பஞ்சாப் காங்கிரசை உடைக்கும் அமரீந்தர் சிங்!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபடுவது உறுதியாகி விட்டது. தனிக்கட்சி தொடங்கப் போவதாக முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

சோனியா காந்தியின் கையில் காங்கிரஸ் வந்தபின், பல மாநிலங்களில் அந்தக் கட்சி நொறுங்கி வருகிறது.

சோனியாவுக்கு உடல் நலம் சரி இல்லை.

ராகுல் காந்தி, பகுதி நேர வேலையாகவே கட்சியில் செயல்படுகிறார். பிரியங்கா, உத்தரப்பிரதேச மாநிலத்துக்குள் தன்னை சுருக்கி கொண்டார். மாநில காங்கிரசில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரியவில்லை.

மம்தா பானர்ஜி காங்கிரசில் இருந்து வெளியேறியபோதே, சோனியா காந்தி, சுதாரித்திருக்க வேண்டும். மம்தாவை சமாதானம் செய்திருக்க வேண்டும்.

அலட்சியாக இருந்து விட்டார். விளைவு? மே.வங்கத்தில் காங்கிரஸ் என்ற கட்சி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட கிடையாது.

அடுத்து ஆந்திராவுக்கு வருவோம்.

சந்திரபாபு நாயுடு, ஆந்திராவை தனது கோட்டையாக மாற்றி இருந்தவர். அதனைத் தகர்த்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.

மாநிலம் முழுக்க பாதயாத்திரை நடத்தி காங்கிரசை உயிர்ப்பிக்கச் செய்தார். புது ரத்தம் பாய்ச்சினார். மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வந்தார்.

ராஜசேகர் மறைவுக்கு பின் அவர் மகன் ஜெகன் மோகனை, சோனியா அங்கீகாரம் செய்திருக்க வேண்டும். உதாசீனப்படுத்தினார்.

ஜெகன் மோகன், தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட்டார். ஆந்திராவிலும் இன்றைக்கு காங்கிரஸ் காலி.

பக்கத்து மாநிலமான புதுச்சேரியிலும் அதே கதை.

6 மாதங்களுக்கு முன் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ், இப்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க. ஆகிய கட்சிகளுக்குப் பிறகு நான்காவது இடத்தில் உள்ளது. காரணம் – ரங்கசாமி.

புதுச்சேரியில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ரங்கசாமியை ஒதுக்கி விட்டு, சிறுபான்மை தலைவர்களுக்கு காங்கிரஸ் முக்கியத்தும் அளித்ததால் அங்கும் காங்கிரஸ் பஞ்சராகி விட்டது.

அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் இருந்தது.

முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு போட்டியாக கிரிக்கெட் விரர் சித்துவை வளர்த்தது காங்கிரஸ் மேலிடம். அவரை மாநில காங்கிரஸ் தலைவராகவும் நியமித்தது.

அமரீந்தருக்கு குடைச்சல் கொடுத்து கொண்டே இருந்தார் சித்து.

வெறுத்துப்போன அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து விட்டார்.

மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன், ரங்கசாமி போல் அமரீந்தர் சிங் சாதிப்பாரா? அல்லது ஜி.கே.வாசன் போல் சரிவரா? என்பது தெரியவில்லை.

ஆனால் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டார்.

பஞ்சாபில் காங்கிரசுக்கு நிகரான பலத்தோடு ஆம் ஆத்மி கட்சி உள்ளது. அமரீந்தர் முடிவால் காங்கிரசின் பலம் சரியும்.

பா.ஜ.க. மற்றும் தனிக் குழுக்களாக செயல்படும் சீக்கியக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதாக அமரீந்தர் கூறியுள்ளதால், அவர் தலைமையில் பலமான அணி உருவாகும்.

ஆம் ஆத்மி, அமரீந்தர் அணி மற்றும் அகாலிதளம் இடையே தான் நிஜமான போட்டியிருக்கும்.

காங்கிரஸ் களத்திலேயே இருக்காது என்பதே கள நிலவரம்.

ஆக, மேற்குவங்கம், ஆந்திரா, புதுச்சேரி வரிசையில் பஞ்சாப்பும் சேரப்போகிறது.

சோனியா என்ன செய்யப்போகிறார்?

-பி.எம்.எம்.

You might also like