பெரியாரைக் கொண்டாடிய எம்.ஜி.ஆர்.!

தந்தை பெரியார் நூற்றாண்டு விழா: 

தந்தை பெரியாருக்காக, எம்.ஜி.ஆர் கொண்டு வந்த நூற்றாண்டு விழாத் திட்டம், 1978 செப்டம்பர் முதல் 1979 செப்டம்பர் வரையிலான கால இடைவெளிகளில், பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது.

தமிழ் நாட்டிலுள்ள நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் இவ்விழா ஓராண்டுக் காலத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது தந்தை பெரியாரின் நினைவைப் போற்றும் விதமாக புதிய புதிய திட்டங்களை எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.

கோவை மாவட்டத்தோடு சேர்ந்ததாகவே ஈரோடு இருந்து வந்தது. நிர்வாக வசதிக்காகவும் தந்தை பெரியார் நினைவைப் போற்றுவதற்காகவும் தனது ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தை எம்.ஜி.ஆர் இரண்டாகப் பகுத்தார்.

பெரியார் பிறந்த ஈரோட்டைத் தனிமாவட்டமாக உருவாக்கி அதற்குப் ‘பெரியார் மாவட்டம்’ என்று பெயர் சூட்டினார்.

சாதிப் பிரிவினைகள் தலைவிரித்தாடிய தமிழகத்தில் எம்.ஜி.ஆர் அரசு செய்த புரட்சிகளில் ஒன்றாக வீதிகளிலும் சாலைகளிலும் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டதைக் கருதலாம்.

இந்தப் புரட்சித் திட்டத்தையும் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின் போதே எம்.ஜி.ஆர் அறிவித்தார். இத்திட்டம் சென்னையில் மட்டுமே நடைமுறைக்கு வந்ததுடன் ஓரளவுக்கு வெற்றி கண்டது.

தமிழ் எழுத்துக்களின் கட்டமைப்பில் பெரியார் கொண்டுவந்து வடிவச் சீர்திருத்தமும் நூற்றாண்டு விழாவின்போது நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வீதியான கோர்ட் வீதிக்குப் ‘பெரியார் வீதி’ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

பெரியாரின் உயரிய பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தமிழகமெங்கும் கொண்டு சேர்ப்பதற்காக ஒவ்வொரு மாவட்டங்களின் முக்கியப் பகுதிகளிலும் நினைவுத் தூண்கள் எழுப்பப்பட்டு அவற்றில் பெரியாரின் உயரிய வாசகங்கள் பொறிக்கப்பட்டன.

1950-ஆம் ஆண்டில் ‘பொன்மொழிகள்’ என்ற தந்தை பெரியாரின் புத்தகத்தின் மீதான தடையை எம்.ஜி.ஆர் நீக்கினார்.

‘பெரியாரின் புரட்சி மொழிகள்’ என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்ட அத்தொகுப்பை மலிவுவிலைப் பிரதியாக வெளியிட்டார்.

தற்போதைய கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையிலிருந்து முசிறியை இணைக்கும் மிக நீண்ட பாலம் காவிரியின் குறுக்கே அமைந்துள்ளது. இந்தப் பாலத்துக்குப் பெரியாரின் பெயரைச் சூட்டி எம்.ஜி.ஆர் நடைமுறைப்படுத்தினார்.

பெரியார் நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகள் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை எம்.ஜி.ஆர் நடைமுறைப் படுத்தியது மட்டுமல்லாமல், அவ்விழாவைக் கொண்டாடுவதற்கான நூற்றாண்டு விழாவினை நிகழ்ச்சிகளையும் முறையே ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, புரட்சிச் சிந்தனைகள், ஒளிப்படங்கள் போன்றவற்றைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக ஒலி – ஒளி அரங்கக் காட்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

பெரியாரின் வாழ்க்கை வரலாறு குழந்தைகளும் புரிந்துகொள்ளும் விதத்தில் புத்தகமாக்கப்பட்டு மலிவு விலையில் விற்பனைக்கு வந்தது. ‘குழந்தைகளுக்கான பெரியாரின் வாழ்க்கைப்பட விளக்கம்’ என்னும் நூலும் தயாரிக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில், வைக்கம் என்ற இடத்தில் 1922 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தீண்டாமைக்கு எதிராகப் போராடிய வரலாற்றை நினைவு கூர்ந்து, எம்.ஜி.ஆர் கேரள அரசிடம் கேட்டு, அவ்விடத்தில் பெரியார் நினைவிடம் அமைப்பதற்கான நிலத்தை இலவசமாகப் பெற்றார்.

சென்னையிலுள்ள சீரணி அரங்கத்தில் பெரியாருக்கு, நினைவு விழா அரசு சார்பில் வெகுசிறப்பாக நடத்தப்பெற்றது.

இந்த விழாவின்போது பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குத் ‘தந்தை பெரியார் நெடுஞ்சாலை’ என்று மாற்றிப் பெயர் சூட்டிப் பகுத்தறிவுப் பகலவனுக்குத் தனது மரியாதையை எம்.ஜி.ஆர் வெளிக்காட்டினார்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள், தமிழகத்தில் ஏற்படுத்திய புரட்சியின் விளைவாக, அவரது வழியில் சமூகச் சீர்த்திருத்தப் பணிகளில் பலர் ஈடுபட்டனர்.

அவ்வாறு சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டுச் சிறப்பான பங்களிப்பைத் தந்த வாரிசுகளுக்குத் தலா ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி ஆணையிட்டார்.

பெரியார் சமூகத் தொண்டாற்றிய காலக்கட்டங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்து சமூகத் தொண்டாற்றிய வயது முதிர்ந்த சான்றோர்களின் நலனிலும் எம்.ஜி.ஆர் மிகுந்த அக்கறை கொண்டார்.

– புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தமிழ்த் தொண்டு நூலிலிருந்து…

You might also like