– மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா தகவல்
உலக குழந்தைகள் நிலை குறித்த யுனிசெப்பின் உலகளாவிய முதல் பதிப்பை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “கொரோனா பெருந்தொற்று குழந்தைகளின் மனநலனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக ‘யுனிசெப்’பின் அறிக்கையில் விவரிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக 2-வது அலை இந்த அனுபவத்தை நமக்கு வழங்கியது.
மனநலப் பிரச்சனைகளுக்கு பெற்றோர்கள், குடும்பத்தினர் ஆகியோருடன் ஆசிரியர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். குடும்பத்தினரும் ஆசிரியர்களும் பரஸ்பர நம்பிக்கையுடன் குழந்தைகளுக்கு வெளிப்படையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய யுனிசெப் அமைப்பின் இந்திய பிரதிநிதி டாக்டர் யாஸ்மின் அலி ஹக், “கொரோனா நெருக்கடியால், இந்தியாவில் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களில் 14 சதவீதம் அல்லது 7 பேர்களில் ஒருவர் அடிக்கடி மனச் சோர்வடைகிறார்கள் அல்லது தங்கள் விஷயங்களில் சிறிதும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்” எனக் கூறினார்.