வெட்கப்பட வைக்க பாரதிராஜா செய்த டெக்னிக்!

பாரதிராஜா இயக்கிய சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ’மண்வாசனை’.

மதுரையில் வளையல் கடையில் இருந்த பாண்டியனை ஹீரோவாகவும் கேரளாவைச் சேர்ந்த ஆஷா கேளுண்ணியை ஹீரோயினாகவும் இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார் பாரதிராஜா. ஆஷாவுக்கு ரேவதி என்று தனது ’ஆர்’ வரிசையில் பெயர் மாற்றியவர் அவர்தான்.

1983 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜயன், காந்திமதி, நிழல்கள் ரவி, வினு சக்கரவர்த்தி உட்பட பலர் நடித்திருந்தனர்.

வழக்கம்போல அழகான கிராமத்தை அப்படியே காண்பித்திருப்பார் பாரதிராஜா. கலைமணி கதை, வசனம் எழுத, பி.கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இளையராஜா இசையில் பாடல்கள் செம ஹிட். ‘பொத்திவச்ச மல்லிகை மொட்டு, ‘ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்..’, ’அரிசி குத்தும் அக்கா மகளே..’ பாடல்கள் அப்போது அனைத்துத் தெருக்களிலும் அசராமல் ஒலித்த பாடல்கள். இப்போது கேட்டாலும் தனி ரசனைதான்.

பாண்டியனை ஹீரோவாக்கியதற்கு பாரதிராஜா யூனிட்டிலேயே கடும் எதிர்ப்பு. அவரை வேண்டாம் என்றார்கள். வேறு ஹீரோவை தேடலாம் என்றார்கள்.

ஆனால், பாரதிராஜா, என் தேர்வில் நம்பிக்கை இல்லையா? என்று கோபமாகக் கேட்டார். பிறகு எதிர்ப்பு அடங்கியது. அவரையே நடிக்க வைத்தார்கள். ஷூட்டிங் தொடர்ந்து நடந்தபோது அவர் நடிப்பை படக்குழு ஏற்றுக்கொண்டது.

இந்தப் படத்தில் காந்திமதி, வெள்ளை சேலை கட்டியபடி, கையில் கம்பு ஊன்றி வயதான வேடத்தில் நடித்திருப்பார்.

’வாடிபட்டி தேடிபட்டி வடக்க பத்திக்குச்சாம் திரும்பிப் பார்த்த உசிலம்பட்டி திக்குன்னு பத்திக்குச்சாம்’, ’மத்தாளம் தேடுதாம் மாமரத்து மயிலு, மச்சானை தேடுதாம் பூமரத்து குயிலு’ – என்பது போன்ற ஏராளமான சொலவடைகளோடு மதுரை ஸ்லாங்கில் அசத்தியிருப்பார்.

நடிகர் விஜயனுக்கு பின்னணி குரல் பாரதிராஜா. அப்போது படம் பார்க்கும்போது அது விஜயன் குரலாகவே தெரிந்திருக்கும்.

பாரதிராஜாவின் குரல் பழக்கப்பட்டப் பிறகு இப்போது பார்த்தால், அந்தக் குரல் தனியாகத் தெரியும்.

வழக்கமாக கோபமான காட்சிகளில் நடிப்பை வாங்குவதற்காக, பாரதிராஜா அடித்துவிடுவார் என்று சொல்வதுண்டு.

இந்தப் படத்திலும் கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணீர் வர வேண்டும் என்பதற்காக ரேவதியை அடித்ததாகக் கூறுவார்கள்.

ஆனால், இந்தப் படத்தில் பொத்திவச்ச மல்லிகை மொட்டு பாடல் காட்சியின்போது, ரேவதி வெட்கப்படுவது போல படமாக்க வேண்டும். பலமுறை படமாக்கியும் சரியாக வரவில்லை.

இவ்வளவுக்கும் ரேவதி பரதநாட்டியம் தெரிந்தவர். பொதுவாகவே நாட்டியம் தெரிந்தவர்களுக்கு பாவனைகள் அத்துப்படியாக இருக்கும்.

ஆனால், அந்தக் காட்சியில் வெட்கப்பட வரவில்லை ரேவதிக்கு.

இதனால் படக் குழுவை சேர்ந்த ஒருவரிடம் ரேவதிக்கு தெரியாமல் ஒரு புல்லை எடுத்து அவர் இடுப்பில் உரசுமாறு பாரதிராஜா ஐடியா கொடுக்க, அதை செய்ததும் இயல்பாக ரேவதிக்கு வந்தது வெட்கம்.

அதை அப்படியே காட்சிப்படுத்தினாராம் பாரதிராஜா.

  • அலாவுதீன்
You might also like