எம்.ஜி.ஆரைப் பற்றி உலகம் உணரப் போகும் உண்மை!

ஜானகி எம்.ஜி.ஆரின் எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-41

என் அன்பு நாயகர் பெயரில் நாடகக் குழு ஒன்று இருந்தது. ஏறக்குறைய பத்துப் பெண்கள் இதில் பணிபுரிந்தார்கள். சி.டி.ராஜகாந்தம் அம்மாள் அவர்கள் இந்த நாடகப் பெண்கள் குழுவிற்குத் தலைவி போல் திகழ்ந்தவர்.

இதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் (செந்தாமரையின் மனைவி) கௌசல்யா, புஷ்பலதா, ஜி.சகுந்தலா போன்றவர்களைச் சொல்லலாம். இவர்கள் வெளியூர் செல்வதெல்லாம் தனி வேனில்தான்.

இவர்கள் நாடக மன்றத்தில் ஒரு கட்டுக்கோப்பு இருக்கும். பெண்கள் இருக்கும் இடத்திற்கு ஆண்கள் போகக் கூடாது. ஆண்கள் இருக்கும் பகுதிக்கு பெண்கள் திரும்பவே கூடாது.

ஒரு பெண்ணும் ஆணும் நாடகத்தில் நடிக்கும்போது வசனம் பேசுவதோடு சரி. லாயிட்ஸ் சாலையில் நாடக ஒத்திகை நடக்கும். சில வேளைகளில் இந்தத் தோட்டத்திலுள்ள தியேட்டர் ஹாலிலும் நடைபெறும்.

பொங்கல் நாள் வந்தால் நாடக மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி வேட்டி, சட்டையும் பெண்களுக்கு ஒரே மாதிரியான சேலை, ரவிக்கைத் துணியும் வழங்குவார்.

அதே உடைகள்தான் எங்களுக்கும். இங்கு வேலை செய்கிற டிரைவர்கள், வேலைக்காரர்கள், தோட்ட வேலை செய்வோர் என்று அனைவருக்கும் இது பொருந்தும். தவிர, அன்றைக்கு எல்லோருக்கும் பணம் கொடுப்பார்.

அன்புத் தலைவரின் நாடகக் குழுவில் நடிகர் புத்தூர் நடராஜன் இருந்தார். இவரோடு பெரும்பாலான படங்களில் சண்டைக் காட்சிகளில் புத்தூர் நடராஜன் நடித்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

இவருக்கும் என் அன்பு நாயகரிடம் உதவியாளராக இருந்த காலஞ்சென்ற திருப்பதிசாமிக்கும் வலிய அழைத்துப் பணம் கொடுத்து, “யார் புஹாரியில் அதிகம் சாப்பிடுகிறீர்களோ அவருக்கு நூறு ரூபாய் பரிசு” என்று சொல்லி அனுப்புவார் என் நாயகர்.

அநேகமாகப் பல தடவைகள் புத்தூர் நடராஜன்தான் இந்தப் போட்டியில் ஜெயிப்பார். இந்த புத்தூர் நடராஜன், நாடக மன்றத்தினருக்கு பொங்கல் நாளில் கொடுத்த புத்தாடைகளை அணியாமல் பழைய உடைகளோடு வந்தார்.

இதை யாராவது பார்த்தால் “மற்றவர்களுக்கு எல்லாம் புதுத்துணி வாங்கிக் கொடுத்தவர் இவருக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்து விட்டாரே… என்று நினைப்பார்களே” என என் அன்பு நாயகர் வருந்தினார். அதை நடராஜனை அழைத்தும் கேட்டுவிட்டார்.

புத்தூர் நடராஜன் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே, “உங்களை அவமதிக்கணும்னு எந்த ஜென்மத்திலேயும் நினைக்க மாட்டேன்.

நீங்க கொடுத்த புதுத்துணியை இங்கே எல்லோரும் கட்டிக்கிட்டு வாரோம். ஆனால் எங்க வீட்டிலே இருக்கிற மத்தவங்களுக்கு புதுத்துணி குழந்தைகள் கேட்கிற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? கம்பெனி சம்பளத்தில் எப்படியோ கௌரவமாக வாழறோம்.

இதுக்கு மேலே கம்பெனியில் பணம் கேட்க முடியுமா? அப்படி கம்பெனி கொடுத்தாலும் நாங்க எப்படி திருப்பிக் கொடுக்க முடியும்?” இந்த நிகழ்ச்சி என் அன்பு நாயகன் இதயத்தில் ஆழமாகத் தைத்தது.

“பெருவாரியான மக்கள் சமுதாயத்தின் வாழ்க்கை நிலையை எனக்குக் காட்டி விட்டார் நடராஜன்” என்று தனது நாடக மன்றத்தில் பணியாற்றிய தனது நண்பரின் கருத்தை நெஞ்சினில் நீண்ட காலம் நிலை நிறுத்தியவர் எனது அன்பு நாயகர்.

இப்படி யாரும் இனி இருக்க முடியாது. அவர்போல் இனி யாரும் வாழ்ந்து காட்ட முடியாது. சரித்திரம்கூட அவரிடத்தில் கொஞ்சம் நின்றுதான் தொடர்ந்து செல்லும். இது வெறும் வார்த்தைகள் இல்லை. உலகம் உணரப் போகும் உண்மை!

(05.03.1989)

You might also like