மூச்சுவிடத் திணறும் டெல்லி!

நாட்டின் பல இடங்களில் கொரோனா ஊரடங்கு இன்னும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த ஊரடங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது டெல்லி.

இந்த முறை ஊரடங்குக்கு காரணம் காற்று மாசு. பட்டப் பகலிலேயே எதிரில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு காற்று மாசால் டெல்லி சூழப்பட்டிருக்க, மூச்சு விடத் திணறிக்கொண்டு இருக்கிறார்கள் டெல்லி மக்கள்.

இந்தச் சூழலில் இன்னும் சாலையில் போக்குவரத்து தொடர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலை சமாளிக்க பள்ளிகளை உடனடியாக மூடிய டெல்லி அரசு, அடுத்த 2 நாட்களுக்கு ஊரடங்கை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தக் கடுமையான காற்று மாசின் பிடியில் டெல்லி சிக்குவதற்கு முக்கிய காரணமாக வாகனங்கள் கூறப்படுகின்றன.

இந்தியாவின் தலைநகராக டெல்லி இருப்பதால், வசதியான பலரும் அங்கு வாழ்கிறார்கள். அவர்களில் பலரும் சொந்தமாக வாகனங்களை வைத்துள்ளனர்.

அந்த வாகனங்கள் கக்கும் புகைகள் டெல்லியின் மூச்சுக்குழாயை இறுக்கி வருகிறது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) சமீபத்தில் நடத்திய ஆய்வில், டெல்லியில் ஏற்படும் காற்று மாசுக்கு, வாகனங்கள் 50 சதவீதம் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகள் 13.7 சதவீதமும், கட்டுமான பணிகள்  6.9 சதவீதமும் டெல்லியின் காற்று மாசுக்கு காரணமாக உள்ளன.

வாகனப் புகைகளால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்துவதற்காக ‘ரெட் லைட் ஆன், காடி ஆஃப்’ (சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்தால் வாகனத்தை நிறுத்துங்கள்) என்ற இயக்கத்தை டெல்லி அரசு கடந்த மாதம் தொடங்கியது.

மேலும் வாரத்தில் ஒரு நாளாவது தங்களின் சொந்த வாகனங்களை எடுக்காமல் இருக்குமாறு டெல்லி மக்களை முதல்வர் கேஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் இதைப் பலரும் கடைப்பிடிக்காததால், மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

வாகனப் புகைகள் ஒருபுறம் இருக்க, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில்  உள்ள விவசாயிகள், தங்கள் விவசாயக் கழிவுகளை ஏற்படும் புகையும் அங்கிருந்து நகர்ந்து டெல்லியை முற்றுகையிட்டுள்ளன.

இதனால் டெல்லி காற்றின் தரம் கடந்த சனிக்கிழமை 437 புள்ளிகளுடன் (இப்புள்ளி 50-ல் இருந்து 100-க்குள் இருந்தால்தான் மனிதர்கள் சுவாசிக்க சுத்தமான காற்று இருப்பதாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது) மிக மோசமாக இருந்தது.

நேற்றைய தினம் விடுமுறை என்பதால் அது 330 புள்ளிகளுக்கு குறைந்தாலும், அது இன்னும் மோசமான நிலையிலேயே உள்ளது.

டெல்லி மட்டுமின்றி, அதைச் சுற்றிய குர்கானில் 331, நோய்டாவில் 287, பரீதாபாதில் 321 என்ற அளவிலேயே காற்று மாசின் அளவு தொடர்ந்து இருந்து வருகிறது.

இதன் காரணமாக டெல்லி மக்கள் பலரும் நுரையீரல் தொடர்பான நோய்களால் தாக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு இருப்பவர்கள் வெளியில் வரவேண்டாம் என்ரும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழலில் அடுத்த 2 நாட்களுக்கு டெல்லியில் ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அத்தியாவசிய தேவை இருப்பவர்கள் மட்டுமின்றி வேறு யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் செய்ததுபோல் வீட்டில் இருந்தபடியே வேலைகளைச் செய்ய தொழிலாளர்களை அனுமதிக்குமாறு நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

கட்டுமான பணிகள் அனைத்தும் வரும் 17-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் டெல்லி நகரமே மூச்சுவிடத் திணறிக்கொண்டு இருக்கிறது.

இது என்னவோ டெல்லிக்கு மட்டும் வந்த பிரச்சினை என்று நாம் கருதிவிடக் கூடாது. இன்று டெல்லிக்கு வந்த பிரச்சினை, ஒரு சில ஆண்டுகளில் சென்னைக்கும் வரலாம்.

அதனால் காற்று மாசை கட்டுப்படுத்துவதில் இப்போதில் இருந்தே கவனமாக இருப்போம்.

– பிரேமா நம்பியார்

You might also like