அறிவுமதி: தமிழ்ச் சமூகத்திற்காக ஓங்கி ஒலிக்கும் குரல்!

பெண்ணுரிமை தமிழ் சினிமா எழுத்தாளர்கள்
இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று.

வீரத்தைக் குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது.!

– அறிவுமதி (சிறைச்சாலைக்காக)

‘என் ஒரு கரத்தில்
புல்லாங்குழல்
ஒரு கரத்தில் போர்முரசு.’

– என்று நஸ்ருல் இஸ்லாம் எழுதியுள்ள கவிதையைப் போல மென்மையும், வன்மையும் கலந்த கலவையாக அறிவுமதி இருக்கிறார்.

அன்புப் பொங்க ஆதரித்து இளம் படைப்பாளிகளை 73 அபிபுல்லா சாலையில் வைத்து வளர்த்தெடுக்கும் போதும், ‘கவிஞர்களே வாருங்கள் தெருவுக்கு’ என நிரந்தர மனிதர்கள் கவிதைத் தொகுப்பில் அழைப்பு விடுத்ததைப்போல தமிழினத்திற்காக களத்தில் நிற்கிற போதும் புரட்சிக் கவிஞரை நம் கண்முன் நிறுத்துகிறார் இலட்சியக் கவி அறிவுமதி.

படைப்பாளி சமூகத்தின் குரல். அவன் வாழுகிற இனத்தின் உள்ளத்தையும், உணர்வையும் உள்வாங்கி இனத்தால் பேசமுடியாத தருணங்களில் பேசவேண்டும்.

இனவிரோதிகள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களின் முகத்திற்கு முன்னால் தன் கருத்துகளைப் பதிவு செய்கிறவனின் குரல்கள் காலத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்.

அப்படி காலங்களைக் கடந்து ஒலிக்கப்போகும் குரல்தான் அறிவுமதியின் குரல். தமிழின் மீட்சிக்காக, தமிழினத்தின் உரிமைக்காக, தமிழகத்தின் விடுதலைக்காக தனது கவிதைகளையும் கருத்துகளையும் சமூக அரங்கில் ஆழமாக பதிவு செய்யும் அறிவுமதி தன்மான தமிழர்களின் அடையாளமாக உள்ளார்.

இன்று அல்ல தனது இளம் வயதிலேயே தனது கிராமத்தில், ஊர் வழமை என்கிற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைப்பதை எதிர்த்தவர்.

பெரியாரையும், அம்பேத்கரையும், மார்க்ஸ்சையும் படித்தவரென்பதால் தனக்கு தவறெனப்பட்டதை அரங்குகளில் மட்டுமல்ல, ஊடகங்களிலும் சுட்டிக்காட்ட தயங்காதவர்.

ஆளும் வர்க்கத்தினரின் தவறுகளையும், ஆதிக்க சமூகத்தினரின் சதிகளையும் அந்தந்த காலக்கட்டத்தில் சுட்டிக்காட்டி வருபவர் அறிவுமதி.

‘கவிஞர்கள் குடிபெயரும் பறவைகள் அல்லர். சொந்த நாடோ, ஊரோ, வீடோ, கணப்போ இல்லாத கவிதை வேர் இல்லாத மரம். கூடில்லாத பறவை’ என்கிற ரசூல் கம்சதோவ்வின் கருத்து மக்கள் இலக்கியம் படைக்கிற எல்லோருக்குமானது. ரசூலின் வரிகளுக்கு உயிர் கொடுத்து தமிழ் மண்ணில் நடமாட விட்டிருப்பவர் அறிவுமதி.

தன் தனிப்பட்ட இழப்புகள் எதுவந்தாலும் ஏற்றுக்கொள்ளும் இவர், இனமான இழப்பை எப்போதும் அனுமதிக்காதவர். அதனால் அறிவுமதி தமிழக இலக்கிய அரங்குகளில் கலகக்காரராக எப்போதும் அடையாளப்படுத்தப்படுகிறார்.

தவறாக புரிந்துக் கொள்ளப்படும் மிகச் சரியான தமிழர் மட்டுமல்ல மனிதர் அறிவுமதி என்பதை அவரோடு நெருங்கிப் பழகிய நல்லவர்கள் உணர்வார்கள்.

அறிவுமதி, தான் பங்கேற்கும் அரங்குகளில் இனமான உணர்வை சீண்டிப்பார்க்கும் செயல்கள் எது நடந்தாலும், எங்கு நடந்தாலும் தனது எதிர்ப்புணர்வை அங்கேயே வெளிப்படுத்த தயங்காதவர்.

சரியான நேரத்தில் சரியாக பதிலடி கொடுத்தீர்கள் என்று அரங்கில் இருந்த தோழர்கள் ஆதரவு கருத்தை தெரிவித்தாலும் தொடர்ந்து பல அரங்குகளில் அறிவுமதி மட்டுமே குரல் எழுப்பவேண்டியது கட்டாயமாகி வருகிறது என்பது தான் தமிழகத்தின் சாபக்கேடு.

தாய்மைத் ததும்பும் பேரன்பும், போர்வீரனைப் போன்ற மனத்துணிவும் ஒருங்கே பெற்றவனால் மட்டுமே சமூக அவலங்களுக்காக வருந்தவும், காரணமானவற்றுக்கு எதிராக குரலெழுப்பவும் இயலும். அழகுகளை அணு அணுவாய் இரசிக்க முடிந்தவனுக்குள் அசிங்கங்களை நீக்கி சமூகத்தை அழகுபடுத்த வேண்டும் என்ற முனைப்பு உண்டாகும்.

வலிமையிழந்த சமூகங்களின் வலிகளை எல்லாம் தனது வலியாக கருதி மருந்திட துடிக்கும் தாயுள்ளம் அறிவுமதியுடையது. தமிழின எதிரிகளின் கூடாரங்களில் ஊடக வெளிச்சம் தேடிடும் விட்டில் பூச்சிகளுக்கு எப்போடும் இது தெரியவாய்ப்பில்லை.

தமிழின விடுதலை, தலித் விடுதலை, பெண்விடுதலை என இயங்கும் தனது அரசியல் கருத்தியலுக்கு எதிராக பாடல்கள் எழுத நேர்கிறது என்பதாலேயே தவறுதலாக எழுதப்பட்ட சில பாடல் வரிகளுக்கும் தனது வருத்ததைத் தெரிவித்துக் கொண்டு திரைைப்படத்திற்குப் பாடல்கள் எழுதும் பணிகளை முழுமையாக புறக்கணித்தார்.

பொருளாதார வளமற்ற வாழ்வு தன்னுடையது என்ற போதிலும் பல இயக்குநர்கள் கேட்டுக்கொண்ட பின்னரும் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார், இருக்கிறார்.

பேசாமல் இருப்பது மனிதர்களுக்கு மரணமாகும்.’ என்ற பாப்லோ நெரூதாவின் கருத்தில் மிகுந்த நம்பிக்கையுடையவர் என்பதால் அவர் எப்போதும் தனிமனிதனாக இல்லாமல் சமூகமாக செயல்பட்டார், தமிழ்ச் சமூகத்திற்காக குரலெழுபினார்.

நல்ல தமிழ்த் திரைப்படக் கலைஞராக வளர்ந்து வரும் தங்கர்பச்சான் திரையுலகினரால் அவமரியாதை செய்யப்பட்ட போது தனது கருத்தை நக்கீரன் மூலம் வெளிப்படுத்திய அறிவுமதி, தங்கர் தவறு செய்தபோதெல்லாம் கண்டிக்கவும் தயங்கியதில்லை.

அறிவுமதியே தமிழ் ஓசை நாளிதழில் குறிப்பிட்டிருப்பது போல அவரை எந்த எல்லைக்குள்ளும் அடைக்க முடியாது. உலகத்தமிழர்களின் சார்பில் நின்று தமிழர் நலனுக்காக தொடர்ந்து குரல்கொடுப்பார்.

‘சுடுகாட்டு மணலில் / இருக்கிறது / என் அறிவின் வேலி.’ என்று சொன்ன மராத்திய கவிஞர் மர்தேகர்ரின் கவிதை வரிகள் அறிவுமதிக்கு முழுமையாக பொருந்தக்கூடியது.

எது எப்படி இருந்தாலும், எவர் என்ன நினைத்தாலும் எழுதினாலும் ‘கவிஞன் காலத்தின் குரல். ஒடுக்கப்பட்ட இனத்தின் சங்கநாதம். சமுதாய ஆன்ம சங்கீதம். மனித நேயமே உயிரும், உயிர்ப்புமாய் ஒலிக்கும்.’ என்று முனைவர் தி.லீலாவதி முட்டைவாசிகள் முன்னுரையில் சொல்லியிருப்பது போல அறிவுமதியின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் தமிழ்ச் சமூகத்திற்காக.

– இசாக்

நன்றி: கீற்று டாட் காம்

You might also like