சிரஞ்சீவியை வீழ்த்திய ரஜினி நண்பர்
தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தலைவர் தேர்தலில் பிரகாஷ்ராஜை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் விஷ்ணு மஞ்சு.
இவர் ரஜினிகாந்தின் நண்பர் மோகன்பாபுவின் மகன். வழக்கமாக தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் பெரிய அளவில் பரபரப்பு ஏதும் இருக்காது.
ஆனால் இந்த முறை, தமிழ் நடிகர் சங்கத் தேர்தல் போல் அங்கும் அரசியல் நுழைந்துள்ளது.
யார் பெரியவன் என சிரஞ்சீவிக்கும், மோகன்பாபுவுக்கும் இடையே உருவான ஈகோ தான் அரசியலுக்கான காரணம்.
மோகன்பாபு மூத்த நடிகர் என்றாலும் சிரஞ்சீவி குடும்பத்துக்கு இருப்பது போல் ரசிகர் கூட்டம் கிடையாது. என்.டி.ஆர். வரிசையில் இடம் பிடித்தவர் சிரஞ்சீவி.
அவர் தம்பி பவன் கல்யாண், நடிகராக இருப்பதோடு ஜனசேனா என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். இன்னொரு தம்பி நாகபாபுவும் நடிகர். மகன் ராம் சரண், நம்ம ஊர் விஜய் போல் புகழ் பெற்றவர்.
தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி குடும்பத்தை ‘மெஹா சினிமா குடும்பம்’ என்றே வர்ணிக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜை தனது சார்பில் நிறுத்தினார் சிரஞ்சீவி.
இதற்கு முன் தலைவராக இருந்த நரேஷ், மோகன்பாபு மகன் விஷ்ணு மஞ்சுவை நிறுத்தினார்.
ஆரம்பத்தில் அனல் ஏதும் பறக்கவில்லை.
தனது மகன் தேர்தலில் நிற்பதில் மோகன்பாபுவுக்கு ஆர்வம் இல்லை. சிரஞ்சீவியின் நாக்கு, தேர்தல் போக்கையும், அதன் பின் வாக்கையும் தலைகீழாக மாற்றியது.
மோகன்பாபுவுக்கு போன் செய்த சிரஞ்சீவி, ‘’நான் பிரகாஷ்ராஜை நிறுத்தியுள்ளேன். எனவே அவருக்கு ஆதரவாக உங்கள் மகனை வாபஸ் பெறச்சொல்லுங்கள்’’ என கூறியுள்ளார்.
ரசிகர் பட்டாளம் திரளாக இல்லாவிட்டாலும், மோகன்பாபு கோபக்காரர். ஏனென்றால் அவர் என்.டி.ஆர். காலத்து ஆள். சிரஞ்சீவி, தன்னை மிரட்டுவதாக உணர்ந்தார்.
சிரஞ்சீவியின் போனுக்கு பிறகு மோகன்பாபு விசுவரூபம் எடுத்தார். பிரகாஷ்ராஜை தோற்கடித்து, அதன் மூலம் சிரஞ்சீவிக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்தார். மகனை உசுப்பி விட்டார்.
அதன் பின்னரே சட்டசபைத் தேர்தல் போல் நடிகர் சங்கத் தேர்தல் களம் உஷ்ணமானது. டி.வி.க்களில் காரசார விவாதங்கள் நடந்தன. உச்சக்கட்டமாக, உள்ளூர்காரன்–வெளியூர்காரன் என்ற பிரச்சாரம் மேலோங்கியது.
‘’நான் இந்த மண்ணின் மைந்தன் – எப்போதும் உங்களுடன் இருப்பவன் – வெளி ஆட்களை புறக்கணியுங்கள்’’ என விஷ்ணு, தனது பிரச்சாரத்தில் அனல் கக்க – அவருக்கு ஆதரவு பெருகியது.
‘மண்ணின் மைந்தன்’ பிரச்சாரம் கை கொடுத்தது.
விஷ்ணு மஞ்சு தலைவர் தேர்தலில் வென்றார். பிரகாஷ்ராஜ் தோற்றுப்போனார். மொத்தமுள்ள 833 வாக்குகளில் 665 வாக்குகள் பதிவானது. விஷ்ணுவுக்கு 381 வாக்குகள் கிடைத்தன. பிரகாஷ்ராஜ் 270 வாக்குகள் வாங்கினார்.
தன்னை வெளியூர்காரன் என பிரச்சாரம் செய்ததால், தேர்தலில் தோற்ற கையோடு, தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்து விட்டார், பிரகாஷ்ராஜ்.
தேர்தலில் பிரகாஷ்ராஜ் ஆதரவாளர்கள் 11 பேர் செயற்குழு உள்ளிட்ட பொறுப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்கள், தங்கள் பொறுப்புகளை விட்டு விலகி உள்ளனர்.
நட்சத்திர மோதலால், தெலுங்கு சினிமாவில் அக்னி நட்சத்திரம் வீசும் நிலையில், ‘வாங்க பேசி தீர்த்துக் கொள்ளலாம்’ என விஷ்ணு மஞ்சு தரப்பு சமாதானத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
– பி.எம்.எம்.