கிளைமாக்ஸ் காட்சிக்காக பாரதிராஜாவிடம் சென்ற பாக்யராஜ்!

திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் கே.பாக்யராஜின் படங்களில் முக்கியமானது ’அந்த 7
நாட்கள்’.

இதில் மலையாள வாடையுடனும் ஒரு கையில் குடை, தோளில் ஆர்மோனியப் பெட்டியுடனும் தமிழ் கலந்த மலையாளம் பேசிக்கொண்டு வரும் அந்த ‘பாலக்காட்டு மாதவன்’ கேரக்டரை எளிதில் மறந்துவிட முடியாது.

அந்த கேரக்டர் உருவாக்கத்திற்காகவே கே.பாக்யராஜை எவ்வளவு வேண்டுமானாலும் புகழலாம்.

ராஜேஷ், அம்பிகா, கல்லாபெட்டி சிங்காரம், மாஸ்டர் காஜா ஷெரீப் உட்பட பலர் நடித்திருந்த
இந்தப் படத்துக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.

அவர் இசையில் ’கவிதை அரங்கேறும் நேரம்’, ’எண்ணி இருந்தது ஈடேற’ உட்பட அனைத்துப் பாடல்கள் சூப்பர் ஹிட். 1981 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தின் கதையை, நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் இருந்து எடுத்ததாகச் சொல்வார்கள்.

நடிகர் சந்திரபாபு திருமணத்துக்குப் பிறகு தன்னிடம் சரியாக பேசாத மனைவியிடம் என்னவென்று விசாரிக்க, தனக்கு ஒரு காதலன் இருப்பதாகவும் தனது விருப்பமில்லாமல் இந்த திருமணம் நடந்ததாகவும் அவர் கூறியதை அடுத்து, மனைவியை அவர் காதலருடன் சேர்த்து வைத்ததாகச் சொல்வார்கள் சினிமாவில்.

இந்த லைனை வைத்துக்கொண்டு கே.பாக்யராஜ் உருவாக்கிய கதைதான் அந்த 7 நாட்கள்.

பிளாஷ்பேக் உத்தியில் செல்லும் இந்தக் கதையில், கட்டாயத்தின் பேரில் டாக்டர் ராஜேஷுக்கு
திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருப்பார் அம்பிகா.

ஒரு கட்டத்தில் அவள் தற்கொலைக்கு முயல, அவளைக் காப்பாற்றும் ராஜேஷிடம் தனது காதல் கதையைச் சொல்வார் அம்பிகா. பிறகு அவர் காதலரிடம் அம்பிகாவை சேர்த்தாரா, அதை காதலரான கே.பாக்யராஜ் ஏற்றுக்கொண்டாரா என்பதுதான் படத்தின் கதை.

‘எண்ட காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரும், ஆனா, உங்க மனைவி எனக்கு
காதலியாயிட்டு வராது’ என்பது போன்ற பல வசனங்கள் அப்போது பிரபலம்.

படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதன் திரைக்கதையில் ஏராளமான சுவாரஸ்யங்களை வைத்திருப்பார் கே.பாக்யராஜ், அதுதான் படத்துக்கு பலமே.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அம்பிகா அழும் காட்சியை படமாக்க வேண்டும். ஒரு
கட்டத்தில் பாக்யராஜுக்கு தயக்கம் வந்துவிட்டது. அந்தக் காட்சியை தன்னால் சிறப்பாக எடுக்க
முடியுமா? என்று.

இதனால், பாரதிராஜாவிடம் சென்று, “இந்த கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் நீங்க எடுத்துத் தரணும்” என்றார் பாக்யராஜ்.

அதற்கு அவர், “படத்தின் கதையும் திரைக்கதையும் சூப்பரா இருக்கு. படம் கண்டிப்பா ஹிட் ஆகும். அந்த ஒரு காட்சியை மட்டும் நான் எடுத்துத் தந்தா, பாரதிராஜாவாலதான் படம் ஹிட்டாச்சுன்னு வெளியில பேச ஆரம்பிச்சுடுவாங்க.

அதனால வேண்டாம். உன்னாலயே சிறப்பாக எடுக்க முடியும்” என்று தைரியம் சொல்லி அனுப்பி இருக்கிறார் பாரதிராஜா.

பிறகுதான் அந்தக் காட்சியை அழகாக எடுத்திருக்கிறார் கே.பாக்யராஜ்.

அந்த கிளைமாக்ஸ் காட்சி இப்போது பிற்போக்குத்தனமாக தெரிந்தாலும் அப்போது அதிகமாக ரசிக்கப்பட்டது.

– அலாவுதீன்

You might also like