மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்ட கமல்!

சிவாஜி ராவ் கெய்க்வாட், ரஜினிகாந்த் என பெயர் மாறி தமிழ் சினிமாவில் அறிமுகமான படம்,
’அபூர்வ ராகங்கள்’. இது சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். இன்று உச்ச நட்சத்திரம் என போற்றப்படும் அவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் கே.பாலசந்தர் என்பதும் ஊரறிந்த கதை.

பாலசந்தர் இயக்கியவற்றில் டாப் லிஸ்ட்-டில் இருக்கும் இந்தப் படத்தில், கமல்ஹாசன், மேஜர் சுந்தரராஜன், ஸ்ரீவித்யா, ஜெயசுதா, நாகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு பி.எஸ்.லோகநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’, ’அதிசய ராகம் ஆனந்த ராகம்’, ‘கேள்வியின் நாயகனே’, ‘கைகொட்டி சிரிப்பார்கள்’ ஆகிய பாடல்கள் மெகா ஹிட்டாயின. இப்போதும் பலருடைய பேவரிட்களில் இந்தப் பாடல்களும் இருக்கும்.

’ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலைப் பாடிய வாணி ஜெயராமுக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்த படம் இது. சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு ஆகியவற்றுக்கும் 1975 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை இந்தப் படம் பெற்றது.

இந்தப் படத்தை தெலுங்கில் ’தூர்ப்பு பதமரா’ என்ற பெயரில் இயக்கினார் தாசரி நாராயண ராவ். அங்கும் வரவேற்பைப் பெற்றது.

தமிழில் நடித்த கேரக்டரிலேயே தெலுங்கிலும் நடித்தார் ஸ்ரீவித்யா. இந்தப் படத்தை இந்தியில் கே.பாலசந்தரே, ’ஏக் நய் பஹேலி’ (ஒரு புதிய புதிர்) என்ற பெயரில் இயக்கினார். அதில் ராஜ்கபூர், ஹேமமாலினி, கமல்ஹாசன், பத்மினி கோலாபூர், சுரேஷ் ஓபராய் உட்பட பலர் நடித்தனர்.

வழக்கம் போல விவகாரமான கதையை கையில் எடுக்கும் கே.பாலசந்தர் இந்தப் படத்திலும் அதே போன்ற கதையைதான் கையில் எடுத்தார்.

இளம் பெண்ணை அப்பாவும் வயதானப் பெண்மணியை மகன் காதலிப்பதுமான கதை. பெண்கள் இருவரும் அம்மா, மகள் என்பது இன்னொரு விவகாரம். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியிலும் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தின் கதை திருடப்பட்டது என்று அப்போது வழக்குத் தொடரப்பட்டது.

என்.ஆர்.தாசன் என்ற எழுத்தாளர், கண்ணதாசன் இதழில் தான் எழுதிய ’வெறும் மண்’ என்ற கதையை திருடி, கே.பாலசந்தர் படமாக இயக்கியுள்ளார் என்று வழக்குத் தொடர்ந்தார்.

விசாரித்த நீதிமன்றம் அது உண்மைதான் என்று அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. கே.பாலசந்தருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது அப்போது.

இந்தப் படத்தில் மிருதங்கம் வாசிப்பவராக நடிப்பார் நாயகன் கமல்ஹாசன். அந்தக் காட்சிகள், தத்ரூபமாக வரவேண்டும் என்பதாக ஏழு மாதம் மிருதங்கம் பயிற்சிப் பெற்றுள்ளார் கமல்.

முழுவதுமாக அதுபற்றி தெரிந்துகொண்டு படத்தில் நடித்ததால்தான், அந்தக் காட்சி சிறப்பாக அமைந்ததாகச் சொல்கிறார்கள்.

  • அலாவுதீன்
You might also like