ஆழ்ந்த உறக்கம் ஆயுளை நீட்டிக்கும்!

– சர்வதேச ஆய்வில் தகவல்

ஆரோக்கியமான இருதயத்தை உறுதிப்படுத்துவதற்கு தூங்குவதற்கான உகந்த நேரம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்படி இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பாக 43 முதல் 79 வயது வரை உள்ள 88 ஆயிரம் பேரிடம் இருந்து தகவல்களை பெற்று ஆய்வு செய்தது.

இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்க சென்றவர்களைவிட இரவு 11 மணிக்கு பிறகு தூங்குபவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்று ஆய்வில் தெரியவந்தது.

தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

இதனால் தினமும் குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.

மிக சமீபத்திய கண்டுபிடிப்பின்படி தூக்கம் தொடங்குவதற்கும் இருதய பாதிப்புக்கும் இடையேயான சாத்தியமான தொடர்பை பரிந்துரைக்கிறது.

இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் இது குறித்து அளித்த விளக்கத்தில்,

‘‘24 மணிநேர சுழற்சியில் தூங்குவதற்கான உகந்த நேரத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. நள்ளிரவுக்குப் பிறகு தூங்குவது மிகவும் ஆபத்தானது.

இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளைக் குறைக்கலாம்” என இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

நன்றாக தூங்குவதற்காக மது அல்லது மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

You might also like