பாட்டியின் இனிஷியலோடு வாழ்ந்த எஸ்.என்.லெட்சுமி!

எஸ்.என்.லெட்சுமியைத் தெரியுமா உங்களுக்கு?

பெயரை விட, அவருடைய உருவத்தைப் பார்த்ததும் பலருக்கும் சட்டென்று தெரியும்.

அம்மா மற்றும் பாட்டி வேஷங்களில் பல நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர்.

எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்தவர் நாகேஷூக்கு அம்மாவாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் அமர்க்களப்படுத்தியிருப்பார்.

இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு, பாலசந்தர் என்று பலருடைய படங்களில் இவரைப் பார்த்திருக்க முடியும்.

‘மகாநதி’ படத்தில் கமலுடன் நடித்திருக்கும் இவர் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் திருடும் பாட்டியாக ஜோராக நடித்திருப்பார்.

படப்பிடிப்புக்கு பியட் காரில் போகிற எஸ்.என்.லெட்சுமி வயதான பிறகும் கூட, டிரைவர் வைத்துக் கொள்ளாமல் தானே காரை ஓட்டிக் கொண்டு போவார்.

திருமணமே பண்ணிக் கொள்ளாமல் வாழ்ந்த ஒரு சில நடிகைகளில் இவரும் ஒருவர்.

தான் திருமணம் பண்ணிக் கொள்ளவில்லை என்றாலும், வருமானத்தில் ஆண்டுக்கு இரண்டு, மூன்று பேர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதை வழக்கமாய் வைத்திருந்தார்.

பிரபலமாக இருந்தாலும், தனிமையாக வாழ்ந்த இவருக்குப் பிடித்தது தியானம். அடிக்கடி அடையாறு பிரம்ம ஞானசபாவில் இருக்கும் தியான மண்டபத்திற்குப் போய், தியானத்தில் ஆழ்ந்து விடுவார்.

அப்பாவின் பெயரை இனிஷியலாக வைப்பார்கள். அதோடு பாட்டியின் பெயரையும் யாராவது வைப்பார்களா?

எஸ்.என்.லெட்சுமி அப்படித்தான் வைத்துக் கொண்டிருந்தார்.

சொர்ணத்தம்மாள் என்பது பாட்டியின் பெயர்.

அப்பாவின் பெயர் நாராயணன்.

இரண்டையும் சேர்த்து எஸ்.என். என்று இனிஷியலை வைத்துக் கொண்ட லெட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்பு மறையும் வரை,

செய்யும் நடிப்புத் தொழிலைத் திருந்தச் செய்து, தன்னுடைய சொந்த வருமானத்தில் யாரையும் நம்பியிராமல் வாழ்ந்த நடிகை என்பது சிறப்பு.

*

You might also like