– மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை
கடந்த ஆண்டு துவங்கி கொரோனாவின் முதல் மற்றும் 2-வது அலையை சமாளித்து தற்போது இந்தியா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
மூன்றாவது அலை தாக்கினால் அதனை சமாளிக்க அனைத்து மருத்துவ வசதிகளையும் மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
மேலும் மூன்றாவது அலை தாக்கத்துக்குள் இந்திய மக்கள் தொகையில் 80% பேருக்கு தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் கூட்டம் வாயிலாக டில்லியிலிருந்து உரையாற்றினார்.
அப்போது பேசிய மாண்டவியா, “இந்தியாவின் மூலைமுடுக்குகளில் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்று இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மாநில சுகாதாரத்துறை மும்முரம் காட்ட வேண்டும்.
கொரோனா தடுப்பூசி இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் தங்கள் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் 2 டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு சேர்க்க ஏற்றவர்கள் சிறார்கள்.
எனவே சிறார்கள் மூலமாக தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அவர்களது பெற்றோர்களுக்கு பரப்ப வேண்டும்.
கொரோனா தடுப்பூசி முகாம்களை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் துவங்க மத்திய அரசு ஆவன செய்யும்.
தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொள்ள பொது இடங்களில் போஸ்டர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தடுப்பூசி 2 டோஸ் குடிமக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டாலும்கூட கொரோனா தாக்கத்திலிருந்து தப்பித்து விட்டோம் என்று அலட்சியமாக இருக்கக்கூடாது.
சிங்கப்பூர், பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. மேற்கண்ட நாடுகளில் 80 சதவீத குடிமக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தி ஆகிவிட்டது.
ஆனாலும், வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட குடிமக்களும் சமூக விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்” எனக் கூறினார்.