பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு!

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வாங்கி தருவதற்காக, காவல் துறைக்கு உள்ளேயே மாநில விசாரணை முகமை என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “பயங்கரவாத குழுக்களால் இழைக்கப்படும் குற்றங்கள், பயங்கரவாத குழுக்களுக்கான நிதி உதவி அளிப்பது, பொய் பிரசாரங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட பயங்கரவாதம் தொடர்புடைய குற்றங்களை விரைவாக விசாரித்து தண்டனை பெற்று தர, மாநில விசாரணை முகமை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு காவல் துறைக்கு உள்ளேயே தனி அமைப்பாக செயல்படும். இதற்கென தனி இயக்குனர் நியமிக்கப்படுவார். இந்த விசாரணை அமைப்பு, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட இதர மத்திய விசாரணை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.

இந்த அமைப்பில் பணியாற்றும் காவல்துறையினருக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

காவல் நிலையங்களில் பயங்கரவாத நடவடிக்கை தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படும் போது, அது குறித்து மாநில விசாரணை அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

என்.ஐ.ஏ., விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாத வழக்குகளை, மாநில விசாரணை அமைப்பிடம் வழங்குவது குறித்து டி.ஜி.பி. முடிவு செய்ய வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இருந்தால், அது குறித்து எழுத்துப் பூர்வமான விளக்கத்தை டி.ஜி.பி. அளிக்க வேண்டும்.

பட்டியலிடப்பட்ட குற்றங்கள் குறித்து மாநில விசாரணை அமைப்பு தானாகவே வழக்கு பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது. இது குறித்து டி.ஜி.பி.,க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

You might also like