தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில் அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளும் இணைந்து கண்டனக் கூட்டறிக்கை வெளியிட்டன.
அந்த அறிக்கையில், “ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுத் தலங்களில் கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மசூதியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தமான தற்கொலைப்படை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் தொடர்ந்து எதிர்க்கும்; அது மிகப்பெரிய குற்றம்; அதை ஒருபோதும் ஏற்கமாட்டோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் இந்த அறிக்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்த இந்தியாவின் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை நீர்த்துப்போக செய்ய சிலர் முயற்சித்ததாகவும், எனினும் அந்த அறிக்கையில் தங்கள் கருத்து இடம்பெறவேண்டியதில், இந்தியா உறுதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.