கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்ததாக பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டு எழுந்தநிலையில் அபினவ் தபார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “கொரோனா சிகிச்சைக்கு பல தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தன. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மாநில மற்றும் மாவட்ட அளவில் குழு அமைத்து சிகிச்சைக்கு வசூலிக்கப்பட்ட அதிக கட்டணம் தொடர்பாக ஆய்வு மற்றும் தணிக்கை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
நோயாளிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை மருத்துவமனைகள் திருப்பி அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கூடுதல் தொகையினை திரும்ப பெறுவதற்கு சீரான கொள்கை மற்றும் வழிகாட்டுதல்கள் வகுக்கப்படவில்லை.
எனவே கொரோனா தொற்றை காரணமாக வைத்து பல மருத்துவமனைகள் மக்களிடம் இருந்து கொள்ளை அடித்தன” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “மனு தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
மேலும், மனுவில் அனைத்து மாநில அரசுகளையும் சேர்க்கவும் மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.