அந்த காலத்திலேயே ‘காப்பி’ பஞ்சாயத்தில் சிக்கிய படம்!

சினிமாவில் இப்போது அடிக்கடி நடக்கிறது கதை பஞ்சாயத்து.

தனது கதையை அப்படியே சுட்டு படமாக்கி விட்டார்கள் என்று சில உதவி இயக்குநர்கள், பரபரப்பாக வழக்குத் தொடங்குவதும் இல்லவே இல்லை என்று இவர்கள் அடித்துச் சொல்வதும் பிறகு காம்ப்ரமைஸ் ஆவதும் தமிழ் சினிமாவில் சர்வசாதாரணமாக நடக்கின்றன.

ஆனால், இப்படி நடப்பது ஒன்றும் தமிழ் சினிமாவில் புதிதில்லை. இன்று நேற்றல்ல, 1950 களிலேயே இதுபோன்ற கதை பஞ்சாயத்துகள் நீதிமன்ற படியேறி இருக்கிறது.

அப்படி படியேறிய படங்களில் ஒன்று ’கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’.

சிவாஜி கணேசன், டி.ஆர்.ராமச்சந்திரன், பத்மினி, ராகிணி, சந்திரபாபு, தங்கவேலு, கே.டி.சந்தானம், குண்டுமணி உட்பட பலர் நடித்த படம் இது.

1954 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு டி.ஜி.லிங்கப்பா இசை அமைத்திருந்தார்.

வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு. ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு தனது பத்மினி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்தார்.

அவர் தயாரிப்பாளர் ஆனது இந்தப் படத்தின் மூலம்தான்.

காமெடி படமான ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’, அந்த காலத்தில் வரவேற்பைப் பெற்றது.

டி.ஆர்.ராமச்சந்திரனும் சிவாஜி கணேசனும் ஹீரோக்கள்தான் என்றாலும் டி.ஆர்.ஆருக்குத்தான் படத்தில் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள்.

இந்தப் படத்தில் சிவாஜிக்காக, சந்திரபாபு பாடியே ’ஜாலி லைஃப் ஜாலி லைஃப்’ பாடல் அப்போது செம ஹிட்.

படத்தில் ஆண், பெண் சமத்துவம் பற்றி புரட்சிக்கரமான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.

இந்தப் படத்தின் கதையை, தனது நாடகத்தை தழுவி எடுத்துவிட்டார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வெங்கட்ராய சாஸ்திரி என்பவர்.

இவர், பிரபல தெலுங்கு ஸ்காலரும் நாடக எழுத்தாளரும் நடிகருமான வேதம் வெங்கட்ராய சாஸ்திரி என்பவரின் பேரன்.

அவர் பெயரையே கொண்ட பேரன் ‘வியாமோகன்’ என்ற நாடகத்தை நடத்தி வந்தார். சென்னையிலும் அந்த நாடகத்தை சில முறை நடத்தி இருக்கிறார்.

‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படம் தயாரிப்பில் இருக்கும்போதே, அது தனது நாடகத்தின் காப்பி என்று தெரிந்தது அவருக்கு. இதனால் தயாரிப்பாளர் பந்துலுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

அவரோ, ‘இப்ப ஷூட்டிங் போயிட்டிருக்கு. அதனால ஒரு அமவுண்ட் தந்திடறோம்’ என்று சமரசனம் பேசினார் அவர் வழக்கறிஞரிடம்.

ஆனால், கதை என்று தனது பெயரை போடவேண்டும் என்றார் இவர். அவர்கள் சம்மதிக்க மறுக்க, சாஸ்திரி வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

விசாரணையின்போது நீதிமன்றத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களும் அப்போது பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாகின.

இறுதியில் சாஸ்திரிக்கு சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கவில்லை. மேல்முறையீட்டிலும் அப்படியே.

பிறகு திரைக்கதையை நடிகரும் வசன கர்த்தாவுமான டி.கே.கோவிந்தன் என்றும் கதை, இயக்கம் ப.நீலகண்டன் என்று படத்தில் வெளியானது.

-அலாவுதீன்.

You might also like