காஷ்மீர் பயங்கரவாத சம்பவங்களைத் தடுக்க புது திட்டம்!

ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இதை ஒடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

இது தொடர்பாக விளக்கமிளத்துள்ள பாதுகாப்புப் படையினர், “ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் ஆய்வு செய்தார். பல்வேறு புலனாய்வு அமைப்பின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தில் புதிய யுக்தி வகுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரை அடிப்படையாக வைத்து, நாடு முழுவதும் பயங்கரவாதிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 28 மத்திய புலனாய்வு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும். தற்போது முதல் கட்டமாக, காஷ்மீரைத் தவிர, டில்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, இந்த அமைப்புகள், அந்தந்த மாநில காவல்துறையினருடன் இணைந்து, உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும். அதனடிப்படையில் பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர். அடுத்த சில மாதங்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும்” எனக் கூறியுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் அவந்திபுரா பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

You might also like