எம்.ஜி.ஆருடன் வைஜெயந்திமாலா நடித்த ஒரே படம்!

தமிழில் ஏவி.எம் நிறுவனம் 1949 ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட ’வாழ்க்கை’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இந்தி சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் வைஜெயந்திமாலா.

ஜெமினிகணேசனின் ’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் அவரும் பத்மினியும் ஆடும்
அந்த ஆவேச நடனத்தை மறந்துவிட முடியுமா என்ன? நடப்பிலும் நடனத்திலும் கலக்கிய
வைஜெயந்தி மாலா, எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். அந்தப் படம் ’பாக்தாத் திருடன்’.

அமெரிக்கத் திரைப்படமான ’த பிரின்ஸ் ஹூ வாஸ் எ தீஃப்’ என்ற ஆங்கிலப் படத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவான படம் இது.

டி.ஆர்.சுந்தரம் பிரமாண்டமாக இயக்கி, தயாரித்த இந்த வரலாற்றுப் படத்தில், வைஜெயந்தி மாலா, எம்.என்.நம்பியார், டி.எஸ்.பாலையா, டி.ஆர்.ராமச்சந்திரன், அசோகன், எம்.என்.ராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தி நடிகையும் நடனக் கலைஞருமான ஹெலன் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார்.

அந்தக் காலக்கட்டத்திலேயே அதிக பட்ஜெட்டில் பிரமிக்கும் செட் அமைத்து உருவாக்கப்பட்டப் படம் இது.

இந்தப் படத்தில், எஸ்.என்.லட்சுமி சிறுத்தையுடன் சண்டைப் போடும் காட்சியில் நடித்திருக்கிறார்.

எடிட்டிங்கின்போது, எம்.ஜி.ஆர், ’இந்தப் படத்துல, நான் ஹீரோவா, அந்தம்மா ஹீரோவா?’ என்று கிண்டலாக கேட்டாராம்.

துணைத் தளபதி அசோகனின் வஞ்சகத்தால் அரசனும் அரசியும் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் மகன் அபு, பசுமாட்டுக் கூட்டத்துடன் தப்ப வைக்கப்படுகிறான்.

திருடர் கூட்டம் அபுவை எடுத்து வளர்க்கிறது. வளர்ந்ததும் அவர்கள் கூட்டத்துக்கு தலைவன் ஆகிறார் அபு.

இருக்கிறவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் அவர், நாட்டின் போலி அரசன் டி.எஸ்.பாலையா, போலி அரசி சந்தியா (ஜெயலலிதாவின் தாய்), போலி இளவரசர் எம்.என்.நம்பியார் ஆகியோரை எப்படி வீழ்த்துகிறார் என்பதுதான் கதை.

இதற்கிடையில், அடிமைப் பெண் ஜெரீனாவை மீட்டு, திருடர்கள் கூட்டத்தில் அவர் கொடுத்திருந்த சபதத்தை மீறி அவரை திருமணமும் செய்கிறார். அந்த ஜெரீனாவாக,
நடித்திருந்தார் வைஜெயந்தி மாலா.

அந்தக் காலகட்டத்தில் பல தமிழ், இந்தி படங்களில் அவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் எம்.ஜி.ஆருடன் அவர் நடித்த ஒரே படம் இதுதான்.

இந்தப் படத்தில் இருவரும் பொருத்தமான ஜோடி என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அடுத்து இருவரும் நடிக்கவில்லை.

’பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆர் படமாக்க நினைத்தபோது வைஜெயந்திக்கும் ஒரு கேரக்டர் கொடுத்திருந்தார்.

அவர் குந்தவையாக நடிக்க இருந்தார் அந்தப் படத்தில். ஆனால் அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது.

– அலாவுதீன்

You might also like