மதச் சார்பின்மை – இந்தியாவின் மகத்தான அடையாளம்!

‘மதச்சார்பின்மை’ –

‘செக்யூலரிசம்’ என்கிற ஆங்கிலச் சொல்லைத் தான் நாம் தமிழில் இப்படிச் சொல்கிறோம்.

இந்த ஆங்கிலச் சொல்லை 1851-ல் முதன்முதலில் பயன்படுத்தியவர் ஆங்கிலேயே எழுத்தாளரான ஜார்ஜ் ஜேக்கப்.

ஐரோப்பிய நாடுகளில் மத ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில் அதை எதிர்த்துப் பலரும் குரல் எழுப்பியபோது உருவான சொல், அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசியல் சட்டங்களிலேயே முக்கியமானதொரு அர்த்தமூட்டும் சொல்லானது.

பிரெஞ்சு நாட்டில் அரசும், மதமும் இணைவதைக் கண்டித்துக் கிளர்ச்சிகள் எழத் துவங்கியபோது அப்போதும் ‘மதச்சார்பின்மை’ சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

இந்தியா சுதந்திரத்திற்கு முன்பு சிதறுண்டு இருந்தபோது பல்வேறு மத ஆதிக்கத்தின் பிடியில் இருந்தாலும், 1947க்குப் பிறகு இந்திய அரசியல் சட்டம் உருவானபோது மதச்சார்பற்ற நிலை அதன் பிரதான அங்கம் ஆனது.

அதன் 25ஆவது பிரிவின் படி இந்தியக் குடிமக்கள் எவருக்கும் அவரவர் மதத்தைப் பின்பற்றவோ, அதன் சடங்குகளில் ஈடுபடவோ முழு உரிமை உண்டு.

“அரசின் எந்தவொரு செயலிலும் மதத்தின் குறுக்கீட்டிற்கு இடமே கிடையாது’’ என்று திட்டவட்டமாக வரையறுத்திருக்கிறது 1994-ல் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு.

இந்திய விடுதலைக்கான வித்தான மகாத்மா காந்தி சொல்லியிருப்பது இன்னும் கூடுதல் அழுத்தமானது.

“என் மதத்தை நான் நம்புகிறேன். அதற்காக நான் சாகவும் தயார். ஆனால் அது என் தனிப்பட்ட விஷயம். இதில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை’’.

“மதச் சார்பின்மை என்றால் மதங்களுக்கு விரோதமானது என்று பலர் எண்ணிக் கொள்கிறார்கள். அப்படியில்லை. அரசு எல்லா மதங்களுடனும் பொதுவாக உறவாடுவது என்பது தான் அர்த்தம்’’- என்றவர் இந்தியாவின் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு.

பல்வேறு மதம் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து வாழும் இந்தியாவில் மதச்சார்பின்மை செழுமையூட்டக்கூடிய பண்பு.

பல்வேறு மதம் சார்ந்து பிரிந்திருந்த இந்திய சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தபோது சர்தார் வல்லபாய் பட்டேல் சொல்லியிருப்பது உண்மையிலேயே எஃகைப் போன்ற உறுதியான வார்த்தை.

“தொலைநோக்குப் பார்வையில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பாகுபாடே இல்லாமல், இந்தியர் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலைமை உருவாவதே நமக்கு நன்மையைத் தரும்’’

தமிழகத்தைப் பொறுத்தவரை “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’. “யாதும் ஊரே; யாவரும் கேளிர்’’ என்கிற சமத்துவமான வரிகளை விட மதச்சார்பற்ற தன்மைக்கு வேறு என்ன பெருமை தரும் உதாரணங்கள் வேண்டும்?

-மணா

You might also like