அதிவேக பைக் பயணம்: இப்படியும் ஒரு பயங்கரம்!

கூடுதல் குதிரைத் திறன் கொண்ட நவீன பைக்குகள் இப்போது ஃபேஷனாகி விட்டன.
பதினெட்டு வயது தாண்டியதும் பல இளைஞர்கள் செய்கிற வேலை – எப்படியாவது அடம் பிடித்து கூடுதல் திறனோடு, கூடுதல் விலையும் கொண்ட பைக்குகளை வாங்குவது தான்.

பெற்றோர்களுக்குத் தர்ம சங்கடமாக இருந்தாலும், அதிவேக பைக்குகள் ஏற்படுத்தும் அபாயங்கள் தெரிந்தாலும், அன்பு கலந்த பிடிவாதம் பிடிக்கும் மகன்களைச் சமாளிக்க முடியாமல் அவர்கள் கேட்ட பைக்குகளை வேறு வழியில்லாமல் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

பைக் கைக்கு வந்ததுமே நண்பர்கள் சேர்ந்து கொள்கிறார்கள். முதுகை நெருக்கித் தொற்றிக் கொள்கிறார்கள். பைக் ஓட்டுவது என்பதே சாகசம் மாதிரி ஆகிவிடுகிறது.

மிதமான வேகத்தில் ஓட்டுகிறவர்கள் இந்த இளைஞர்களைப் பொருத்தவரை ‘ரோட்டில் வாகனத்தைச் சரியாக ஓட்டத்தெரியாத’ முட்டாள்களாகி விடுகிறார்கள்.

வேகத்தைக் குறைக்கச் சொல்கிற ஆத்மாக்கள் இவர்களுடைய மொழியில் ‘லூஸ்கள்’ ஆகி விடுகின்றன.

மதுபானக் கடைச் சரக்குகளின் மூலம் எந்த அளவுக்குப் போதை அல்லது ‘கிக்’ கிடைக்கிறதோ, அதே மாதிரியான போதை அதி வேகத்தில் பைக்குகளை ஓட்டும்போது இவர்களுக்குக் கிடைக்கிறது.

அதிகமான வேகமும் போதை தான்.

இந்தப் போதையில் பைக்கை வளைத்து வளைத்து, பார்க்கிறவர்களுக்குப் பீதி படரும்படி ஓட்டுகிறார்கள்.

போட்டிகள் வைத்து சாதாரண சாலைகளில் பயங்கர வேகத்துடன் முந்திக் கொண்டு போகும்போது, மிதமான வேகத்தில் சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த தம்பதிகள் தடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் எல்லாம் சென்னைக் கடற்கரைச் சாலையில் நடந்திருக்கின்றன.

சிலர் பைக்கில் தலைதெறிக்கிற வேகத்தில் வந்து சாலையின் நடுவே இருக்கிற இரும்புத் தடுப்பில் மோதி தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார்கள்.

சைலன்ஸரை மாற்றி அதிகச் சத்தம் எழுப்புகிறபடி இரைச்சலுடன் பலர் பார்க்கப் போவது இவர்களுக்குத் ‘த்ரில்’ ஆக இருக்கிறது.

காவல்துறையினர் என்ன தான் எச்சரிக்கை விடுத்தாலும், மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தினாலும், எப்படியாவது தங்கள் குடும்பச் செல்வாக்கைக் காட்டி, கவனித்து வெளியே வந்து மறுபடியும் சாலைகளில் தலை தெறிக்க ஓட்டுகிறார்கள்.

இதனுடைய உச்சம் கொடைக்கானலில் தீபாவளியைக் கொண்டாடிவிட்டு அதிக வேகத்தில் பைக்கில் வந்து கொண்டிருந்த போது, காரில் மோதியதும் பைக்கில் வந்த இரு இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள்.

பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் காரில் மோதிய வேகத்தில் மின்கம்பியில் சிக்கிப் பலரை அதிர்ச்சி ஊட்டுகிற விதமாக அந்தரத்தில் கருகி உயிரை விட்டிருக்கிறார். வேகமாக பைக்கை ஓட்டி வந்த இளைஞரும் அதே இடத்தில் பலியாகி இருக்கிறார்.

அவர்கள் கையில் இருந்தது இரு சக்கர வாகனம் அல்ல, தனக்குத்தானே குத்திக் கொண்ட ஆயுதம். மித மிஞ்சிய வேகத்தில் பயணப்பட்டால் வாகனமே கொல்லும் ஆயுதமாகிவிடுகிறது.

இதை அந்த இளைஞர்களிடம் அந்தக் கொடூர விபத்து நடப்பதற்கு முன்னால், வேகம் குறித்து யாராவது எச்சரித்திருந்தால் அதைக் கேட்டிருப்பார்களா? எச்சரித்தவர்களைக் கேவலமாய்க் கலாய்த்து அதே வேகம் குறையாமல் கடந்து போயிருப்பார்கள்.

அதற்காக இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதையே நாம் குறை சொல்லவில்லை. அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் கவனம் தேவை என்று தான் சொல்கிறோம்.

மின்கம்பியில் தொங்கிக் கருகிப்போன அந்த இளைஞரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள்? மரணம் தன்னை அந்தரத்தில் இப்படித் தொங்க விடும் என்று அந்த இளைஞர் தான் நினைத்திருப்பாரா?

தறிகெட்ட வாகன வேகத்திற்கும், மரணத்திற்கும் இடையே இருப்பது மிக மெல்லிய கோடு தான்.
என்ன வினோதம் என்றால், இது அனுபவபூர்வமாக காலத்தால் உணர்த்தப்படும் போது, பாவம், அவர்கள் உயிரோடு இருப்பதில்லை!

– லெட்சுமணன்

You might also like