மழைக்காலம் சில சமயங்களில் இதமாக இருக்கும். இப்போதோ கன மழையாய் மாறிப் பலரைத் தவிக்க விட்டிருக்கிறது.
வழக்கமாகத் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை மூலமாகத் தான் 48 சதவீதம் அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும்.
தற்போது ஒரே நாளில் 20 செ.மீ அளவுக்கு மேல் பல பகுதிகளில் மழை பெய்திருக்கிறது. இனியும் பெய்ய இருக்கிறது. அப்படிப் பெய்யும் பட்சத்தில் மழை பெய்யும் அளவு இதைவிட அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள 52 பாசனத் தேக்கங்களிலும், 39 ஆயிரம் ஏரிகளிலும் நீர் நிரம்பியிருக்கிறதா? பெரும்பாலான ஏரிகள் நிரம்பியிருப்பது விவசாய எதிர்காலத்திற்கு உதவலாம்.
ஆனால், விவசாயிகளின் நிகழ்காலத்திற்கு உதவவில்லை. அந்த அளவுக்குப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. மரங்கள் சாய்ந்திருக்கின்றன. பெரு நகரங்களுக்கு வெளியூர்களிலிருந்து வரும் காய்கறிகளும், பழங்களும் குறைந்திருக்கின்றன.
தமிழகத்தில் உள்ள 33 ஆற்றுப்படுகைகளில் சிலவற்றில் மிகையான நீர் பெருகியிருக்கிறது.
பெரும்பாலான நீர் கடலுக்குச் சென்று வீணானாலும், நிலத்தடி நீர் அளவு மேலெழ வாய்ப்பும், பம்ப்செட் வசதி உள்ள 13 லட்சத்திற்கும் அதிகமான கிணறுகளில் நீர் ஊறவும் வாய்ப்பும் இருக்கிறது.
பெரு நகரங்களில் இருந்த ஏரிகளை முழுக்க காண்ட்ராக்டர்கள் வீடுகளாக்கி விட்டார்கள். அரசு அலுவலகங்களாகவும் ஆக்கி, காவல்நிலையங்களும், நீதிமன்றக் கட்டிடங்களும் ஏரிகள் இருந்த இடங்களில் இன்றிருக்கிற நிலையில், யாரிடம் போய் முறையிடமுடியும்?
இந்த நிலையில் மழை நீர் போக்கிடம் இல்லாமல் எங்கு போகும்? அனுமதியுடன் இயற்கையின் அத்துமீறிக் கட்டப்பட்ட குடியிருப்புகளைத் தானே சூழும்?
மழை பெய்தாலும், அதை முறையாகப் பயன்படுத்த வகையற்ற நிலையில் தான் தற்போது இருந்து கொண்டிருக்கிறோம்.
வெறுமனே ஆறுதல் சொல்வதும், தற்காலிகமாக நிவாரணப் பொருட்களை வழங்குவதுமே தீர்வாகி விடாது என்பது இப்போது வெள்ளத்திற்கிடையில் மக்களைப் பார்க்க வந்த அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றாகவே தெரியும்.
சென்னை மாதிரியான பெரு நகரங்களில் மக்கள் இவ்வளவு அடர்த்தியாகக் குவியக் காரணம் இதே அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தான்.
அதன் பின்விளைவைத் தான் மழைக்காலத்திலும் அனுபவிக்கிறோம். பெரு வறட்சிக்காலத்திலும் அனுபவிக்கிறோம்.
திட்டக் கமிஷனில் இருப்பவர்களும், மத்திய நிதி ஆயோக் குழுவில் இருப்பவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் யோசிக்க வேண்டிய நேரம் இது.