நெஞ்சை கனக்க வைக்கும் மரணங்கள்!

சில மரணச் செய்திகள் காதில் விழும்போதே கனக்கின்றன.

மதுரையில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக எளிமையாக அகந்தையற்ற மனதோடு இறுதி வரை தன்னியல்பை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்த ‘தோழமை’ என்ற சொல்லுக்கு அர்த்தமாய் வாழ்ந்த தோழர் நன்மாறன்.

ஆடம்பரமான அரசியல்வாதிகளின் சுற்றுச்சூழல் அவரைப் பாதிக்கவே இல்லை மயானம் வரை.

இரண்டாவது, நாற்பத்தி ஆறு வயதில் சட்டென்று உடற்பயிற்சியின் போதே சட்டென்று உயிரிழப்பைச் சந்தித்திருக்கிற கன்னட நடிகரான புனித் ராஜ்குமார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய அப்பா ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட போது, இவருடைய பெயர் தமிழக ஊடகங்களில் அடிபட்டது.

அத்தனை திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர், தான் வளரக் காரணமாக இருந்த மக்களுக்குச் செய்திருக்கும் செயல்பூர்வமான நன்றி மலைக்க வைக்கிறது.

தன்னை நேசித்த மக்களுக்காக 46 இலவசப் பள்ளிகளை நடத்தியிருக்கிறார்.
26 ஆதரவற்றவர்கள் இல்லங்களை நடத்தியிருக்கிறார்.

16 முதியோர் இல்லங்கள், 19 பசுக்களுக்கான ‘கோ’சாலைகள், 1800 மாணவர்களுக்குக் கல்வி- இவற்றுடன் தன்னுடைய கண்களைத் தானம் செய்திருக்கிறார்.

மரண அஞ்சலிக் குறிப்புகளில் புனித் ராஜ்குமாரைப் பற்றிப் படிக்கும் யாருக்கும் அவருடைய திரையுலக வாழ்வுக்கும் மேலாக அவர் செய்திருக்கும் மக்கள் சார்ந்த செயல்களைப் பற்றி என்ன சொல்வது?

நடிகர் சம்பாதிக்கிறார், அதனால் செலவழித்திருக்கிறார் என்று சிலர் சொன்னாலும், சினிமாவிலும் சரி, அரசியலிலும் பல கோடிகளைச் சம்பாதித்திருக்கிற எத்தனை பிரபலங்கள் தங்களை வாழ வைத்த மாநில மக்களுக்கு இம்மாதிரியான சேவைகளைச் செய்திருக்கிறார்கள், விதிவிலக்காக ஒரு சிலரைத் தவிர?

எவ்வளவு பிரபலமாகி எவ்வளவு சொத்து சேர்த்தால் என்ன, மக்களுக்கான உண்மையான அக்கறையுடன் செயல்படாதவர்கள் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும், சில நாட்களில் அடிபடும் ஊடகச் செய்திகளோடு மக்களால் மறக்கடிக்கப்பட்டு விடுவார்கள்.

மரணம் எடைபோடும் போது, அவர்களின் சாம்பலின் கனத்தை விட, மக்களுக்காக அவர்கள் செய்த செயல்பாடுகளின் கனம் அதிகமாக இருக்க வேண்டும்.

மிகச் சிலருடைய மரணம் மட்டுமே அவர்களின் சாம்பலின் கனத்தை விடக் கனக்கிறது.

– யூகி

You might also like