இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்று ஒரு மோசமான நாள். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்திலேயே, அதன் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் அணியிடம் அடி வாங்கியிருக்கிறது இந்தியா.
அதுவும் சாதாரண அடியில்லை 10 விக்கெட் வித்தியாசத்தில் பலமான அடி.
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை பாகிஸ்தானிடம் இந்தியா இப்படி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதில்லை.
இந்தத் தோல்வியின் மூலம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானிடம் தொடர்ந்து 12 போட்டிகளில் ஜெயித்த இந்தியாவின் வெற்றிப் பயணமும் முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்தியாவின் இந்த தோல்விக்கு என்ன காரணம் என்று பார்ப்போம்:
முதல் காரணமாக இந்தப் போட்டியில் ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு அதிகமாக இருந்தது. சர்வதேச அரங்கில் தங்களை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது பாகிஸ்தான்.
சர்வதேச அரங்கில் அந்த அணி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் அங்கு சுற்றுப்பயணம் செய்யச் சென்ற நியூஸிலாந்து அணி, ஒரு போட்டியில் கூட ஆடாமல் தங்கள் நாட்டுக்கு திரும்பிச் சென்றது.
பாகிஸ்தானில் தங்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாததாலேயே தாங்கள் திரும்பிச் சென்றதாக காரணம் கூறியது அந்த அணியின் நிர்வாகம்.
இதைக் கெட்டியாக பிடித்துக்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகமும், தங்களின் பாகிஸ்தான் பயணத்தையும் அதே காரணத்தைச் சொல்லி தட்டிக் கழித்தது.
இதனால் சர்வதேச அரங்கில் வீறுகொண்டு எழவேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு இருந்தது. அந்த வைராக்கியம்தான் நேற்று மைதானத்தில் பேசியது.
இரண்டாவது காரணம் ஹர்திக் பாண்டியா. இந்திய அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் என்று ஹர்திக் பாண்டியாவைச் சொல்கிறார்கள். ஆனால் அவர் பந்துவீசி பல காலம் ஆகிறது.
பேட்டிங்கிலும் அத்தனை வலு இல்லை. இருந்தாலும் இதையெல்லாம் மீறி நேற்றைய ஆட்டத்தில் அவர் சேர்க்கப்பட்டார். முழு உடல்தகுதி இல்லாத அவர், பேட்டிங்கின்போதே தோளைப் பிடிக்கத் தொடங்கிவிட்டார். பீல்டிங்கின்போது காயத்தால் மைதானத்துக்கே அவர் வராமல் போக, இருக்கும் 5 பந்துவீச்சாளர்களை வைத்து ஒப்பேற்ற வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது.
அடுத்த ஆட்டத்திலாவது ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ஷர்துல் தாக்குரையோ அல்லது அஸ்வினையோ சேர்த்தால் நன்றாக இருக்கும்.
மூன்றாவது காரணம் டாஸ். துபாய் மைதானத்தில் பனி காரணமாக எப்போதும் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கே வாய்ப்பு அதிகம். ஐபிஎல் போட்டிகளின்போதே நாம் இதைப் பார்த்திருக்கிறோம்.
இந்தச் சூழலில் துரதிருஷ்டவசமாக டாஸில் தோற்க இந்தியா முதலாவதாக பேட்டிங் செய்ய வேண்டி வந்தது. இதைத் தொடர்ந்து ஆடவந்த பாகிஸ்தான், இந்தியாவின் ஸ்கோரை எளிதில் எட்டிவிட்டது.
கிரிக்கெட் உலகில் உச்சாணிக் கொம்பில் இருக்கும் இந்திய வீரர்கள், நேற்று அதீத தன்னம்பிக்கையுடன் ஆட வந்தது தோல்விக்கு 4-வது காரணமாக கூறப்படுகிறது.
இதுவரை உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தாங்கள் தோற்றதே இல்லை என்பதால், இம்முறை தோற்க மாட்டோம் என அலட்சியமாக இருந்துள்ளனர். இது இந்தியாவின் பேட்டிங் வரிசையை பாதித்தது. அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள் 31 ரன்களில் 3 விக்கெட்களை காவு வாங்கிவிட்டது.
கிரிக்கெட் போட்டிகளில் அனுபவம் வாய்ந்த அஸ்வினை களம் இறக்காமல், வருண் சக்ரவர்த்தியை நம்பி களம் இறங்கியது இந்தியாவின் தோல்விக்கான ஐந்தாவது காரணம்.
நேற்றைய ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் விராட் கோலி, “இந்தப் போட்டி ஒன்றும் உலகக் கோப்பையின் கடைசி போட்டி அல்ல. மீண்டு வருவோம்” என்று கூறியுள்ளார்.
நமக்கும் அதுதான் வேண்டும். ஆஸ்திரேலிய தொடரில் ஜெயித்ததைப் போல, முதல் போட்டியில் தோற்றாலும் அதிலிருந்து மீண்டு தொடரை வென்று வர வேண்டும். நம் வீரர்கள் மீண்டும் இதை செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
-பிரணதி