இன்றைய அரசியலை அன்றே நினைவுபடுத்திய ‘அமைதிப்படை’!

இன்றைக்குள்ள களேபரமான அரசியல் சூழலில் நேற்று நடந்ததை இன்று மறந்துவிடுகிறார்கள். அதோடு நினைவுள்ள மற்றவர்களையும் மறந்துவிடச் சொல்கிறார்கள்.

யார் மீதும் தயங்காமல் கல் எறிகிறார்கள். கல் எறிந்தவர்கள் காலிலேயே கண்ணீருடன் காலில் விழுகிறார்கள்.

நேற்று வரை தலைவர்களாக இருந்தவர்களை அல்லக்கையாக அண்டி இருந்து, சமயம் கிடைத்ததும் அண்டி இருந்தவரின் காலை வாரி அவரைக் கடந்து முன்னேறுகிறார்கள்.

நன்றி என்பது இன்றைய அரசியல்வாதிகளின் அகராதியில் அர்த்தம் இழந்த ஒரு சொல். அவ்வளவு தான்.

வாக்காளப் பெருமக்களுக்கோ – தனக்கு முன்பு தலைவர்களாக இருப்பவர்களின் நேற்றைய வாழ்வையும், சொல்லையும் நினைவில் வைத்திருப்பதே ஒரு சுமை.

இப்போதுள்ள அரசியலில் அடிக்கடி நினைவுகூரப்படும் படம் அமைதிப்படை. மணிவண்ணன் இயக்கத்தில் 1994 ல் வெளிவந்த திரைப்படம்.

இதில் வரும் முக்கியக் கதாபாத்திரமான ‘அமாவாசை’யை இப்போதும் யாராவது எந்தச் சந்தர்ப்பத்திலாவது நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

அப்போது ‘அமைதிப்படை’ திரைப்படத்திற்கு வந்த விமர்சனம் ஒன்றைப் பார்க்கலாமா?

*

’அமைதிப்படை’ விமர்சனம்

இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வெற்றியைத் தழுவியிருக்கும் படம் இது.

வெற்றிக்கு முதல் காரணம்-

கதாசிரிய இயக்குநர் மணிவண்ணனின் அங்கதச் சுவை ததும்பும் படு கூர்மையான வசனங்கள். அகில இந்தியத் தலைவர்கள் மற்றும் சாமியார்கள் அத்தனை பேரும் வசனங்களில் அடி வாங்குகிறார்கள்.

சாதிக்கொடுமையும், அதற்குக் காரணமானவர்கள் என்று கருதப்படுகிறவர்களும் சாட்டையடி வாங்குகிறார்கள். தமிழனைத் தட்டியெழுப்பும் வசனங்களைத் தீட்டிய மணிவண்ணனைப் பாராட்டியாக வேண்டும்.

வெற்றிக்கு இரண்டாவது காரணம்-

இரட்டை வேடங்களில் தோன்றும் சத்யராஜின் அலட்சியமான, அனாயாசமான, சமயங்களில் ஹாலிவுட் தரத்தில் பிரமிப்பூட்டும் நடிப்பு. சிரித்துக் கொண்டே வசனம் பேசுகிறார். சிகரெட்டைக் கவ்விக் கொண்டு ஏற்ற இறக்கங்களுடன் பேசுகிறார்.

நடிப்புப் பயிற்சி மாணவர்கள் சத்யராஜின் டயலாக் டெலிவரியைப் பார்த்து மாடுலேஷன் கற்றுக் கொள்ள வேண்டும்.

கதைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

தெருவில் சிதறு தேங்காய் பொறுக்கும் அமாவாசை தன் அசாத்திய நாவன்மையால் நாகராஜ சோழன் என்ற பெயரில் எம்.எல்.ஏ ஆகி, பெண்களை ஏமாற்றி, ஊரை ஏமாற்றி, சாதிக்கலவரத்தை உண்டு பண்ணி, உல்லாச வாழ்க்கையில் திளைக்கிறான்.

உலகத்துக்குத் தெரியாத அவனுடைய மகன் தலையெடுத்து அவனைப் பலி வாங்குகிறான்.

இது அரசியல் படமல்ல.

வில்லன் ஒரு எம்.எல்.ஏ. அவ்வளவு தான்.

அப்பா எம்.எல்.ஏ. பிள்ளை சி.ஆர்.பி.எஃப். ஜவான். இருவருமே சத்யராஜ்.

வெள்ளைத் தலையும், கருப்புக் கண்ணாடியுமாக கழுத்தில் மாலை போல துண்டு போட்டுக் கொண்டு, வளர்த்தியான, வாட்டசாட்டமான நாகராஜசோழனாக வரும் சத்யராஜைப் பார்க்கும்போது, இன்றையத் தமிழ்த் திரையில் இத்தனை கம்பீரம் எந்த ஹீரோவிடம் இருக்கிறது என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.

ஆமாம் சாமி போடும் இயக்குநர் மணிவண்ணன் அபாரமாக ‘அண்டர் ப்ளே’ பண்ணி அசத்துகிறார்.

நாகராஜ சோழனின் நல்ல மனைவியாக வருகிறார் சுஜாதா.

“என் வயிற்றில் ஒரு குழந்தை பிறந்து, அது உங்களை அப்பா என்று கூப்பிட அனுமதிக்க மாட்டேன்” என்று சவால் விடும் பாத்திரம் ஒரு மாறுபட்ட படைப்பு.

முன்னறிவிப்பில்லாத வில்லனாக அறிமுகமான மொட்டைத்தலை முத்துக்குமார் அதில் அமைதியான கொலையாளியாக வந்து ரஞ்சிதாவை கோழியை விரட்டுகிற மாதிரி விரட்டிப் பிடிக்கிறார்.

மனைவியைக் கொல்லச் சொல்லும் சத்யராஜிடம் இவர் “அக்காளையா கொல்லச் சொல்றீங்க?” என்று அப்பாவித்தனமாகக் கேட்பதும், அதற்கு சத்யராஜ் “ஒங்கொக்காளையா கொல்லச் சொல்றேன்” என்பதும் அட்டூழியத்தின் உச்சக்கட்டமாகும்.

கோஷ்டி நடனங்களில் ஆடையலங்காரமும், மூவ்மெண்ட்சும் கீழ்த்தரச் சுவையில் அமைந்தள்ளன. பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை.

மணிவண்ணன்- சத்யராஜ் ஜோடிக்கு ‘முதல் வசந்தம்’ போல இது இரண்டாவது வசந்தம்.”

– சவீதா

– புதிய பார்வை- ஏப்ரல்- 1994 இதழ்

You might also like