விமர்சனத்தை மாற்ற ‘ரோடு’ மூவி எடுத்த இயக்குநர்!

தமிழில் வெளியான பல சூப்பர் ஹிட் புராணப் படங்களை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். புராணக்
கதைகளை எல்லோராலும் இயக்கி விட முடியாது. ஆழ்ந்த ஆன்மீக நாட்டம் கொண்டவர்களால் மட்டுமே அதை உணர்வுபூர்வமாக இயக்க முடியும் என்பார்கள்.

ஏ.பி.நாகராஜன் அதிக ஆன்மிக நாட்டம் கொண்டவர் என்பதால், அவர் அதிகமான புராணப் படங்களை இயக்கியதாகச் சொல்வார்கள்.

சிவாஜி, சாவித்ரி, முத்துராமன், நாகேஷ் நடித்து சூப்பர் ஹிட்டான ‘திருவிளையாடல்’, சிவாஜி,
ஜெமினி, சாவித்ரி, பத்மினி நடித்து ஹிட்டான ‘சரஸ்வதி சபதம்’, சிவாஜி, ஜெமினி, சிவகுமார்
நடித்த ‘கந்தன் கருணை’,

சிவாஜி, பத்மினி நடித்த ‘திருமால் பெருமை’, சிவாஜி, சாவித்ரி, பத்மினி நடித்த ‘திருவருட்செல்வர்’, சீர்காழி கோவிந்தராஜன் நடித்த ‘அகத்தியர்’, ‘காரைக்கால் அம்மையார்’, ‘ஸ்ரீகிருஷ்ண லீலை’ உட்பட பல புராணப் படங்களை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன்.

அதே நேரம், சிவாஜி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’, வடிவுக்கு வளைகாப்பு, குலமகள் ராதை, ஜெமினி நடித்த சீதா, சிவாஜி, ஜெயலலிதா நடித்த குருதட்சணை, எம்.ஜி.ஆர் நடித்த ‘நவரத்தினம்’ உட்பட சில சமூகப் படங்களையும் இயக்கி இருக்கிறார்.

’திருவிளையாடல்’ படம் சூப்பர் ஹிட்டான பிறகு தொடர்ந்து புராணப் படங்களை இயக்கி வந்தார் ஏ.பி.நாகராஜன். அப்போது, அவரால் பக்திப் படங்களை மட்டும்தான் இயக்க முடியும் என்ற பேச்சு சினிமா துறையில் பேசப்பட்டு வந்தது.

அதை உடைக்க வேண்டும் என்பதற்காக, புதிய நடிகர்களை வைத்து அவர் இயக்கிய படம், ’திருமலை தென்குமரி’.

அந்தக் காலத்தில் வெளியான ஒரு சில, ரோடு மூவிகளில் இதுவும் ஒன்று. ஒரு குடியிருப்பில்
வசிக்கும் வெவ்வேறு வசதி வாய்ப்பு மற்றும் வயதைக் கொண்ட குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து
கோயில்களுக்கு டூர் செல்ல முடிவு செய்கிறார்கள்.

அதன்படி திருப்பதி தொடங்கி, கன்னியாகுமாரி வரை உள்ள ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா கோயில்களுக்கு செல்கிறார்கள். அப்போது நடக்கும் சம்பவங்கள்தான் கதை.

அமெரிக்காவில் வெளியான ’இஃப் இட்ஸ் டியூஸ்டே, திஸ் மஸ்ட் பி பெல்ஜியம்’ என்ற படத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்ட படம் இது.

சிவகுமார், குமாரி பத்மினி, சீர்காழி கோவிந்தராஜன், சுருளிராஜன், டைப்பிஸ்ட் கோபு
உட்பட பலர் நடித்திருந்தார்கள். குன்னகுடி வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார்.

1970 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் கமர்சியலாக சூப்பர் ஹிட்டானது. அந்த ஆண்டின்,
சிறந்த இசை அமைப்பாளர் குன்னகுடி வைத்தியநாதன், சிறந்த பின்னணிப் பாடகர் சீர்காழி
கோவிந்தராஜன் ஆகியோருக்கு மாநில அரசின் திரைப்பட விருதுகளை பெற்று தந்த படம் இது. இதற்கு பிறகு இயக்குநர் ஏ.பி.நாகராஜன் மீதான அந்த விமர்சனம் மாறியது.

– அலாவுதீன்

You might also like