குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மூன்று நாள் பயணமாக ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்துள்ளார்.
நெல்லூரில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “இப்போதுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்களைக் கண்டால், அரசியல் மீதே வெறுப்பு ஏற்படுகிறது. இவர்கள் மாற வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய வெங்கய்ய நாயுடு, “மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு நேரடியாக செய்யும் சேவையில் கிடைக்கும் மனநிறைவு உயர்ந்த பதவிகளில் கூட கிடைப்பதில்லை. குடியரசு துணைத் தலைவர் பதவி என்பது எனக்கு ஒரு அலங்காரம் என்றே கருதுகிறேன்.
இன்றைய சூழ்நிலையில், ஒரு பத்திரிகை மட்டும் படித்தால் உண்மை தெரியாது என்பதால் 4 அல்லது 5 நாளிதழ்களைப் படிக்க வேண்டியுள்ளது. அப்போதும் கூட உண்மை விளங்கவில்லை.
தற்போது சமூக வலைதளங்கள் சமூக விரோத வலைதளங்களாக மாறி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
தாய்மொழி நமக்கு மிகவும் முக்கியம். தாய் மொழி என்பது தனி மனிதனின் அடையாளம். இதனை நாம் இழக்கக் கூடாது” என்று பேசினார்.