எனிமி – பகையாக மாறிய நட்பின் முடிவு!

ஒரு திரைப்படத்தின் ஒருவரிக் கதையில் பெரிதாகச் சுவாரஸ்யம் இல்லாதபோதும், திரைக்கதை கோர்க்கப்பட்ட விதத்தால் அதனை முற்றிலுமாக மாற்றிவிட முடியும்.

ஆனால், ஒருவரிக்கதையில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்திருக்கக் கூடாது.

விஷால், ஆர்யா, மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் நடித்துள்ள ‘எனிமி’, இதனைச் செவ்வனே செய்து காட்டியிருக்கிறது.  ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நட்பில் தொடங்கும் பகை!

ஊட்டியில் மளிகைக் கடை வைத்திருக்கும் ராமலிங்கத்துக்கு (தம்பி ராமையா) ‘ரிஸ்க்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே பயம். ஊர்ப் பிரச்சனைக்காகப் போராடி உயிர்விட்ட மனைவியின் நினைவுகளே அதற்குக் காரணம்.

அதனால், மகன் சோழன் எந்த விஷயத்திலும் ‘ரிஸ்க்’ எடுத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ராமலிங்கம்.

இவர்களது பக்கத்துவீட்டில் முன்னாள் சிபிஐ அதிகாரி பாரி (பிரகாஷ்ராஜ்), தனது மகன் ராஜீவ் உடன் குடியேறுகிறார்.

ராஜீவுக்கு பாரி அளிக்கும் கடினமான உடல் மற்றும் மனப் பயிற்சிகள் சோழனை ஈர்க்கின்றன. ஒருநாள், அவர் வீட்டில் இருந்து க்யூபிகிள் ஒன்றைத் திருடிவரும் சோழன், அதனைத் திரும்பவும் அதே இடத்தில் வைக்கச் செல்கிறார்.

அப்போது, சோழனிடத்தில் இருக்கும் இயல்பான கூர்திறனைக் கண்டறிகிறார் பாரி. அன்றுமுதல் ராஜீவுக்கும் சோழனுக்கும் ஒருசேரப் பயிற்சியளிக்கிறார்.

ஒருகட்டத்தில் தனது மகனைவிட சோழனிடம் அதீத திறமை கூடியிருப்பதை எண்ணிச் சிலாகிக்கிறார்.

ராஜீவும் சோழனும் வீட்டிலிருக்கும் நிலையில், ஒருநாள் பாரி கொலை செய்யப்படுகிறார்.

அவரைக் கொலை செய்தது யார் என்று தாங்கள் கண்டறிவதாகச் சோழன் சொல்ல, விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் கோபமடைகிறார்.

அவரிடம் தன் மகனை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார் ராமலிங்கம்.

‘பாரியைக் கொலை செய்தவனைக் கண்டுபிடிக்கப் போகிறேன்’ என்று கிளம்பும் சோழனிடம் கோபப்படும் ராமலிங்கம், தான் முக்கியம் என்று நினைத்தால் உடனே கிளம்பிவருமாறு கூறுகிறார்.

ராஜீவ், பாரி கொலை அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு தந்தையுடன் சிங்கப்பூர் செல்கிறார் சோழன்.

அங்கு லிட்டில் இந்தியாவில் வசிக்கும் அவர்களது வாழ்க்கை 25 ஆண்டுகளாகச் சீராகச் செல்கிறது. இந்த நிலையில், இந்திய அமைச்சர் ஒருவரைக் கொலை செய்வதற்காக, ராஜீவ் அங்கு செல்கிறார். திடீரென்று நிகழும் ராஜீவின் (ஆர்யா) வரவு அதனைப் புரட்டிப் போடுகிறது.

ராஜீவின் முயற்சியை சோழன் எப்படி முறியடித்தார்? அமைச்சர் செல்லும் வழியில் சோழன் குறுக்கிடக் காரணம் என்ன? ராஜீவ் ஏன் கொலையாளியாக மாறினார்? இருவரும் மீண்டும் சந்தித்தார்களா என்பதைச் சொல்கிறது ‘எனிமி’.

குறைவான பாத்திரங்கள்!

பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, ஆர்யா, விஷால் ஆகிய நால்வரே இப்படத்தின் தூண்கள். முதல் 20 நிமிடங்களில் பிரகாஷ்ராஜின் பங்களிப்பு முடிந்துவிட, மீதமிருக்கும் இரண்டே கால் மணி நேரத்தில் மீதமுள்ள மூவரின் நடிப்புக்கும் இடமளிக்கிறது திரைக்கதை.

கிட்டத்தட்ட ’தனி ஒருவன்’ படத்தில் வருவது போன்றதொரு வேடம் தம்பி ராமையாவுக்கு.

சிறு வயது முதலே நட்பைப் பகையாக எண்ணும் ராஜீவ் பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் ஆர்யா. ஸ்டைலிஷாக வந்துபோவதும், கோபத்தில் கொந்தளிப்பதும், அவரது தோற்றத்துடன் பொருந்திப் போகிறது. ஆனால், கதறியழும்போது மட்டும் செயற்கையாகத் தெரிகிறது.

விஷாலின் காதலியாக வரும் மிருணாளினி, அவரது தோழிகளின் வரவு ரசிக்க வைக்கிறது. அதைத் தாண்டி அவருக்குத் திரைக்கதையில் பெரிதாக இடமில்லை.

ஆர்யாவின் மனைவியாக மம்தா மோகன்தாஸ் காட்டப்படும்போது ஆச்சர்யம் ஏற்படவில்லை. ஆனால், பள்ளிப் பருவ பின்னணியில் இருவருக்குமான அறிமுகத்தைக் காட்டிய விதம் சிறப்பு.

கருணாகரனுக்கு விஷாலுடன் சுற்றுவதைத் தவிர வேறு வேலையில்லை. ஊட்டியில் தொடங்கி சிங்கப்பூருக்கு திரைக்கதை பயணித்தாலும், மிகச்சில பாத்திரங்களே திரைக்கதையில் இடம்பெற்றிருக்கின்றன.

ஜார்ஜ் மரியான், கொட்டாச்சி ஆகியோர் முகங்கள் மனதில் பதிந்த நிலையில், கிளைமேக்ஸ் காட்சியில் மட்டும் அடுத்தடுத்துப் பல்வேறு பாத்திரங்களைப் புதிதாகக் காட்டுவது போன்ற உணர்வேற்படுவது மைனஸ்.

திரைக்கதை சுவாரஸ்யம்!

ஆர்யா மற்றும் விஷாலின் பாத்திரங்கள் அதீத புத்திசாலித்தனத்துடன் இருப்பதற்கான காரணங்களை விளக்கும் வகையில், முன்கதைச் சுருக்கத்திற்குக் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ரியான் ஷாவும் ராகவனும் அப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

விஷாலின் அறிமுகக் காட்சியும் கூட, கதையின் போக்கு மற்றும் அக்கதாபாத்திரத்தின் இயல்பை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆர்யா – மம்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் சில நொடிகளே வந்தாலும் கூட, இருவரது உறவும் அதில் வெளிப்பட்டு விடுகிறது.

இடைவேளைக்குப் பிறகு ஆர்யா விஷாலைத் தேடி வரும் காட்சிகளில் சண்டைகள் அதிகம். இதனால், கடைசி 40 நிமிடக் காட்சிகள் ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு மட்டுமே பிடிக்கும் வகையில் உள்ளது.

‘லிட்டில் இந்தியா’, ’பத்தல’ ஆகிய பாடல்கள் இரண்டாவது அரை மணி நேரத்திலும், ‘டும்டும்’ பாடல் மூன்றாவது அரை மணி நேரத்திலும் இடம்பெற்றுள்ளது.

இவற்றை ரசிக்கும் வகையில் தந்திருக்கிறார் தமன். அதற்கு ஈடாக, பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார் சாம் சி.எஸ்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும், ரேமெண்ட் டெரிக் க்ரேஸ்டாவின் படத்தொகுப்பும் ஆக்‌ஷன் காட்சிகளில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது. அதற்கேற்ப ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார் ரவி வர்மா.

ஷான் கருப்பசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், ஆனந்த் ஷங்கர் அமைத்துள்ள திரைக்கதையின் பின்பாதி, எவ்விதத் திருப்பங்களும் இல்லாத ஹாலிவுட் படங்களைக் கண்ணில் காட்டுகிறது.

ஓகேயா இல்லையா?

நண்பர்களே பகைவர்களாக மாறுவது போன்ற திரைப்படங்களும், நம்பிக்கைத் துரோகத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகளும் ஏற்கனவே பல முறை பார்த்ததுதான்.

அதையே சுவாரஸ்யப்படுத்திய வகையில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.

தொடக்கத்தில் வரும் 20 நிமிடக் காட்சிகளை செறிவுடன் வடிவமைத்தது போல, இறுதியாக வரும் சண்டைக்காட்சிகளின் நீளத்தையும் சுருக்கியிருந்தால் திரைக்கதை வடிவம் மேம்பட்டிருக்கும்.

அதனைத் தவறவிட்டிருப்பதால், தீபாவளி ரேஸில் வெற்றி எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ‘எனிமி’.

-உதய் பாடகலிங்கம்

You might also like