ஜப்பானில் வேகமாக பரவி வரும் ‘பாட் ஓட்டல்’ கலாச்சாரம் இந்தியாவிலும் அறிமுகமாகி உள்ளது. மும்பை ரயில் நிலையத்தில் முதலாவது பாட் ஓட்டல் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மும்பைக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்கு இந்த ஓட்டல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
சரி அது என்ன பாட் ஓட்டல் என்கிறீர்களா? அதைப்பற்றி முதலில் தெரிந்துகொள்வோம்.
பொதுவாக நாம் ஒரு ஊருக்கு சுற்றுலாவுக்காகவோ அல்லது வேலை சார்ந்த விஷயங்களுக்காகவோ செல்வதாக இருந்தால் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்குவோம்.
அந்த அறைகள் பல்வேறு வசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், அதன் வாடகை நமக்கு கட்டுப்படியாகாது. மேலும் சில ஊர்களில் ஓட்டல் அறைகளைக் கட்ட போதுமான இட வசதிகளும் இருக்காது.
இந்தச் சூழலில்தான் ஜப்பான் நாட்டில் ‘பாட் ஓட்டல்’ அறிமுகமானது.
இந்த பாட் ஓட்டலில் அறைகள் இருக்காது. அதற்கு பதிலாக சேப்டி லாக்கர்களைப் போல சின்னச் சின்ன கேப்சூல் வடிவ அறைகள் இருக்கும். ரயில்களில் பர்த்துகளில் படுத்துக்கொண்டு நாம் பயணிப்பது இல்லையா. அதேபோல் இந்த கேப்சூல் அறைகள் இருக்கும்.
இந்த அறைகளின் அகலம் சுமார் 3 அடிகளாகவும், உயரம் 3 அடிகளாகவும், நீளம் சுமார் 7 அடிகளாகவும் இருக்கும். இந்த அறைக்குள் நம்மால் நடக்கவோ, நிற்கவோ முடியாது. ஆனால் அமர்ந்துகொள்ள முடியும்.
டிவி, இன்டர்நெட், சிறிய பிரிட்ஜ், மின் வெளிச்சம், ஏசி என அனைத்து வசதிகளும் இருக்கும். இந்த கேப்சூல் அறைகளுக்கு வெளியே பொதுவான கழிப்பறை வசதிகளும் இருக்கும்.
மக்கள்தொகை அதிகமாக உள்ள டோக்கியோவில் பல பேச்சுலர்கள் இதுபோன்ற அறைகளைத்தான் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
இப்படி ஜப்பானில் பிரபலமான ‘பாட் ஓட்டல்’ இப்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
மும்பை ரயில் நிலையத்தில் இந்த ‘பாட் ஓட்டல்’ அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் ராவ்சாகேப் தான்வேயால் திறந்து வைக்கப்பட்ட இதில் 12 மணிநேரம் தங்குவதற்கான வாடகை ரூ.999. அதே 24 மணிநேரம் தங்குவதற்கு ரு.1,999 வாடகையாக செலுத்தவேண்டும்.
இந்த பாட் ஓட்டலில் வைஃபை வசதி, சிறிய லாக்கர், தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
இந்தியன் ரயில்வேயுடன் இணைந்து ஐஆர்சிடிசி இந்த ஓட்டலைத் தொடங்கியுள்ளது.
தற்போதைக்கு இங்கு 48 கேப்சூல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மும்பை ரயில் நிலையத்தில் இந்த ஓட்டல் அறைக்கு கிடைக்கும் வசதியைப் பொறுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-பிரணதி