மறைந்த தஞ்சை ராமமூர்த்திக்கு நினைவஞ்சலி!
அண்ணன் தஞ்சை அ.ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான தலைவர்.
பெருந்தலைவர் காமராஜர், இந்திராகாந்தி, சித்தார்த்த சங்கர் ரே, தேவராஜ் அர்ஸ், காங்கிரஸ் கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன், ரஜினி படேல், சந்திர ஜித் யாதவ், மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த சுக்லா போன்ற காங்கிரஸ் தலைவரகளோடு நெருக்கமாக இருந்தவர்.
தஞ்சாவூர் வட்டாரத்தில் கிரிமினல் வழக்குகளை நடத்தக்கூடிய மூத்த வழக்கறிஞர். தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினராகவும் இருந்தவர்.
தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் உண்டு. காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் பொதுவுடைமைச் சிந்தனைகளும் அவருக்கு அதிகம்.
எழுபதுகளில் மோகன் குமாரமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து காங்கிரஸில் சேர்வதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார். பிற்காலத்தில் மோகன் குமாரமங்கலம் மத்திய அமைச்சர் ஆனதும் உண்டு.
நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் மோகன் குமாரமங்கலம் போட்டியிட்டபோது, அண்ணன் தஞ்சை ராமமூர்த்தி அங்கிருந்து பணியாற்றியதெல்லாம் இன்றைக்கும் நினைவுக்கு வருகிறது.
தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் அண்ணன் ராமமூர்த்தி.
எனக்கும் அவருக்கும் அறிமுகம் 1972-ல். அன்றிலிருந்து என்னுடன் நெருக்கமும் பாசமும் கொண்டவர். எட்டயபுரம் பாரதி விழாவிற்கு வருவார். அருமையாக உரையாற்றுவார். அவரது உரையைக் கேட்பதற்கு அந்தக் காலகட்டங்களில் பலர் வந்தது உண்டு.
எங்களுடைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சோ.அழகிரிசாமியுடன் மிக நெருக்கமாக இருப்பார்.
அவர் எட்டயபுரத்திற்கு வரும்போதெல்லாம் உடனிருந்து அவரை உபசரித்ததெல்லாம் உண்டு.
‘கரிசல்காட்டு கவிதைச்சோலை’ என்ற எனது விரிவுபடுத்தப்பட்ட நூல் விரைவில் வர இருக்கிறது. பாரதி குறித்தான அரிதான கட்டுரைகள், பாரதி நண்பர்கள் எழுதிய கருத்துக்களைத் தேடி எடுத்து அதைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.
அந்த நூலுக்காக அண்ணன் தஞ்சை ராமமூர்த்தியிடம் பாரதி குறித்த கட்டுரைகளை கேட்டபொழுது தான் கடைசியாகப் பேசினேன். அதன்பிறகு பேச இயலவில்லை.
தஞ்சையாருக்கு நா.பார்த்தசாரதியுடனும் அகிலனுடனும் தொடர்புகள் உண்டு. அவருக்கு. தொ.மு.சி.ரகுநாதன், திகசியுடன் இவருக்கு தொடர்பு உண்டு. பாரதியின் மீது அளப்பரிய பற்று கொண்டவர்.
அவருக்கு சோவியத் இலக்கியங்களிலு தமிழ் இலக்கியங்களிலும் அளப்பறிய பற்றுண்டு.
ஜெயகாந்தனுடன் நட்பு பாராட்டுவார். ஜெயகாந்தன் மாதிரி மேடையில் கம்பீரமாக பேசுவார். மனதில் பட்டதைப் பேசுவார். உண்மையும் நேர்மையுமாக சொல்ல வேண்டியதைத் திருத்தமாகவும் அழுத்தமாகவும் சொல்லக் கூடியவர் தஞ்சை ராமமூர்த்தி.
இறுதியாக கடந்த 2000-ல் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் “மனித உரிமை சட்டங்களும்… சில குறிப்புகளும்” என்ற என்னுடைய நூலை (அகிலன் பதிப்பகம்) வைகோ வெளியிட ஜஸ்டிஸ் கிருஷ்ணசாமி பெற்றுக்கொண்டார்.
அந்த விழாவில் சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதர் அண்ணன் தஞ்சையார், இ.ரா.செழியன், எல்.கணேசன், மாலன், அனிதா பிரதாப், வழக்கறிஞர் சாந்தகுமாரி போன்ற பல ஆளுமைகள் கலந்து கொண்டார்கள்.
அண்ணன் தஞ்சை ராமமூர்த்தி இறுதியாகக் கலந்து கொண்டது இந்த நிகழ்ச்சியில்தான். இருபது வருடங்கள் ஆகிவிட்டன.
எவ்வளவோ நினைவுகள் அவரோடு. கடந்த 1979-80களில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் மயிலாப்பூர் சாய்பாபா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில் பழ.நெடுமாறன், கருப்பையா மூப்பனார், தஞ்சை ராமமூர்த்தி ஆகியோர் போட்டியிட்டனர்.
தஞ்சை ராமமூர்த்தி 6 வாக்குகளைப் பெற்றார். நெடுமாறன் மூப்பனாரிடம் 4 வாக்குகளில் தோல்வி அடைந்தார். தஞ்சை ராமமூர்த்தி அதில் போட்டியிடவில்லை என்றால் பழ.நெடுமாறன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகி இருப்பார்.
அப்படி அவர் தலைவராகி இருந்தால் எங்களைப் போன்றோரின் அரசியல் வாழ்க்கையே வேறு மாதிரி இருந்திருக்கும். தமிழ்நாடு அரசியல் சூழ்நிலையும் மாறியிருக்கும்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 1967 ல் ஆட்சியை இழந்தது. அப்போது, தேசிய திருவிழா என்று நினைக்கின்றேன், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்றது.
தஞ்சை ராமமூர்த்தி தலைமையில் வாழப்பாடி ராமமூர்த்தி, தண்டாயுதபாணி ஆகியோர் மேற்பார்வையில் இளைஞர்களையும் மாணவர்களையும் ஒருங்கிணைத்து மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
அதில், காமராஜர் பேசினார். சோ வந்திருந்தார் என நினைக்கின்றேன். கவிஞர் கண்ணதாசனும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஜெயகாந்தன், சின்ன அண்ணாமலை, நெடுமாறன், பி.ஜி.கருத்திருமன், டி.என்.அனந்தநாயகி, குமரி அனந்தன், அகிலன் போன்ற பல தலைவர்கள் அன்றைக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
அப்போது ராமமூர்த்தி என்றால் மூன்று, நான்கு ராமமூர்த்திகள் இருக்கின்றார்கள். எப்படி அழைப்பது என்று குழப்பமாகி விட்டது.
அதனால்தான் தஞ்சை ராமமூர்த்தி, வாழப்பாடி ராமமூர்த்தி, திண்டிவனம் ராமமூர்த்தி என்று அழைக்கப்பட்டனர். இப்படி எவ்வளவோ செய்திகள்.
அவருடன் பலமுறை டெல்லிக்குச் சென்றிருக்கிறேன். ரயில் பயணத்தின் போது அவருக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. டெல்லிக்கு சென்றால் ஜெயின் புக் ஸ்டாலில் புத்தகங்கள் வாங்குவார்.
இந்திரா காந்தி வீட்டில், அந்த அம்மையாரிடம் முறையிட்டது எல்லாம் மறக்க முடியுமா?.
தமிழகத்தின் அரசியலுக்கான ஒரு நல்ல சூழலை உருவாக்கித் தாருங்கள் என்று அழுத்தம் திருத்தமாக அண்ணன் ராமமூர்த்தி சொல்வார். உடனிருந்து இதெல்லாம் பார்த்தேன்.
மறைந்த செல்லபாண்டியன் எங்கள் மாவட்டத்துக்காரர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் முன்னாள் தலைவர்.
அவர், “ராமமூர்த்தி நாங்கள் கூட இந்திரா காந்தியுடன் இவ்வளவு தைரியமாக பேச முடியாது. நீங்கள் பேசி விட்டீர்கள். உங்களுக்கு இயல்பா கம்யூனிஸ கொள்கைகள், சித்தாந்தங்களோடு ரொம்ப நெருக்கம் உண்டு. அதனால தைரியமா பேசுறீங்க…” என்று அவர் சொன்னது இன்றைக்கும் காதில் ஒலிக்கின்றது.
காங்கிரஸில் சோசலிசம் என்ற கொள்கையை, நேரு சொல்லிய கொள்கையை வலியுறுத்த இந்திரா காந்தி காலத்தில் ஒரு குழு இருந்தது. அந்தக் குழுவில் தமிழகத்தில் இவரும் கவிஞர் கண்ணதாசனும் உறுப்பினர்கள். சந்திரஜித் யாதவ், துளசிதாசப்பா எல்லாம் அந்த காங்கிரஸ் சோஷலிஸ்ட் குழுவில் இருந்தார்கள்.
மத்திய அரசின் ரயில்வே வாரியத்தில் இருக்கும்போது நானும் அவரும், பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும் பொழுது, பல செய்திகளைப் பேசிக்கொள்வோம்.
இலங்கைப் பிரச்சனை 1984-ல் சிக்கலில் இருந்த பொழுது இலங்கையில் அமிர்தலிங்கம் நடத்திய மாநாட்டில் தஞ்சை ராமமூர்த்தி இலங்கைக்குச் சென்று தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் சார்பில் நெடுமாறனுடைய பிரதிநிதியாக கலந்துகொண்டார்.
கதர் ஜிப்பா அணிந்து கொள்வார். மேலே சால்வையை ஒரு பக்கமாக போட்டுக் கொள்வார். சுருட்டை அவ்வளவு பிரியமாக ரசித்து இழுப்பார். அதைப்போல் ஃபில்டர் காஃபி அவருக்கு மிகவும் பிடிக்கும்.
திருவையாறில் அவருக்கு வயல்கள் இருந்தன. தஞ்சை சீனிவாசபுரத்தில் அவருடைய வீடு இருந்தது. எளிமையாக, நேர்மையாக வாழ்ந்தவர்.
சொல்ல வேண்டிய கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக பாரதியைப் போல் சொல்லுவார்.
அவரின் இறுதிநாட்களில் புத்தர், விவேகானந்தர், வள்ளலார் போன்றோரின் சிந்தனைகளில் தன்னை உட்படுத்திக் கொண்டார்.
தமிழகத்தில் அரசியிலில் முக்கியமான இடத்துக்கு வரவேண்டிய தஞ்சை ராமமூர்த்திக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் ஆகிவிட்டது.
தஞ்சை ராமமூர்த்தி யாரென்றுவது இன்றைய காலகட்டத்தில் பலருக்கு அறிவதில்லை.
தஞ்சை ராமமூர்த்தி போன்றவர்களுக்கு ஏன் தமிழகம் வாய்ப்புகளை தர மறுத்தது என்று தெரியவில்லை.
இப்படிப் பொது வாழ்வில் களப்பணிகள் செய்தவர்களின் பட்டியல் நீளும். என்ன செய்ய முடியும். அரசியல் வியாபாரமாகி விட்டது.
-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்