சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

– சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டையில் இன்று கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், குமரி, திருநெல்வேலி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் இன்று கனமழை பெய்யும்.

வட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.

அக்டோபர் 13ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யும்.

அக்டோபர் 14-ல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்யும். ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 15ம் தேதி நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மதுரை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்தப் புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 15ல் ஆந்திரா – ஒடிசா இடையே கரையைக் கடக்கும்.

அக்டோபர் 11 முதல் 13ம் தேதி வரை அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும். மணிக்கு 40 – 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like