தமிழகத்துச் சிற்பிகளின் கலைத்திறம் உலகமே கண்டு வியப்பதாகும்.
கல்லிலும், மண்ணிலும், மரத்திலும், சுதையிலும், சுவரிலும், பொன்னிலும் அவர்கள் செய்த அருங்கலைகள் எல்லாம் படிப்படியாக வளர்ந்து உன்னத நிலையைத் தொட்டுப் பிறகு ஏனோ தளர்வுற்று நின்றன.
பிற நாட்டுச் சிற்பிகளின் கலைத்திறத்தையும் அந்நாளிலேயே அறிந்து தமிழகம் போற்றி ஊக்கமளித்தது. மகதம், அவந்தி, மராட்டியம் ஆகிய பல நாட்டுக் கலைஞர்கள் தமிழகத்தில் பணிபுரிந்தனர்.
மகத வினைஞரும், மராட்டக் கம்மரும்,
அவந்திக் கொல்லரும், யவனத் தச்சரும்,
தண்டமிழ் வினைஞர்
தம்மொடுங் கூடிக் கொண்டு
இனிது இயற்றிய அரங்கம் – பற்றி மணிமேகலை குறிக்கிறது.
உரோமானிய, கிரேக்கக் கலைஞர்களை யவனர்கள் எனக் கூறுவது வழக்கம்.
சிற்ப எழிலில் மேன்மைகொண்டவர் யவனர்.
கிரேக்கரோடு கலையுறவும் தொடர்பும் இருந்ததை இந்தியாவின் வடபால் அமராவதி, நாகார்ஜுன கொண்டா, ஆந்திர மாநிலச் சிற்பங்களில் இன்றும் காணலாம் என்று தொல்லியல் நல்லறிஞர் இரா நாகசாமி குறித்துள்ளார்.
தமிழகத்திலும் யவனர்கள் பணி புரிந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியம் கூறுகிறது.
யவனத் தச்சரும், அவந்திக் கொல்லரும்,
மகதத்துப் பிறந்த மணிவினைக்காரரும்,
பாடலிப் பிறந்த பசும் பொன் வினைஞரும்,
கோசலத்து இயன்ற ஓவியத் தொழிலரும்,
வத்த நாட்டு வண்ண கம்மரும்,
தத்தம் கோண்மேல் தம் கைத்தொழில் தோன்ற
என்று பெருங்கதை கூறுகிறது.
இதுபோல உயர்ந்த பல நாட்டுத் திறனும் தமிழர் தம் திறனோடு இணைந்து ஒப்பரும் கலையாக ஓங்கிச் செழித்தது.
இத்தொழில் வல்லோர் பலரும் ஓரிடத்தில் இருந்ததால் அவர் கலைத்தொழில் மேலும் சிறப்பு எய்தியது.
கலைத்தொழில் புரிவோர் பலர் மாநகரத்தின் மாட வீதிகளில் வதிந்திருந்ததைச் சிலப்பதிகாரம்,
பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும்,
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்,
கஞ்சகாரரும், செம்பு செய்தநரும்,
மரங் கொல் தச்சரும் ,கருங்கை கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டாளரும்
பொன் செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கிப்
பழுதில் செய்வினைப் பால்கெழுமாக்களும்
– என்று கூறுகிறது.
கண்ணுள் வினைஞர் என்றால் ‘ஓவியத் தொழிலோர்’ சித்திரகாரிகள் என்றும், மண்ணீட்டாளர் எனில் சுதையால் பாவை உள்ளிட்டன பண்ணுவார் என்றும் உரையாசிரியர் கூறுவர்.
இவர்கள் விட்டுச் சென்றுள்ள கலையை, சிற்பங்களை, செப்புத் திருமேனிகளை, ஓவியங்களைப் பல்லவர் காலத்திலிருந்துதான் நம்மால் அறிய இயலுகிறது.
இந்த நிலையில் சிற்பங்களுக்குச் சிந்தை பறிகொடுத்து மகிழும் செந்தமிழ்ப்பெருமிதம் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் எப்போதும் ஒளிர்ந்தது.
‘கலைஞர் என்னும் மனிதர்’ என்ற அரிய தலைப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு முழுமையாக நிறைந்துள்ளாரோ – அதே அளவிற்கு இதழுலகில் – ஊடகத்தில் புகழோடு விளங்கும் நண்பர் மணா.
தமிழ் இதழியலின் நீண்ட பயணத்தில் – ஒரு இதழாளராக – படைப்பாளராக – 40 ஆண்டுகளுக்கு மேல் சிறந்து விளங்குவதும் – அனைவருக்கும் அன்பு சொரியும் தோழராக இருப்பதென்பதும் பாராட்டப்படவேண்டியதாகும்.
சிறு ஏடுகளில் கவிதை – சிறுகதை என்று எழுத்துலகத்துக்குள் நுழைந்தவர் – காட்சி ஊடகம் மற்றும் ஆவணப்படங்களின் இயக்குநராகவும் தன்னைத் தமிழுலகுக்கு வழங்கியவர்.
பல ஆளுமைகள் குறித்த நூல்களை எழுதியுள்ள மணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்காகக் – கலைஞர் என்னும் மனிதர் என்ற கலைக்கருவூலத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தக் கலைக்காவியம் அனைவர் இல்லத்திலும் செல்வமாகக் காத்து வர வேண்டும்.
நண்பர் மணாவின் எழுத்தில் ஒரு பகுதியை இனிக் காணலாம்.
சிற்பக் கலைஞரான கணபதி ஸ்தபதி, கலைஞரின் வெவ்வேறு தமிழ் உணர்வு சார்ந்த அடையாளங்களுக்கு நெருக்கமானவர்.
பூம்புகார் மன்றங்கள் – மாடங்கள் – மண்டபங்கள் வாயிலாகக் கண்ணகி கோட்டம், சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் கடல் அலைகளுக்கு இடையே நிற்கிற ஒற்றை விரலைப் போல நிமிர்ந்து இருக்கும் ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு வடிவம் அமைத்தவர்.
அவர் கலைஞரைப் பற்றிப் பகிர்ந்தளித்த சில நினைவுகள் என்றும் நினைவு கூர வேண்டிய வரலாற்றுத் தொடர்களாகும்:
எழுத்துத் திலகம் மணா எதைத் தொட்டாலும் அதற்கு ஈடில்லாத எழில் சேர்க்கும் திறமை கொண்டவர்.
மேலும் பேசப்படும் பெருந்தகையே பல்கலை வித்தகர், நாடு, கலை, அரசு, இலக்கியம் என்று அத்தனையும் ஆட்சி செய்த முதல்வர்.
சுவை சொட்டச் சொட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும், நேர்காணல்களையும் கொண்டு ஒளிப்படங்கள் பளிச்சிட இப்படி ஒரு படைப்புத் தமிழில் வந்திருப்பது அருமையிலும் அருமையாகும்.
கலைஞரின் கருத்துக்குக் காட்சி வடிவம் தந்த அருமை சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதி அவர்களுக்கு வாய்த்த சிறப்பை எழுத்தாளர் மணாவின் சொற்களிலேயே இப்போது காணலாம்.
திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் குமரிமுனையில் சிலை அமைப்பதாக முடிவெடுக்கப்பட்டு, அறத்துப்பாலில் உள்ள 38 அதிகாரங்கள் மனத்தில் கொண்டு 38 அடி உயரத்தில் சிலையின் பீடம் அமைக்கப்பட்டு, அது அறப்பீடம் என்று அழைக்கப்பட்டது, மீதி 95 அடி சிலையின் உயரம். சிலையின் முகம் மட்டும் 20 அடியாகும்.
ஒரு மாடிக் கட்டிட உயரமும் 150 டன் எடையும் கொண்டது இச்சிலையின் தலை.
சிலையின் கட்டுமானத்திற்கு மொத்தம் 3,681 துண்டுக் கற்கள் பயன்படுத்தப்பட்டன.
அவைகளின் மொத்த எடை 7 ஆயிரம் டன் ஆகும்.
ஒவ்வொன்றும் 3 முதல் 8 டன் எடை கொண்ட கற்களைக் கடல் வழியாகப் படகின் மூலம் சிலை அமையவிருக்கும் பாறைக்கு எடுத்துச் சென்று, இரவு பகல் பாராது 500 சிற்பிகளைக் கொண்டு, ஏறத்தாழ நான்கு ஆண்டுகளில் திரு. ஸ்தபதி அவர்கள் இந்த அரிய சிற்பத்தைக் கட்டி முடித்தார்.
சிலையை வடிவமைக்கும் பணி நடைபெறும்போது, “சிலை நிற்குமோ நிற்காதோ” என்று சந்தேகமாகக் கேட்பவரிடம் எல்லாம் ஸ்தபதி அவர்கள், “அலையும் மலையும் இருக்கும் வரை சிலை அசையாது இருக்கும், கவலைப்படாதீர்கள்” என்று கூறுவதுண்டு.
தஞ்சையில் பெருவுடையார் கோயிலின் பிரம்மாண்டமான விமானக் கட்டுமானப் பணியின் போது, அதனைப் பார்வையிட்ட பலர், ‘விமானம் விழுந்து விடுமோ’ என்று அச்சப்பட்டதாகக் கூறுவதுண்டு.
அப்போது அதை நிர்மாணித்த குஞ்சரமல்லன் மாமன்னன் இராஜராஜப் பெருந்தச்சன் பெருமையாக, “விமானத்தின் நிழல் கூட விழாது” என்று கூறினாராம்.
அத்தகைய பெருமை வாய்ந்த குஞ்சரமல்லன் இராஜராஜப் பெருந்தச்சன் பரம்பரையில் வந்த திரு.கணபதி ஸ்தபதியும் அவ்வாறு கூறியதில் வியப்பேதும் இல்லையே!
தமிழகத்தையே உலுக்கிய ‘சுனாமி’ என்று அழைக்கப்படும் கடற்கோளின் போதும் எவ்விதப் பாதிப்புமின்றி, கம்பீரமாக நிற்கிறார் திருவள்ளுவர்.
சிலைப் பணிகள் அனைத்தும் 19.10.1999 அன்று முடிவுற்றதும் பத்திரிகையாளர்களை அழைத்து விவரங்கள் கூறிவிட்டு, ஸ்தபதி அவர்கள் கலைஞரைச் சந்திப்பதற்காக மறுநாள் சென்னை வந்தார்.
கலைஞரை அவரது அலுவலகத்தில் சந்திப்பதற்காக வந்து காத்துக்கொண்டிருப்பதைக் கதவின் இடைவெளி வழியே பார்த்த கலைஞர் அவர்கள், உடனே அவரை உள்ளே வரும்படி சைகை செய்தார்.
‘கண்டேன் சீதையை’ என்பதுபோல, ஸ்தபதி அவர்கள் கலைஞரிடம் நிற்கிறார்.
கலைஞர் அவர்கள் மிகவும் மகிழ்ந்து ஸ்தபதி அவர்களைப் பாராட்டினார்.
அவரது பாராட்டுதல்களால் மரபுச் சிற்பக்கலை 1330 அடி உயர்ந்துவிட்டதாகத் தாம் உணர்வதாக திரு. ஸ்தபதி அவர்கள் உருகிக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கலைஞரிடம் பேசும் பொழுது, சிற்பிகளாகிய எங்கள் முன்னோர்கள் இந்த நாட்டில் இத்தகைய பல்வேறு அதிசயப் பணிகளைச் செய்துள்ளார்கள்.
ஆனால், அவர்கள் வரலாற்றில் மறைந்து கிடக்கிறார்கள். எங்களைக் கை தூக்கி விடுங்கள் ஐயா” என்று ஒரு கோரிக்கையைச் சமர்ப்பித்தார்.
கலைஞரும் அதை உன்னிப்பாகக் கேட்டுவிட்டு, எதிர்வரும் முரசொலியைப் பாருங்கள்” என்று கூறினார்.
சொன்னதுபோல், அடுத்து வந்த 20.12.1999 தேதியிட்ட முரசொலியில் பீறிட்டு எழுந்து கொட்டிய அவர் தம் உணர்ச்சி வெள்ளத்தை இங்கே அப்படியே வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
அய்யன் வள்ளுவனுக்கு இது அழியாத நினைவுச் சின்னம்.
“பூம்புகார் எழில் மாடத்தை என் கருத்திற்கேற்ப அமைத்துத் தந்தவரும், பாஞ்சாலங்குறிச்சியில் இடிந்த கோட்டையை எழுப்பித் தருவதற்கு உடனிருந்து உதவியவரும்,
வள்ளுவர் கோட்டம் வையகம் புகழ்ந்திட, உருவாகிட, சிற்பி திரு ஆச்சார் அவர்களுடன் இணைந்து, கையில் உளி எடுத்தவரும், அண்ணா அறிவாலயம் முகப்பினையும் அழகுற அமைத்துத் தந்தவரும்,
சிற்பச் சித்தருமான கணபதி ஸ்தபதியார் அவர்கள் மூன்றாண்டுக் காலத்திற்கு மேலாக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, நமது அய்யன் வள்ளுவனுக்குக் காலத்தால் அழியாத நினைவுச் சின்னத்தை என் இதயம் இறக்கைகள் பெற்றுப் பறந்து மகிழ்கிற அளவுக்கு,
என் இரத்த நாளங்களில் இன்ப அருவி பாய்ந்து பரவுகின்ற அளவுக்கு, என் சுவாசக் கோசம் ஆனந்தப் பெருமூச்சால் நிரம்பிப் பிதுங்குகின்ற அளவுக்கு, வடித்தெடுத்து நிலைநாட்டிவிட்டார்.
வங்கமும், இந்துவும், அரபியும் என முக்கூடல் சங்கமிக்கும் குமரி முனைப் பாறை முற்றத்தில் அவருக்கும், அவருடன் சேர்ந்து, அற்புதச் சிலையைப் பொறுப்புடன் உருவாக்கியுள்ள சிற்பிகள், அலுவலர்கள், பணியாளர்கள், பொறியாளர்கள் அனைவருக்கும் தமிழகத்தின் பாராட்டுக்கள்.
இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
“திருக்குறளை நினைவூட்டி, அதன்படி என் ஆய்வுக்கேற்ப முடித்தமைக்காக ஆயிரம், பதினாயிரம், லட்சோபலட்சம் நன்றி மலர்களைத் தூவுகின்றேன்” என்று வைர வரிகளால் எழுதினார்கள்.
செவ்வனே முடிவுற்ற திருவள்ளுவர் சிலைப் பணி 01.01.2000 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களால் நாட்டுக்கு – தமிழினத்துக்கு வழங்கப்பட்டது.
விழாவில் அமைச்சர் பெருமக்கள் பலர், அறிஞர், ஆர்வலர், அயல்நாட்டினர், தமிழ்ப் பெருமக்கள் என்று பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழகத்துக்கு நிலையான நெடும் புகழ் காட்டும் வரலாறு – நின்ற சிலையாகவும் வென்ற கலையாகவும் என்றும் விளங்கி வருவது தமிழினத்தின் நற்பேறாகும்.
தொடர்புக்கு
அவ்வை நடராசன்
thamizhavai@gmail.com
நன்றி: தினச்செய்தி நாளிதழ்