என்று எல்லா அம்சங்களையும் தொட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதில் உள்ள அபாயம் என்கின்றனர்.

ஏனெனில் இதுபோன்ற பதிவுகளைப் போடுபவர்களுக்கு அது எந்த மாதிரியான தாக்கம் ஏற்படுத்தும் எனத் தெரியாது. ஆனாலும் அதைப்பற்றி சிந்திப்பதே இல்லை.

இதுபோன்ற சமூக ஊடகங்கள் இல்லாதபோதும், கணக்கற்ற தனி மனிதர்களுக்கு மிகப் பல விஷயங்களைப் பற்றி கருத்துக்கள் இருந்தன.

அவற்றை பெரும்பாலும் பலரும் வெளியில் தேவையின்றி சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும், விரல் விட்டு எண்ணக் கூடியவர்களுக்குத்தான் தெரியும்.

இப்போது நிலைமை தலைகீழ். அப்படி பதிவிடுபவர், மற்றவர்களைக் கேட்டு பதிவிட வேண்டியதில்லை. உண்மைத் தன்மையை ஆராயத் தேவையில்லை.

அவருக்கான, முகநூல், இன்ஸ்டா என ஆரம்பித்து, எதில் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பதிவிடலாம்.

இது பல்வேறு காரணங்களுக்காக பரவிக் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் பேசு பொருளாகிறது. இதுதான் ஆபத்தாகிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

“நாம் நமது நடத்தை, சிந்தனா முறை ஆகியவற்ரை மாற்றும் சக்தி படைத்த ஒரு பெரும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து, அதை உலகளாவிய அளவில் கொண்டு சென்று விட்டோம்.

ஆனால், அதனால் எழக்கூடிய பிரச்சினைகளை களைவதற்கு அல்லது குறைப்பதற்கான வழி முறைகளைக் காணவில்லை” என்று கூறுகிறார் தலைமை ஆய்வாளர் ஜோசப் பி – பாக் கோல்மேன்.

இவர் வாஷிங்டன் பலகலைக்கழகத்தில் செயல்படும் ”தகவல் அறிந்துணர்ந்த மக்களுக்கான மையம் (Center for an Informed Public) என்ற ஆய்வு அமைப்பின் தலைமை ஆய்வாளராக பணிபுரிகிறார்.

சமூக ஊடகங்களால் அரசியல், பொருளாதார, கல்வி உள்ளிட்ட பலவற்றில் பெரும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது.

சமூக ஊடகங்கள் என்று அழைக்கப்படும் வலைதளங்கள் எவ்வளவு இருக்கின்றன, அவற்றை எவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

தனஞ்செயன்

You might also like